சிங்கப்பூர் தமிழ்ப் பதிவர்கள் குழுமம் மற்றும் தமிழ்வெளி இணைந்து நடத்திய “மணற்கேணி – 2009” கருத்தாய்வுப் போட்டிக்கு, இலக்கியப் பிரிவில் ‘குறளில் மேலாண்மை’ எனும் தலைப்பில் அனுப்பிய கட்டுரை.
திருக்குறளில் பெருவாரியாகக் கூறப்பட்டுள்ள அசைக்க முடியாத சத்தியங்களைத்தான் குறளில் மேலாண்மை என்ற தலைப்பு சுட்டுகிறது. திருக்குறள் தனி மனிதனுக்குத் தேவையான கருத்துக்களை மட்டுமல்லாமல் நல்லதொரு சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்களையும் கூறுகிறது.
மனிதர்கள் பலர் இணைகையில்தான் சமுதாயம் தோன்றுகிறது. எனவே காலம் கடந்து இனம், மதம், மொழி ஆகியவற்றைக் கடந்து என்றென்றும் நிலையான தத்துவங்களைக் கூறுகின்ற உலகப் பொதுமறையாய் இன்றும் நின்று நிலவுகின்றது.
இன்றளவும் இதற்கு இணையான ஒரு நூல் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் சிறப்புகள் பல. குறுகிய வடிவம், பரந்து விரிந்துள்ள பொருள் அமைப்பு. இது படிக்குந்தோறும் புதுப்புது பொருளுணர்வு பெறக்கூடிய ஆழ்ந்த கருத்துகள் பொதிந்தது.
திருக்குறள் தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துகின்றது. இதில் ஒரு மனிதன் பிறந்தது முதல் மறைகின்ற வரை பின்பற்ற வேண்டிய கருத்துகளை வரிசையாகக் காண முடிகிறது.
ஒரு மனிதன் பெற்ற செல்வங்களுள் சிறந்தது நல்ல அறிவினைப் பெற்ற மக்களைப் பெறுவதே என்கிறார் வள்ளுவர். நன்மக்கள் எவ்வாறு அமைவர்? என்றால் வள்ளுவர் அவரவர் வினையால் வரும் என்கிறார். நாம் நல்லது செய்தால்தான் நமக்கு நலன் விளையும் செயல்களைச் செய்ய நல்ல பிள்ளைகள் தோன்றுவர். இன்றைய இளைய சமுதாயம் இதை நினைவில் கொள்ள வேண்டும்.
தன்னுடைய இளமைக் காலத்தில் தன்னிச்சை படியெல்லாம் நடப்பவர்கள் பிற்காலத்தில் தன்னிலை என்ன என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பொதுநல நோக்கு, தொலைநோக்குப் பார்வை இவை இரண்டும் மிகவும் முக்கியமானவை. இவற்றை ஒவ்வொரு மனிதனும் கொண்டிருக்க வேண்டும். கடமையை உணர்ந்து போற்றும் நல்ல குணம் உடையவர்கள் நல்லவை அனைத்தையுமே தங்களுக்குக் கடமை என்று கொள்வார்கள். இதனையே வள்ளுவர்
“கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவற்கு”
எனும் குறளில் எடுத்துக் கூறியுள்ளார்.
இன்றைய தேவை என்னவென்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
“வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்”
எனும் குறள் சொல்வதைப் போல கேடு வரும் முன்னரே உலகைக் காத்துக் கொள்ள வேண்டும்.
உலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. அதன் போக்கினை மாற்றி அழிவினைத் தடுக்கவேண்டும். இவ்வழிவிற்கு என்ன காரணம்? ஆராய்ந்துப் பார்த்தால் எந்த ஒரு பொருளையும் நாம் ஆக்கத்திற்கு நல்வழியில் பயன் படுத்த வேண்டும். அழிவிற்குப் பயன் படுத்தக் கூடாது. சிலர் மாறாகப் பயன் படுத்துவது தான் காரணம். விஞ்ஞானத்தின் விளைவால் இச்சமுதாய முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும் தொழில் நுட்பச் சாதனங்களை நாம் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த வேண்டும்.
