முருக. கவி

"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Monday, August 18, 2014

குருபக்தி – மகாபாரதத்தில் ஒரு பகுதி

     மிகவும் மதிக்கத் தக்க உறவுகளில் மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் வரிசையில் மூன்றாவதாக உள்ள குருவிற்கு அவரவர், அவரவர் விருப்பப்படி அன்பினைச் செலுத்துவர். இங்கு ஆசிரியருக்கு அன்பு செலுத்த நம் கதை நாயகர் என்ன செய்கிறார், தமது குருபக்தியை எப்படி உலகிற்குக் காட்டுகிறார் என்பதை இங்கு நாடக வடிவில் காணலாம்!!                                                                                            குருபக்தி - நாடகம்                                                           காட்சி 1
இடம் அஸ்தினாபுரம் / நேரம் ஓர் இரவு நேரம்
கதாபாத்திரங்கள் : துரோணர், அர்ச்சுனன்.                                            
அர்ச்சுனன் வில் பயிற்சி செய்துகொண்டு இருக்கிறான். தீப்பந்தத்தை கையில் பிடித்தவாறு துரோணர் அங்கு வருகிறார்.                                                     
துரோணர்: அர்ச்சுனா! இருளில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உன் வில்லிலிருந்து வரும்  நாண் ஒலி கேட்டே இங்கு வந்தேன்.
அர்ச்சுனன்: மன்னிக்க வேண்டும் குருதேவா! அன்று உண்வருந்தும் பொழுது காற்றினால் விளக்குகள் அணைந்து போயின. இருப்பினும் உணவினைக் கைகளால் எடுத்து வாயில் போட யாதொரு தடையும் ஏற்படவில்லை. அதற்குக் காரணம் நமது கைப்பயிற்சி தானே! அதே போல இருளிலும் வில் பயிற்சி செய்து பழகினால் என்ன எனத் தோன்றியது! அதுதான்…… தங்களிடம் சொல்லாமல் வந்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
துரோணர்: மெத்த மகிழ்ச்சி அர்ச்சுனா! உனது ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். உலகிலேயே மிகச் சிறந்த வில்லாளியாக உன்னை நான் உருவாக்குவேன். இது சத்தியம்!
அர்ச்சுனன்: நன்றி குருதேவா! நான் மிகவும் பாக்கியம் செய்தவன். நல்லாசி கூறுங்கள்!
துரோணர்: நலமடைவாய்! வா போகலாம்.                                                                                                                                                                                       
காட்சி 2                                                                                           
இடம் துரோணர் இல்லம் / நேரம் பகல் நேரம்
கதாபாத்திரங்கள் : ஏகலைவன், துரோணர்.
ஏகலைவன்: வணக்கம் குருதேவா!
துரோணர்: யாரப்பா நீ? என்ன வேண்டும் உனக்கு?
ஏகலைவன்: காட்டரசன் இரண்யதனுசின் மகன் நான். ஏகலைவன் எனது பெயர். தங்களிடம் வில் பயிற்சி பெறவேண்டும் என்னும் விருப்பத்துடன் உங்களை நாடி வந்துள்ளேன். என்னைச் சீடனாக ஏற்றுக்கொண்டு பயிற்சி தர வேண்டுகிறேன். (மண்டியிட்டு வணங்குதல்)
துரோணர்: (யோசனையுடன்.)  எழுந்திரு ஏகலைவா! கல்வி தேடி என்னை நாடி வந்த உன்னை ஊதாசீனப் படுத்தக் கூடாது. ஆனால் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பயிற்சி தரவே நேரம்  போதுவதில்லை. இருப்பினும் உன்னை என் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன். எப்போதும் வில் பயிற்சி செய்பவனாய் பலமுள்ளவனாய் இரு. இப்போது உன் வீட்டிற்குத் திரும்பிச் செல்! பூரண நல்லாசிகள்!!
ஏகலைவன்: நன்றி குருதேவா! தங்களையே மானசீக குருவாக ஏற்றுக் கொண்டேன்.   (தங்கள் உருவத்தின் முன்னால் பயிற்சி செய்வேன்! வழிகாட்டுவீராக!! என மனதில் நினைத்தபடி வணங்கிச் செல்கிறான்.)                                                                          
காட்சி 3                                                                                            
இடம் பயிற்சிக்களம்
கதாபாத்திரங்கள்: துரோணர், அர்ச்சுனன், நாரதர், நகுலன், சகாதேவன் மற்றும் சீடர்கள்.                                                                                                
துரோணர்: சீடர்களே! எந்த அளவில் பயிற்சி செய்திருக்கின்றீர்கள்!
சீடர்கள்: வணக்கம் குருதேவா!
அர்ச்சுனன்: குருதேவா! எந்தவொரு பொருளையும் கண்களால் பார்த்து குறி வைக்க முடிகின்றது. ஆனால் ஒலி அலையினை உணர்ந்து அம்பு எய்துவதில் சரியான முன்னேற்றம் இன்னும் இல்லை ஐயனே!
துரோணர்: நன்று! நன்று! கவலைப் படாதே மகனே! கொஞ்சம் கொஞ்சமாகத்தானே பயிற்சியில் வெற்றிபெற முடியும்! அயர்ந்து விடாமல் தொடர்ந்து முயற்சி செய்! வெற்றி பெறுவாய்!
அர்ச்சுனன்: நன்றி குருதேவா! நிச்சயம் தங்கள் ஆசியோடு வெற்றி பெறுவேன்!
நகுலன்: குருதேவா! எனக்கும் பயிற்சி செய்ய வேண்டும்!
சகாதேவன்: குருவே! நாங்களும் தீவிர பயிற்சி செய்கிறோம்.
துரோணர்: நன்று! நன்று! தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்!
(நாரதர் வருகை)
நாரதர்: நாராயண! நாராயண!!
துரோணர்: வாருங்கள் மகரிஷி! வணங்குகிறேன்.
சீடர்கள்: வணக்கம் மகிரிஷி!
நாரதர்: ம் ம். வணக்கம்! வணக்கம்!! மங்கலம் உண்டாகட்டும்.. துரோணாச்சாரியாரே! உமது சீடர்கள் தீவிர பயிற்சி செய்கிறார்கள் போலும்!....
துரோணர்: எல்லாம் தங்கள் ஆசிதான் மகிரிஷியே!
நாரதர்: உமது சீடர்களில் உயர்ந்தவன் யாரெனச் சொல்ல முடியுமா? துரோணரே!
துரோணர்: ஒவ்வொரு சீடனும் ஒவ்வொரு வித்தையில் சிறந்தவன். தருமன் தருமத்தில் சிறந்தவன், பீமன் கதையில் மல்யுத்தத்தில் சிறந்தவன், நகுலன் குதிரையேற்றத்தில் சிறந்தவன், சகாதேவன் ஆருடத்தில் சிறந்தவன்.
நாரதர்: அப்படியானால் வில் வித்தையில் சிறந்தவன்……
துரோணர்: நிச்சயமாக.. எமது சீடர்களில் வில் வித்தையில் சிறந்தவன் அர்ச்சுனன் தான் நாரதரே!
நாரதர்: நாராயண! நாராயண!! அது சரி, உமக்கு விஷயமே தெரியாதா? காட்டுக்குள் உமக்கு ஒரு சீடன் இருக்கிறான். அவன் அர்ச்சுனனை விட வில் வித்தையில் சிறந்தவன் போலத் தெரிகிறதே!
துரோணர்: என்ன! காட்டிற்குள் எனக்கொரு சீடனா? அதுவும் எனக்குத் தெரியாமலா?
சீடர்கள்: என்ன? அர்ச்சுனனை விட வில் வித்தையில் சிறந்தவனா?
நாரதர்: ஆமாம்! ஆமாம்! நாராயண! நாராயண!!
அர்ச்சுனன்: எப்படிச் சொல்கிறீர்கள் மகிரிஷி! என்னை விட சிறந்தவனென்று!
நாரதர்: பொறுமை! பொறுமை! துரோணரே, நேற்று வான் வழியே சத்யலோகம் சென்று கொண்டிருந்தேன். காட்டிற்குள் தங்களைப் போலவே பதுமை ஒன்று இருக்கக் கண்டேன். அதன் முன்னால் வேட்டுவச் சிறுவனொருவன் வில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். தீவிரப் பயிற்சி.
அப்பொழுது நரியொன்று ஊளையிட்டது. அதன் சப்தம் அவ்வீரனின் கவனத்தைத் திசைத் திருப்பியது. இருந்த இடத்திலிருந்து ஒலி வந்த திசையை நோக்கி அம்புகளை சரமாரியாக எய்தான் பாருங்கள்! ஏழு பானங்கள் குறுக்கும் நெடுக்குமாக நரியின் வாயைத் திறக்க முடியாமல் அம்புகளால் கட்டிவிட்டான் போங்கள்!
ஆச்சரியத்தில் உறைந்து போனேன்! நாராயண! நாராயண!
துரோணர்: எனக்கு மட்டும் தெரிந்த அந்த வித்தையை அவ்வேட்டுவச் சிறுவன் எப்படிக் கற்றான்? என்னைத் தவிர வேறு யார் இதனைக் கற்றுத் தந்திருக்க முடியும்?
அர்ச்சுனன்: குருவே! எனக்குக் கை வராத பயிற்சி அல்லவோ அது? ஒலி வந்த திசையைக் குறித்து அம்பு எய்கிறான் என்றால் உண்மையில் அவன் என்னைவிட வில் வித்தையில் மிகவும் பலசாலியே!   