தீக்குச்சியைக் கொண்டு விளக்கும் ஏற்றலாம், வீட்டையும் கொளுத்தலாம். விளக்கு ஏற்றுவதனால் ஒளி தோன்றி பயன் விளையும், வீட்டைக் கொளுத்துவதனால் என்ன பயன் விளையும்? சிந்தித்துப்பார்க்க வேண்டும். மெய்ப்பொருள் காணும் அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
எனும் உண்மைக்கு ஏற்ப தெளிந்த அறிவுடன் செயலாற்றிட வேண்டும்.
சமுதாயத்தில் தனிமனித ஒழுக்கம் அவசியம்.
”ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்”
ஒரு மனிதனை மேன்மைப் படுத்துவது ஒழுக்கமே ஆகும். எனவே அது உயிரினும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. தவறு ஏற்பட என்ன காரணம்? போதிய அறிவு இல்லாமையே ஆகும்.
இந்த அறியாமையைப் போக்கவே கல்வி கற்க வேண்டும்.
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத்தக.
கற்பதற்கேற்ற நூல்களைத் தேர்ந்தெடுத்து குற்றம் இல்லாமல் கற்க வேண்டும். கற்ற நூல்களில் அறிந்து கொண்டவற்றிற்குத் தக்கவாறு வாழ்க்கையில் அவற்றைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
இன்றைக்கு நமது அரசாங்கம் கல்வியை வழங்க பல வழிகளில் முயன்று வருகிறது. அதனைப் பயன்படுத்தி இந்நாட்டில் உள்ளோர் அனைவரும் கல்விக் கண் திறந்து கொள்ள வேண்டும். கல்வியறிவு பெற்ற சான்றோர்களும் மெய்யுணர்வு பெற வேண்டும். சமுதாயத்தை நோக்கின் படித்தவர்கள் யாவரும் பொதுநல நோக்கோடு இருப்பதாகத் தெரியவில்லை. படிக்காதவன், பாமரன் கூட கருணையோடு பிறருக்கு உதவும் மனப்பான்மையோடு இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் படித்தவர்கள் பெரும்பாலும் பண்பினை இழந்தவர்களாகவும், பொறுப்பு அற்றவர்களாகவும், சுயநலவாதிகளாகவுமே இருக்கிறார்கள். இந்நிலை மாறவேண்டும். ஒருவர் அரத்தைப் போன்ற கூர்மையான அறிவுடையவராய் இருந்தாலும், அவரிடம் மனிதப் பண்பு இல்லை என்றால் அவர் மரத்திற்குச் சமமானவரே ஆவர் என்பதை
“அறம் போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்”
எனும் குறட்பா விளக்குகிறது. பசுமையான மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்துகின்றனர் பண்பில்லாத மரம் போன்ற மானிடர்கள்.
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல்பவர்”
எனும் குறள் உழவர்களே சிறந்தவர்கள் என்று கூறுகிறது. உழவு செய்து அதன் பயனால் கிடைப்பதை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர் ஆவர். மற்ற தொழில் செய்பவர்கள் அனைவரும் பிறரைத் தொழுதுண்டு அவர் பின் செல்பவர்களே ஆவர்.
இத்தகைய பெருமைக்குரிய உழவர்கள் இன்றைக்கு இலாப நோக்கோடு பலவித வேளாண் உரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல்’ என்பதற்கு ஏற்ப அறிவியல் யுகத்தில் பலவித உரங்களைப் பயன்படுத்துகின்றனர். விளைவு, விளைச்சல் அதிகம்; ஆனால், அந்த உணவிலிருந்து நமக்குக் கிடைக்கக் கூடிய உயிர்ச் சத்துக்கள் தாம் மிகவும் குறைவு. நல்ல ஆரோக்கியமான மனிதனை இன்று காணுதல் அரிது. உணவு உற்பத்தியோ பொருள் வளமோ நம்மிடம் இல்லாமல் இல்லை. ஒருவன் தேவைக்கேற்ற உணவின்றி தவிக்கிறான். ஒருவன் உண்பதையே வேலையாய்க் கொண்டிருக்கிறான். இந்நிலை மாறவேண்டும். மீதுண்பதாலும் நோய் ஏற்படும். போதிய உணவு எடுத்துக் கொள்ளாவிட்டாலும் நோய் ஏற்படும். இதனையே வள்ளுவர் ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ எனும் குறளில் விளக்குகிறார். நோய்களின்றி வாழ்வதற்கும் வள்ளுவர் வழி சொல்கின்றார்..