நகுலன், சகாதேவன்: அடேங்கப்பா! ஒலி வந்த திசையை நோக்கி குறிவைத்து எய்துவதா? அதுவும் சாத்தியமா?
துரோணர்: ஏனில்லை! ஒலியின் அலையைக் கவனித்து ஆயுதங்களைப் பிரயோகிக்கும் பயிற்சியை உங்களுக்கு இனிதான் வழங்கப் போகிறேன்! ஆமாம் நாரதரே! அவன் யார்? அவன் பெயரென்ன? அவன் குருநாதர் யார்? நாங்கள் தெரிந்து கொள்ளலாமா மகிரிஷியே?
நாரதர்: ஹா..ஹா..ஹா நாராயண! நாராயண! துரோணரே! அவன் காட்டரசன் இரண்யதனுசின் புதல்வன். பெயர் ஏகலைவன். அவன் தங்களின் தலையாயச் சீடன். தங்களை மானசீகமாக குருவாக ஏற்றுக் கொண்டு உங்களது கலைகளையும் யுக்திகளையும் தானாகக் கற்றுப் பயிற்சி செய்து தேர்ந்தவன். அர்ச்சுனனைக் காட்டிலும் வில்லில் அவனே சிறந்தவன்.
துரோணர்: ஆமாம் ஆமாம்! ஒரு முறை அவ்வேட்டுவச் சிறுவன் என்னிடம் வந்து வில் வித்தை கற்றுத் தர வேண்டுமென்று கேட்டான். நான் தான், நேரம் போதவில்லை என்று கூறி வீட்டிற்குச் சென்று பயிற்சி செய்யுமாறு திருப்பி அனுப்பினேன்.
மகிரிஷியே! உலகிலேயே சிறந்த வில்லாளனாக அர்ச்சுனனை உருவாக்குவேன் என வாக்குக் கொடுத்துள்ளேன். இடையிலே இந்த வேட்டுவச் சிறுவன் என் வாக்கை பொய்ப்பித்து விடுவான் போலுள்ளதே! இந்த சிக்கலில் இருந்து வெளிவர  ஒரு உபாயம் அருளும்! உமக்குப் புண்ணியமாய் போகட்டும்!
நாரதர்: நாராயண! நாராயண! அப்படியா யோசிக்கின்றீர்! நீரே அவனை நேரில் சென்று பாரும்! அர்ச்சுனனை மட்டும் உடன் அழைத்துச் செல்லும்! பேசிப் பாரும், மீண்டும் சந்திப்போம்! நாராயண! நாராயண!
சீடர்கள்: நன்றி மகிரிஷி! வணங்குகிறோம்.
நாரதர்: வெற்றி நிச்சயம்! நாராயண! நாராயண!                                                           
காட்சி 4                                                                                           
இடம் காடு
கதாபாத்திரங்கள்: துரோணர், அர்ச்சுனன், நாரதர், ஏகலைவன்.
துரோணரைப் போன்ற பதுமையின் முன் வணங்கி விட்டு வில் பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறான் ஏகலைவன். துரோணரின் வருகையைக் கண்டவுடன்……
ஏகலைவன்: வணக்கம் குருதேவா! வரவேண்டும்! வரவேண்டும்! தங்கள் வருகையினால் இவ்விடம் மிகவும் புண்ணியம் பெற்றது! வாழ்த்துங்கள் குருவே!
துரோணர்: நலமுண்டாகட்டும்! ஏகலைவா, இதென்ன! எனது பிரதிமையை வைத்துக்கொண்டு வணங்குகிறாய்! எவ்வாறு வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய்?
ஏகலைவன்: குருவே! தினமும் தங்கள் பதுமையின் முன் வணங்கி சில நிமிடங்கள் தியானிப்பேன். உள்ளத்தில் எழும் எண்ண அலைகளைத் தங்களது கட்டளையாக ஏற்று பயிற்சி செய்வேன் குருவே! வில் வித்தையில் ஓரளவு தேர்ச்சி பெற்றுவிட்டேன்! மேலும் திறமையில் மேம்பட ஆசிர்வதியுங்கள் குருவே!
துரோணர்:  நல்லது! நல்லது! எமது ஆசிகள் உமக்கு என்றும் உண்டு.
அர்ச்சுனன்: குருவே! நாரதர் கூறிய செய்தி உண்மைதான் போலுள்ளதே! என்ன செய்யப் போகிறீர்கள்?
துரோணர்: பொறு! பொறு! அர்ச்சுனா! …….. ஏகலைவா!
ஏகலைவன்: குருவே!
துரோணர்: என்னை நீ குருவாக ஏற்றுக் கொண்டது உண்மைதானா?
ஏகலைவன்: அதிலென்ன சந்தேகம் குருவே! தாங்கள்தான் என் குருநாதர்.
துரோணர்: அப்படியானால் குருகாணிக்கைத் தருவாயா?
ஏகலைவன்: கட்டளையிடுங்கள் குருவே! உடனே நிறைவேற்றுகிறேன்!
துரோணர்: உனது வலக்கைக் கட்டைவிரலை எனக்கு காணிக்கையாக தந்துவிடு மகனே!
ஏகலைவன்: இவ்வளவுதானா! நொடியில் நிறைவேற்றுகிறேன். இதோ என் வலக்கை கட்டை விரல்! (வாளால் வெட்டி வீழ்த்துகிறான்)
(நாரதர் வருகை)
நாரதர்: நாராயண! நாராயண!!
துரோணரும் அர்ச்சுனனும்:  வாருங்கள் மகரிஷியே! வணங்குகிறோம்.
நாரதர்: நலமடைவீராக! என்ன துரோணரே! ஏகலைவன் குருகாணிக்கை தந்துவிட்டான் போலிருக்கிறதே!
ஏகலைவன்: ஐயா! மகிரிஷியே, தேவகுருவே! குருகேட்கும் காணிக்கையை உடனே தருவது தானே சீடனுக்கு அழகு!
நாரதர்: நன்றாகச் சொன்னாய் ஏகலைவா.
துரோணர்: ஏகலைவன், என்னை உண்மையாக மதித்துக் காணிக்கை செலுத்தி உள்ளான். அவன் நீடுழி வாழ்க! அவன் வித்தை வளர்க!
நாரதர்: நாராயண! நாராயண!! தங்கள் வாக்கு பலிக்கும். யாவரும் நலமடையுங்கள். நான் வருகிறேன். நாராயண! நாராயண!!
துரோணரும் அர்ச்சுனனும்:  நன்றி மகிரிஷியே! நன்றி!
துரோணரும் அர்ச்சுனனும் அரண்மனைக்குத் திரும்பினர்.
துரோணர்: பார்த்தாயா அர்ச்சுனா! ஏகலைவனின் குருபக்தியை!!
அர்ச்சுனன்: ஆமாம் குருவே! ஏகலைவனின் செயலைக்கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.
துரோணர்: வில் வித்தையில் சிறப்பானவனாக இருக்கவேண்டுமானால்  கட்டைவிரல் அவசியமானது. அதனையும் நான் கேட்டவுடன் தயங்காமல் தந்து விட்டான் பார்த்தாயா! ஏகலைவன் சிறந்த மாணவன்!
அர்ச்சுனன்: ஆமாம் குருவே, மிகச் சிறந்தவன் தான் அவன்!
துரோணர்: இனி உனக்குப் போட்டியாக யாருமே இல்லை. நீயே உலகில் சிறந்த வில்லாளன்! போதுமா?
அர்ச்சுனன்: மிகவும் நன்றி குருதேவா! (வணங்குகின்றான்)
துரோணர்: நீடுழி வாழ்க!                                                                                           
காட்சி - 5
சில மாதங்களுக்குப் பிறகு ஒரு மாலை நேரம்.
இடம் துரோணர் வீடு
கதாபாத்திரங்கள்: துரோணர், அர்ச்சுனன்
அர்ச்சுனன்: குருதேவா! குருதேவா! நாம் ஏமாந்துவிட்டோம். ஏகலைவன் தங்களை நன்றாக ஏமாற்றிவிட்டான்!
துரோணர்: என்ன சொல்கிறாய் அர்ச்சுனா? ஏன் இந்த பதட்டம்? எதற்கு இந்த முடிவுக்கு வந்தாய்?
அர்ச்சுனன்: ஆமாம் குருவே! நாம் ஏமாந்துதான் போய்விட்டோம். இன்னொரு முறை ஏகலைவனின் வில் திறமையை நேரில் பார்த்ததே காரணம்.
துரோணர்: என்ன! வலக்கை கட்டை விரலை வெட்டியும் வில் வித்தையில் சிறப்பான பயிற்சியோடு இருக்கின்றானா? என்ன ஆச்சரியம்! என்ன சொல்கிறாய் நீ? இது சாத்தியம் தானா?
அர்ச்சுனன்: ஆமாம் குருவே,  நேற்று இரவு பசுவைக் கொல்ல வந்த புலியை முன்பு போலவே அம்புகளால் புலியின் வாயைக் கட்டி, அப்பசுவினை ஏகலைவன் காப்பாற்றியதை நானே என் கண்களால் நிலவொளியில் கண்டேன் குருதேவா! ஏகலைவன் ஏதோ ஏமாற்றிவிட்டான் என்றே நினைக்கிறேன்.
துரோணர்: இல்லை அர்ச்சுனா, ஒருபோதும் இருக்காது. என் சீடர்கள் யாரும் பொய்யர்கள் அல்லர். எனினும் நீ கூறுவது சிறிது சங்கடமாகவே உள்ளது. நாளை சென்று ஏகலைவனைக் கண்டு, உண்மையைக் கேட்டும் பார்த்தும் வரலாம், சரியா. நீ ஒன்றும் பதற வேண்டாம்.
அர்ச்சுனன்: சரி குருவே, தங்கள் சித்தம் போலவே செய்யலாம். எனக்கு விடை கொடுங்கள்.
துரோணர்: சென்று வா அர்ச்சுனா! நாளை எல்லாம் தெளிவாகி விடும். போய் வா மகனே! போய் வா!
அர்ச்சுனன்: வருகிறேன் குருவே, நன்றி! நாளைப் பார்க்கலாம்!                                          
காட்சி 6                                                                                            
இடம் - காடு
கதாபாத்திரங்கள்: துரோணர், அர்ச்சுனன் மற்றும் ஏகலைவன்.
ஏகலைவன் குருவின் சிலையின் முன் வணங்கிவிட்டு விற்பயிற்சியில் ஈடுபடுகிறான். அச்சமயம் அங்கு வந்த துரோணரையும் அர்ச்சுனனையும் பார்த்து வணங்கி நிற்கிறான்.
ஏகலைவன்: வாருங்கள் ஐயனே! வணக்கம்!
துரோணர்: வாழ்க ஏகலைவா! இப்படி உன்னை ஒன்பது விரல்களோடு வணங்குபடி செய்துவிட்டேனே! வருந்துகிறேன் ஏகலைவா! வருந்துகிறேன்!