ஒவ்வாத உணவை ஒதுக்கி, அளவுக்கு அதிகமாய் விரும்பாமல் வாழ்கின்றவனுடைய உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய்கள் உண்டாகா – இக்கருத்தினை
“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு”
எனும் குறள் கூறுகிறது. இந்த ஒவ்வாத உணவு என்பது இன்றைய மக்கள் விரும்பும் விரைவு உணவு வகைகளைக் கூறலாம். இவற்றை எல்லாம் நீக்கி விட்டு நம் நாட்டில் விளையக் கூடிய கீரைகளையும், பழங்களையும் உண்ணும் பழக்கம் அமைதல் வேண்டும்.
கூட்டுக் குடும்பங்கள் பல சிதைந்ததற்கு என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். சுயநலமே காரணம். பாசத்தைவிட பணமே பெரிதெனக் கொள்ளும் பாங்கல்லவா இந்நிலைக்குக் காரணம். தன்னுடைய வருமானத்தைத் தானே பயன் படுத்த எண்ணுவதனாலும், தன் உறவினர்க்குச் செலவு செய்வதைக்கூட விரும்பாததாலும் விளைந்ததுதான் இந்த சுயநலச் சமுதாயம்.
இல்வாழ்வான் எப்படி இருக்க வேண்டுமென வள்ளுவர் கூறியுள்ளார். தன் குடிப்பிறந்த முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான், தன் குடும்பம் என்ற ஐவகை யாவரையும் காக்க வேண்டியது இல்லறத்தானின் தலையாயக் கடமை ஆகும் என்கிறார்.
“தென்புலத்தார், தெய்வம், விருந்தொக்கல், தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை”
எனும் குறள் விளக்கும்.
இன்றைக்கு குடும்பத் தலைவனும், தலைவியும் வினையாற்றவும், பொருள்தேடவும் செல்வதனால் பெரியோர்கள் முதியோர் இல்லத்திலே, குழந்தைகள் காப்பகத்திலே என்ற நிலை நிலவுகிறது. இது நல்லதன்று.
“அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு”
அன்பு உள்ளவர்களே உயிர் உள்ளவர்கள். அன்பில்லாதவர்கள் எலும்பைத்தோலால் போர்த்திய வெறும் உடம்பைப் பெற்றவர்களே ஆவார்கள்.
“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலன் நன்மக்கள் பேறு”
குடும்பத்திற்கு மங்கலம் என்பது நல்ல மனைவியைப் பெறுவதே ஆகும். அதற்கு நல்ல அணிகலன்கள் என்பவை நல்ல மக்களைப் பெறுவதே ஆகும். அணியெனப் பிறந்த மக்களைப் பேணிக்காக்க வேண்டாவா? நாம் பெரியோர்களையும், பிள்ளைகளையும் பேணுதல் வேண்டும்.
நாம் நல்ல தமிழ்க்குடி மக்கள். நமது சிறப்பே விருந்தோம்பலில் தான் உண்டு. எவ்வளவு செல்வந்தர்களாய் இருந்தாலும் விருந்தினரைப் போற்ற வேண்டும். செல்வச் செழிப்போடு வாழுங்காலத்தே விருந்து போற்றுதல் வேண்டும்.
“உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல்ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு”
செல்வம் உள்ள காலத்தே வறுமை எதுவென்றால் விருந்தினரைப் போற்றாமல் வாழ்வது தான். இது அறியவேண்டியதை அறியாத பேதையரிடம் தான் உண்டாகும் என்று வள்ளுவர் கூறுகிறார்.
“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”
அனிச்ச மலர் முகர்ந்துப் பார்த்தாலே வாடி விடும். அது போல விருந்தினர் முகம் வேறுபட்டுப் பார்த்தாலே முகம் வாடிவிடுவர். எனவே விருந்து போற்றுபவர் இன்முகத்தோடு விருந்தோம்ப வேண்டும்.
சிலர் தன்னை விடப் பெரிய செல்வர்களுக்குத்தான் விருந்து கொடுப்பர். நட்பு கொள்வர். பசையுள்ளப் பக்கம் ஒட்டுவது போல செல்வம் உள்ளபக்கமே மக்கள் உறவு கொள்கின்றனர். கடின உழைப்பும், உண்மையும், நேர்மையுமுள்ள மனித நேயம் மிக்க பண்பாளன் ஏழையாய் இருந்தால் அவனை உலகம் மதிப்பதில்லை.