ஏகலைவன்: அதெல்லாம் ஒன்றுமில்லை குருவே! தங்கள் சித்தம் என் பாக்கியம் அல்லவா? நான் மிகவும் மகிழ்ந்து போகிறேன் குருவே!
துரோணர்: அது சரி ஏகலைவா, உன் வலக்கை கட்டைவிரலை இழந்த பின்னும் எப்படி நேற்று புலியின் வாயைக் கட்டினாய்? அது எப்படி உனக்கு சாத்தியமானது?
ஏகலைவன்: தங்களாசி இருக்குபோது எது தான் சாத்தியப்படாது. அனைத்தும் சாத்தியமே! மேலும் நீங்கள் வலக்கை கட்டை விரலைத்தானே கேட்டீர்கள்! நான் இடக்கை வழக்கம் உள்ளவன். அதனால்தான் எந்த ஒரு பாதிப்பும் எனக்கு இல்லை குருவே!
(துரோணரும் அர்ச்சுனனும் திகைத்துப் போகிறார்கள்)
துரோணர்: என்ன? இடக்கைப் பழக்கம் உடையவனா நீ?
ஏகலைவன்: ஆமாம் குருதேவா! சரி அதெல்லாம் இருக்கட்டும், தற்போது என்னைத் தேடி வந்த காரணம் என்ன ஐயனே! தயங்காமல் கூறுங்கள்.
துரோணர்: (குற்ற உணர்வுடன்) என்னை மன்னித்து விடு ஏகலைவா.! என்னை மன்னித்துவிடு!
ஏகலைவன்: குருநாதா! என்ன இது? நான் உங்களை மன்னிப்பதா? எதற்கு பெரிய வார்த்தை எல்லாம் சொல்கிறீர்கள்? வேண்டாம் குருவே, வேண்டாம்!
துரோணர்: இல்லை மகனே! அர்ச்சுனனை சிறந்த வில்லாளன் ஆக்கும் நோக்கத்தில் உன் வித்தையைப் பறிக்க எண்ணியே வலக்கை கட்டை விரலைக் கேட்டேன். ஆனால் ஆண்டவன் என்னைத் தண்டித்து  என் தவறை உணர்த்திவிட்டான்.
அர்ச்சுனன்: எனது தகுதியையும் உணர்த்திவிட்டான் ஆண்டவன். என்னையும் மன்னித்துவிடு ஏகலைவா! என்னையும் மன்னித்துவிடு!
ஏகலைவன்: இல்லை! இல்லை! …… குருவே!  தங்களின் உள்ளக்கருத்தை அறியாதவன் ஆகிவிட்டேன். மன்னியுங்கள்! உங்களின் விருப்பத்தினை நான் அன்றே அறிந்திருந்தால் எனது கை, கால் அனைத்து விரல்களையுமே தந்திருப்பேனே! ஏன், இப்போதென்ன ஆகிவிட்டது! இக்கணமே என் கை கால் விரல்கள் அனைத்தையுமே தங்களுக்கு தந்து விடுகிறேன். ( எனக் கூறியவாறு வாளை உருவுகிறான்)
துரோணரும் அர்ச்சுனனும்: (பதறியவாறு) வேண்டாம் ஏகலைவா! வேண்டாம்! அத்தகு பாவச் செயலை மீண்டும் செய்து விடாதே!
(ஏகலைவன் யோசித்தபடியே சற்று நடந்தான். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக துரோணரை வணங்குகிறான்)
ஏகலைவன்: குருவே!
துரோணர்: என்ன மகனே.
ஏகலைவன்: எனது மானசீக குருவான உங்களுக்கு மேலும் ஒரு தட்சணை தர விரும்புகின்றேன். அர்ச்சுனனைச் சிறந்த வில்லாளன் ஆக்க வேண்டுமென்ற தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற என்னாலான சிறு முயற்சியாக இது அமையட்டும்!
ஆம் குருதேவா, இனி வில்லையும் அம்பையும் நான் எக்காரணத்தைக் கொண்டும் தொடவே மாட்டேன். என் வேட்டைத் தொழிலுக்குக் கூட குத்துக் கம்பு, ஈட்டி, வாள், கத்தி போன்றவறையே பயன்படுத்துவேன். என்னை வாழ்த்துங்கள் குருவே!!
துரோணர்: மகனே ஏகலைவா! என்னே உன் தர்ம சிந்தனை!! உனது தியாகம் என்னை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. யார் வேண்டுமானாலும் சிறந்த சீடனாக இருக்கலாம். ஆனால் எந்தச் சீடனும் குருபக்தியில் உன்னை விஞ்சமுடியாது. எங்களையெல்லாம் வெட்கப்பட வைத்துவிட்டாய்.
வீரத்துக்கும் தியாகத்துக்கும் நற்பண்புகளுக்கும் குலம் ஒரு தடையல்ல என்பதை எங்களுக்கு உணர்த்திவிட்டாய்.
பாண்டவர்களையும் கௌரவர்களையும் விட குருபக்தியில் நீ விஞ்சிவிட்டாய்! ஏன்? சிறந்த வீரன் கர்ணனையும் விட நீ உயர்ந்தவனப்பா! உன் பெருமை வரலாற்றில் என்றும் நிலைக்கட்டும்!
ஏகலைவன்: நன்றி குருதேவா! நன்றி!! தங்கள் சித்தம் என் பாக்கியம்!!
அர்ச்சுனன்: மிக்க நன்றி ஏகலைவா! குருவே வாழ்க!..... வாழ்க வாழ்க!!
துரோணர்: கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்! நீடுழி வாழ்க!!!
           

     பார்த்தீர்களா மாணவச் செல்வங்களே! ஆசிரியர் உடனிருந்து பயின்ற மாணவனைக் காட்டிலும் தன்னார்வம் மிக்கு விருப்பம் கொண்டு முயற்சியும் அதற்கேற்றப் பயிற்சியும் பெற்றதனால் மிகச் சிறந்த வில்லாளனாகவும் குருபக்தியில் சிறந்தவனாகவும் வரலாற்றில் நீங்கா இடம் பெற்று விட்டான் ஏகலைவன்! நமக்காகவும் வரலாற்றின் பக்கங்கள் காத்துக் கொண்டுதான் இருக்கின்றன. நாமும் ஆர்வமுடன் விருப்பும் முயற்சியும் பயிற்சியும் செய்து முன்னேற்றப் பாதையில் வரலாற்றின் பக்கங்களில் நமது முத்திரையைப் பதிப்போம் வாருங்கள்!!!குறிப்பு:
நாடகம் : மகாபாரதத்தில் ஒரு பகுதி
நாடக ஆக்கம் : மு. கவிதாராணி, தமிழ்த்துறை


Wednesday, July 10, 2013

மழை


கார்முகிலே கார்முகிலே என்ன சத்தம்?
   வானம் வந்து நிலமகளுக்கு இட்ட முத்தம்!
தேன் துளியாய் தேன் துளியாய் மழையின் சத்தம்,
   கானமெனக் கேட்குதையா நித்தம் நித்தம்!
நிலமகளின் உயிர்ப்பெனவே இயற்கை மொத்தம்,
   அழுக்கு நீக்கிக் குளிக்குது பார் என்ன வெட்கம்!
மழை வெயிலும் பிரதிபலிக்கும் மண்ணின் பக்கம்,
   விளையுது பார் வானவில்லின் வண்ணம் மொத்தம்!
கலையெனவே மிளிருமிந்த காட்சி சுத்தம்,
   கண்டிடவே விரும்புதம்மா மனசு நித்தம்!!
                                                  
                                                                                                         