“அறம் எனும் பொருள் அறியார்
புறம் போகும் பொருள் பெற்றார்
உறவு எனும் பொருள் அறிவரோ?
திறம் எனும் பொருள் பெறுவரோ? சொல்!"
-மு. கவிதாராணி
இக்கருத்தினை
“பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு”
எனும் குறள் கூறும்.
பொருளால் எதுவும் நடக்குமெனக் கருதி, யாருக்கும் எதுவும் உதவாமல் சேர்த்து வைத்திருக்கும் மயக்க அறிவுடையவன் தன் பிறவியின் பயனையே பெறாமல் பெருமை இழந்து விடுவான் எனப் பொய்யில் புலவர் விளக்குகிறார். செல்வத்தின் பயன் ஈதலே!
”ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு”
வறுமைப் பட்டவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து அதன் மூலம் புகழ் உண்டாக வாழ வேண்டும். அந்தப் புகழைத் தவிர உயிருக்கு உறுதி தருவது வேறெதுவும் இல்லை. அது போல அறம் உணர்ந்தவராய்த் தம்மை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை அடைகின்ற வழியை ஆராய்ந்து, அறிந்து பெறவேண்டும். பெரியவர்களைத் துணையாகக்கொண்டு அவர் சொற்படி நடக்க முயல வேண்டும்.
“அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்”
என்பது வள்ளுவர் வாக்கு. மூத்தோர் சொல் அமிர்தம் எனும் பழமொழியும் இதனை விளக்கும்.
“எல்லார்க்கும் நன்றாம் பணிதல்”- எனும் குறளிற்கு இணங்க பணிவோடு நடந்து கொள்ள வேண்டும். “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை”-எல்லோரும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதனால் மேன்மையை அடைவார்கள். வள்ளுவர் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்வியல் முறையினையே வலியுறுத்துகிறார்.
“வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு”
என்று கூறி எப்பொழுதும் ஊக்கமும் உற்சாகமும் உடையவர்களாக வாழவேண்டும்.
‘எண்ணித் துணிக கருமம்’ என்ற குறளில் எதையும் செய்வதற்கு முன்னால் பன்முறை சிந்திக்க வேண்டும். அவ்வாறு சிந்தித்த பின் எடுக்கின்ற முடிவு தீர்க்கமானதாக இருக்க வேண்டும். அதில் எந்த தடுமாற்றமும் இருக்கக் கூடாது என்கிறார்.
“அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்”
என்ற குறளில் அறிவிற் சிறந்த ஆன்றோர்கள், நல்ல அறிவினை உடையவர்கள் பயனற்ற சொற்களைப் பேச மாட்டார்கள். எனவே பயனுடைய சொற்களையே பேச வேண்டும் என்கிறார்.
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்”
பிறருக்குத் தீமை செய்தால் தனக்கு தீமை தானாக வரும். எனவே யாருக்கும் தீங்கு செய்யலாகாது.
“உள்ளியதெல்லாம் உடனெய்தும் உள்ளத்தான்
உள்ளான் வெகுளி எனில்”
சினத்தை மறந்தவன் நினைத்ததை முடிப்பான். நீ நினைத்ததை வல்லமை பெற வேண்டுமாயின் சினத்தை விட்டுவிட வேண்டும்.
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”
உயிர்களை அழிக்காதவனை எல்லா உயிர்களும் தொழும். புலால் உணவு கூடாது. தாவரங்களுக்கு வலி உணர்வு இல்லை. மற்ற உயிர்களுக்கு அது உண்டு. எனவே மற்ற உயிர்களையும் தம் உயிர் போல எண்ணவேண்டும். புலால் உணவினைத் தவிர்க்க வேண்டும்.
மாணவப் பருவத்திலே முக்கியமாக புலால் உணவினைத் தவிர்ப்பது நல்லது. தேர்வு சமயங்களில் புலால் உணவினைத் தவிர்க்கவும். பள்ளி வேளை நேரங்களில் புலால் உணவு கொண்டு வந்து உண்பதையும் தடை செய்துள்ளனர். எப்பொழுதுமே புலால் உணவினைத் தவிர்ப்பதனால் மாணவர்கள் சுறுசுறுப்புடன் இருக்கலாம். எளிதாக சீரணிக்கக் கூடிய உணவு வகைகளை உண்பதே நமக்குப் பொருத்தமானதாகும். அந்தந்த இடங்களில் வசிப்பவர்கள் அங்கு நிலவும் தட்பவெப்பங்களுக்கு ஏற்பவே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். உடை அணிந்து கொள்ள வேண்டும். வாழும் இடங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். நாகரிகம் என்ற பெயரால் நமக்குப் பொருந்தாத உணவு, உடை, உறைவிடம் அமைத்து கொள்வது எவ்வகையில் அறிவுடைமை ஆகும். எவ்வாறு நமக்கு நலன் விளைவிக்கும். பகுத்தறிவினைப் பயன்படுத்த வேண்டும். எனவே செய்ய வேண்டிய செயல் வகை அறிந்து இடம், காலம் இவற்றை அறிந்து வெல்லும் வகையறிந்து செயலாற்றுவதே சாலச் சிறந்தது.
இழந்தால் பெற முடியாதது உயிர் மட்டுமல்ல, காலமும் கூட. எனவே காலத்தின் முக்கியத்துவம் உணர்ந்து அதனைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு காலத்திலும் மனிதன் தன் கடமைகளை உணர்ந்து செயலாற்ற வேண்டும். குழந்தைப் பருவத்தில் அறிவுடன் சூழ்நிலையை உணர்ந்து வளர வேண்டும். இளமையில் கல்வி கற்க வேண்டும். பெற்ற தாய் தந்தையரின் உதவியோடு நன்றாக கல்வி கற்று அறிவிலே தெளிவு உடையவராக வளர வேண்டும்.
“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்டதாய்”
“மகன் தந்தைக் காற்றுமுதவி இவன்தந்தை
எந்நோற்றான் சொல் எனும்சொல்”
எனும் குறட்பாக்களுக்கு உதாரணமாக மக்கள் (குழந்தைகள்) வளர வேண்டும். தாயும், தந்தையும் பெற்றப் பிள்ளைகளை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். தாய் அன்பும், பரிவும் பொங்க நல்ல பழக்க வழக்கங்களை உணவோடு சேர்த்து ஊட்டி வளர்த்த வேண்டும். தந்தை தன் மகனுக்கு நல்ல முன் உதாரணமாக இருக்க வேண்டும்.
“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்”
எனும் குறட்பாவிற்கு ஏற்ப கற்றவர் நிறைந்த அவையிலே தன் மகனை முதன்மையானவனாகச் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மக்கள் பரிவோடும், பாசத்தோடும் வளர்வர்.மேலும் நம் பண்பாடு, கலாச்சாரம் இவற்றிற்குப் பாதுகாவலராகவும் விளங்குவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் தம் ஐம்புலன்களைக் காத்து வாழ வேண்டும்.
“சொல்லுக சொல்லைபிறிது ஒருசொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து”
தான் சொல்லக் கூடிய கருத்திற்கு மாற்றாக எதுவும் இல்லை என்பதை உணர்ந்த பின்னரே தாம் சொல்ல நினைத்ததைச் சொல்ல வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் கருத்துடன் செயல்படவேண்டும். அவ்வாறு சிந்திக்காமல் எடுத்தோம், கவிழ்த்தோம் எனப் பேசினால் பேசுகின்ற பேச்சிலே சொற்குற்றம் ஏற்படும். எனவே நாவை அடக்கிக் காக்க வேண்டும். மொழியைப் பிறர்க் கேட்டு மகிழும் வண்ணமாக நாம் பயன் படுத்திப் பழக வேண்டும். நல்லது அல்லாத சொற்களைப் பேசுவதனால் தாமும், பிறரும் துன்பப்ப்ட நேரிடும். இதனை ‘யாகாவராயினும் நாகாக்க’ எனும் குறளில் விளங்கும்.
தானங்களில் சிறந்தது நிதானம். பொறுமை ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியம். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பழமொழி. எனவே பூமியைப் போன்று பொறுமை கொள்ள வேண்டும்.
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”.
எனும் உண்மைக்கேற்ப பொறுமை காக்க வேண்டும்.
தம் பெருமையை பிறர் இழிவாகப் பேசினாலும் அல்லது குறைவாக மதிப்பிட்டாலும் பொறுமை காக்க வேண்டும். பெரியவர்களை மதித்துப் போற்ற வேண்டும். நாம் முன்னேற நல்ல பெரியவர்களை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். பண்பினால், அன்பினால் உயர்ந்தவர்களை, அறிவினால், உழைப்பினால் முன்னேறிய பெரியவர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும். அதனால் நாம் நல்ல வழிகாட்டுதலைப் பெறுவதோடு உயர்ந்த நிலையையும் பெறுவோம்.