Thursday, August 2, 2012

கல்வியின் சிறப்பு


தன்னை நம்பிய நபர்களைக் கண்ணிமைப் போல் காக்கும்,
கன்னலென இனிக்கும், கனியெனவே சுவைக்கும்,
அன்னையைப் போல் அரவணைக்கும், அன்றிலெனவே உடனிருக்கும்,
வென்றிடவே துணை நிற்கும், வெண்ணிலவாய்க் குளிர்விக்கும்,
தன்னுள் இருக்கும் திறமைகளைத் தனித்தனியாய் வகைப்படுத்தும்
உள்ளுணர்வாய் உடன் நிற்கும், உயர்ந்தோங்க வழிவகுக்கும்
சிறப்புகள் யாவையும் தேடித்தரும் சிறப்பே!
நீ என்ன மொழியா?
            அறிவா?
            அழகா? 
            அமைதியா?
            ஆனந்தமா?
அனைத்தையும் உன்னுள் அடக்கிய நீ யார்?
உன்னை என்னால் உணர முடிகின்றது
நன்றாக என்னால் அறிய முடிகின்றது.

என்னை எனக்குக் காட்டிக் கொடுத்ததே நீதானே!
உன்னால் தான் என்னை நான் இவ்வுலகிற்குக் காட்டினேன்!
காட்டிக் கொடுப்பது குற்றமாமே!  இது குற்றமா?
இல்லவே இல்லை!
களங்கத்தை ஏற்படுத்தினால் குற்றம்!
அறியாமையை வளர்த்தால் குற்றம்!
நீயோ, களங்கத்தைப் போக்கினாய்!
அறியாமையை நீக்கினாய்!
ஒழுக்கத்தை உள்விதைத்து ஒழுங்கற்ற வடிவம் தந்தாய்!
என்னை நானே வடித்தெடுக்க ஏற்றதோர் உளியுமானாய்!
அறங்கள் எனும் வரங்களாலே வார்த்தெடுத்தேன் என்னையும் நான்!
ஸ்வரங்களென உள்ளிருந்து சுகராகம் மீட்டுகின்றாய்!
ஆத்ம சுகம் கண்டு கொண்டேன்
அழியா வரம் பெற்று விட்டேன்
சூட்சமத்தை உணர்ந்து கொண்டேன், சுடர் உலகே! விழி மலர்க!
எல்லையில்லா வானம் போல் எல்லையில்லாதது கல்வி!
கல்வி இல்லாதோர் எவரும் இல்லையென சொல்லும் வண்ணம் கல்!
கற்க கசடு அற!!
கல்வி அமுதை உண்டு விடு!
அழியா வடிவைப் பெற்று விடு!
வாழ்க! அறிவுச் சுடர்!
வெல்க! அறிவுத் தீவிழி!
அறிவுத் தீவிழியே! அழித்துவிடு அறிவிலியை!
அறிவுச் சுடர் ஒளியே! வளர்த்து விடு வாழ்வியலை!   

Saturday, May 21, 2011

திருக்குறளும் திருமந்திரமும்

திருக்குறளும் திருமந்திரமும்

14.05.2011 மற்றும் 15.05.2011 ஆகிய இரு தினங்களில் ‘வளர்தமிழ் ஆய்வு மன்றம்’, கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடத்திய எட்டாவது தேசிய கருத்தரங்கில் வழங்கிய கட்டுரை.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறு! (திருமந்திரம்: பாடல்-81)

முன்னுரை:

மக்கட் சமுதாயம் நலன் பெற வேண்டுமென்ற நோக்கத்தில் தான் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. ஆதிகாலந்தொட்டு இக்காலம் வரை அங்ஙனமே இலக்கியங்கள் உருவாகின்றன. படைப்பாளனின் சிந்தனையில் கருவாகின்றன. அவ்வாறு உருவானவற்றுள் எக்காலத்திலும் மறுக்க முடியாத மாறாத உண்மைகள் நின்று நிலை பேறு கொள்கின்றன. அவற்றுள் தொன்மையானவை திருக்குறளும், திருமந்திரமும் ஆகும். இவ்விரு நூல்களிலும் கூறப்பட்டுள்ள ஆழமான கருத்துகளையும் அழகான ஒற்றுமைகளையும் இவண் சிறிது ஆராய்ந்து தெளிவோம்!

ஆசிரியர் தன்மை:

திருமூலர் பதினென் சித்தர்களுள் ஒருவராவார். இவரால் படைக்கப்பட்டது சைவத் திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாகக் கொண்டாடப்படும் ‘திருமந்திரம்’ ஆகும். இந்நூல் அறநெறிகளையும், ஞான, யோக மார்க்கங்களையும் விளக்குவதாக அமைந்துள்ளது. திருமூலர், நந்தியம் பெருமானிடம் ஞான யோக மார்க்கங்களைக் கற்றுத் தேர்ந்த யோகியாவார். கூடு விட்டு கூடு பாயும் ஆற்றல் பெற்றவர். திருவள்ளுவர் கி.மு. 31ஆம் ஆண்டு தோன்றியவர் என்றும், இவர் திருக்குறளை மதுரை தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றினார் என்றும் கூறுவர். மயிலாப்பூரில் வாழ்ந்தவர். இவரது மனைவி வாசுகி அம்மையார் ஆவார். இருவரும் மனமொத்த தம்பதிகளாய் வாழ்ந்துள்ளனர். இவரைப் பற்றி பிற செய்திகள் அறியவொண்ணாமலும், சில சர்ச்சைக்கு உரியதாகவும் உள்ளன. திருமூலரும், திருவள்ளுவரும் வெவ்வேறு காலத்தவர்கள். ஆயினும் அவர்கள் படைத்த நூல்களில் கருத்தொற்றுமையை பல இடங்களில் காண முடிகின்றது. அவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