பிறர் நலன் அடைவதைக் கண்டு பொறாமைப் படக்கூடாது. அது நம் முன்னேற்றத்திற்கு தடையாய் அமையும்.பொறாமை யாவருக்கும் தீமையையே தரும்.
“அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்”
-என்று கடுமையாக எச்சரிக்கிறார்.ஒருவனுக்குக் கொடுப்பதைத் தடுப்பவனுடைய சுற்றம் உடுப்பதும்,உண்பதும் இன்றிக் கெடும்.
எல்லோரிடமும் அன்புடன் பழக வேண்டும். நட்புடன் பேச வேண்டும். நம்மால் முடிந்த உதவியைச் செய்யலாமே தவிர மாறாக எதனையும் செய்யக் கூடாது. உள்ளத்திலே அன்பு வைத்துப் பழகாதவர்கள் நெருங்கிய நண்பர்களாய் உள்ளவர்களைக் கூட புறங்கூறிப்பிரித்து விடுவர். பிறரது குற்றத்தைக் காண்பது போலவே தம்முடையக் குற்றத்தையும் காணும் தன்மை வந்து விட்டால் நாம் யாரையும் குறை கூற மாட்டோம். ”அன்பிலார் எல்லாம் தமக்குரியர்” அன்றோ? எனவே அன்பில்லாதவர்கள் புறம் கூறுவர். அன்புடையவர்கள் புறம் கூற மாட்டார்கள்.
ஒருவர் நமக்குச் செய்த உதவியை மறக்கக்கூடாது.
”நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று”
பிறர் அறியாமல் செய்த தீமையை வேண்டுமானால் மறந்து விடலாமே தவிர நன்மையை ஒருபோதும் மறக்கக் கூடாது என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
பெரியோர்களைப் பிழையாமை வேண்டும். பெரியவர்களுடைய மனம் புண்படும்படி எதையும் செய்யலாகாது.
”பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்” –என்று குறள் கூறும்.
இதன் கருத்து என்னவென்றால் ஆற்றல் மிக்கப் பெரியோர்களைப் போற்றி மதிக்காவிடில் அவர்களால் நீங்காத துன்பத்திற்கு ஆளாக நேரிடும். எனவே பெரியோர்களை மதித்துப் போற்ற வேண்டும்.
“வில்ஏர் உழவர் பகைகொளினும், கொள்ளற்க
சொல் ஏர் உழவர் பகை”
-போர்வீரர்களைப் பகைத்துக் கொண்டாலும் தீமையில்லை. ஆனால் சொல் ஏர் உழவரான அறிஞர்களோடு ஒரு போதும் பகை கொள்ளக் கூடாது. அதனால் பெரிய துன்பம் விளையக்கூடும்.
“அன்பிலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு”
எனும் குறளில் தன்னைச் சேர்ந்தவரிடம் அன்பு இல்லாதவனாய், தனக்குத் தக்க துணை இல்லாதவனாய்த் தானும் வலிமை இல்லாதவனாய் இருப்பவன் ஒருபோதும் பகையை ஒழிக்க முடியாது, வெற்றியையும் பெறமுடியாது என்பதை விவரிக்கிறார்.
எனவே தன்னைச் சேர்ந்தவரிடம் அன்பு செய்யத் தெரியவேண்டும். தனக்குத் துணைவர்களைப் பெற வேண்டும். தனது திறமையை, வலிமையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு இருந்தால் தான் வெற்றி பெற இயலும்.
நன்மையும் தீமையும் பிறர் தர வாரா. அறிவில்லாதவர் தமக்குத் தாமே செய்து கொள்ளும் துன்பம் அவர்கள் பகைவருக்குக் கூட செய்ய முடியாததாகும். அறிவில்லாதவர்களுக்குப் பிறர் துன்பம் தர தேவையில்லை. தனது அறிவற்ற தன்மையினால் தானே கேட்டினை வரவழைத்துக் கொள்வர்.
சிற்றறிவு என்பது நான் அறிவு உடையவன் என்று தன்னைத் தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும்.
“பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து”
பெருமைக்குரிய நல்லறிவுடைய ஆன்றோர்கள், சான்றோர்கள் பணிவுடன் திகழ்வார்கள். அறிவற்றவர்கள் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வார்கள். எப்பொழுதும் இவ்வாறு திகழக் கூடாது.
“ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான்அடங்காப்
பேதையின் பேதையார் இல்”
உயர்ந்த நூல்களைக் கற்று அவற்றின் பொருளை அறிந்தும், பிறருக்கு அவற்றை விளக்கம் சொல்லியும் வாழ்கின்றவன் அந்த உயர்ந்த கருத்துக்களைத் தன் வாழ்வில் கடை பிடிக்கவில்லை என்றால் அவனை விட அறிவில்லாதவன் உலகில் இல்லை. எனவே கற்றுணர்ந்து பிறருக்கு விளக்கத் தெரிந்தால் மட்டும் போதாது. உணர்ந்த கருத்துகளை நாம் வாழ்வில் பின்பற்ற வேண்டும்.
ஒரு மனிதன் சிறந்தவனாக வேண்டும் எனில் அவன் மனம், மொழி, செயல் யாவும் ஒன்றாய் இருத்தல் வேண்டும். மனதில் நினைப்பது ஒன்றும், சொல்வது வேறொன்றும், செயல் மற்றொன்றும் செய்வாரை யார் மதிப்பார்கள்? யாரும் மதிக்க மாட்டார்கள். மனம், மொழி, செயல் யாவும் ஒன்று போல் இருத்தல் வேண்டும்.
தீயவர்களுடன் நட்பு கொள்ளக் கூடாது. நல்லவர்கள் அல்லாதவர்களோடு நாம் பழகக்கூடாது. அவர்களை விட்டு விலக வேண்டும். அன்பின் மிகுதியால் நலம் செய்வார் போலத் தோன்றினாலும் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதை விட தேய்வதே மேலானது. ஆனால் உண்மையான அன்பு உடையவரின் நட்பைப் போற்ற வேண்டும். பழகிய நண்பர் உரிமையோடு செய்யும் செயலை இழிவானது என்று எண்ணாமல் ஏற்றுக் கொள்வதே பழைமை என்பதாகும்.
நண்பர்களை நாம் ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவனுடைய குணத்தையும், குடிபிறப்பையும் அவனிடம் உள்ள குறையையும், அவனைச் சேர்ந்தவர்கள் இயல்பையும் அறிந்தபின் நட்பு கொள்ள வேண்டும். இதனை
“குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இன்னும் அறிந்தியாக்க நட்பு”
எனும் குறள் விளக்கும்.
முகம் மட்டும் மலரும் படியாகப் பழகுவது நட்பாகாது. மனமும் மலரும்படியாக உள்ளன்பு கொண்டு உண்மையுடன் பழகுவதே உயர்ந்த நட்பு ஆகும். இதனை “முகநக நட்பது நட்பன்று” எனும் குறள் விளக்கும்.
கடல் போன்ற கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டது திருக்குறள். அதில் உள்ள கருத்துகளை உணர்ந்து வாழ்வில் கடைப்பிடித்தால் நம் புரட்சிக் கவிஞன் சொன்னது போல தமிழனென்று சொல்லலாம், தலை நிமிர்ந்தும் நிற்கலாம்.
தன்னை உணர்ந்து நூறு சதவீதம் கவனமொடு நல்வினையை செயலாற்றும் பொழுது பாரம்பரியம் மிக்கப் பெருமையை நாம் மீண்டும் பெறுவோம். நமது பண்பாடு, கலாச்சாரம் புத்துணர்வு பெறும் மற்றும் புது எழுச்சி பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
குறள் வழி நடப்போம்; குணக் குன்றெனத் திகழ்வோம்; நாமே!
வாழ்க வளமுடன்!
Sunday, December 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வாழ்வியல் நடைமுறைகளை குறள் கொண்டு விளக்கிய விதம் அருமை....நல்ல முயற்சி....
தொடருங்கள்
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்
வாழ்த்துகளுக்கு நன்றி! வாழ்த்துங்கள் வளர்கிறோம்.
வள்ளுவரின் வாழ்வியல் நெறியும், அதை நீங்கள் விளக்கிய விதமும், அதற்கு கையாண்ட உங்கள் எளிய வார்த்தைகளும் மிக அருமை...
தொடந்து எழுதுங்கள்...
அகல்விளக்கு, தங்கள் கருத்துக்கு நன்றி! .
Post a Comment