கடவுள் வாழ்த்து:

முதற் குறளிலேயே வள்ளுவர் “ஆதிபகவன் முதற்றே உலகு”(குறள்-1) எனக் குறிப்பிடுவார். எழுத்துகள் அகரத்தை முதலாகக் கொண்டமைந்ததைப் போல உலகமும் ஆதிபகவனை முதலாகக் கொண்டு அமைந்துள்ளது என்பார் வள்ளுவர். திருமூலரும் திருமந்திரத்தில் “ஆதி”, “பகவன்” எனத் தனித்தனியே சொல்லாட்சியைக் கையாண்டுள்ளார். மேலும் “படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்” என்ற பாடலில் பகவன் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார். கோயிலில் சென்று பகவனுக்குப் படைப்பது இறைவனைச் சென்று சேர்கிறதா? என்றால் அது நமக்குத் தெரியாது. ஆனால் “நடமாடக் கோயில் நம்மற்கு ஒன்று ஈயில், படமாடக் கோயில் பகவர்க்குத் தாமே” அதாவது நடமாடும் கோயில்களாக விளங்கும் மக்கட்கு உதவினால் அது இறைவனுக்கு உதவியதற்கு ஒப்பாகும். அச்செயல் இறைவனுக்குச் சென்று சேரும் எனக் குறிப்பிடுகின்றார். இது ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. “அகர முதல எழுத்தெல்லாம்...” (குறள்-1) என்ற குறட்பா அகர வடிவமானவன் இறைவன் என்று சொல்லும். இதனையே “ஆரும் அறியார் அகாரம் அவனென்று” என்று திருமந்திரம் பறைசாற்றும். “மலர்மிசை ஏகினான்” (குறள்-3) என்று குறள் இறைவனைப் போற்றும். திருமந்திரமோ “மலருறை மாதவன்” எனக் கொண்டாடும். இவ்வாறு கடவுள் வாழ்த்துப் பாடலிலேயே இரு நூல்களும் பலவாறு ஒருமித்த கருத்துகளைக் கூறுவனவாய் அமைந்துள்ளன.

வான்சிறப்பு:

உலகம் நின்று நிலவ, எங்கும் எதையும் இயக்கும் ஓர் இயக்க ஒழுங்கு இறைநிலையாய்ப் போற்றப் பட்டாலும் உயிர்கள் தழைக்க உவந்து வளம் சுரக்கும் வான் மழையும் போற்றுதற்கு உரியது தானே! ஆம்! மழையின் சிறப்பையும் இன்றியமையாத தேவைகளையும் பற்றித் திருக்குறளும் திருமந்திரமும் இனிது எடுத்து மொழிகின்றன.

“வானின் றுலகம் வழங்கி வருதலான்

தானமிழ்தம் என்றுணரற் பாற்று” (குறள்-11) வானம் மழையைப் பொழிந்து தருவதால் தூய்மையான அம்மழை நீர் உலக உயிர்களைக் காக்கும் அமிழ்தம் போன்றது என வள்ளுவர் விளக்குவார். இதனையே திருமூலர் “அமிழ்தூறும் மாமழை” எனப் போற்றுவார். வான் மழையின்றேல் பூசைகள் இல்லையெனபதை “சிறப்பொடு பூசனை...” (குறள்-18) என்ற தொடரால் வள்ளுவர் குறிப்பிடுவார். இதனையே திருமூலர் “சிறப்போடு பூநீர்...” எனக் குறிப்பிட்டுள்ளார். வான் மழையின் சிறப்பை வள்ளுவர் ஒரு அதிகாரத்தில் பத்து குறட்பாக்களின் வாயிலாகத் தெரிவிப்பதைப் போலவே திருமூலரும்

“தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்,

தானே தடவரி தண்கடல் ஆமா” என்றும் “பெயலும் மழைமுகில் பேர் நந்தி தானே” என்றும் பல பாவடிகளில் மழையின் சிறப்பினை உவந்து உரைக்கின்றார்.

நீத்தார் பெருமை:

நீத்தார் - துறந்தவர், துறவு பூண்டவர் எனப் பொருள் கொள்ளலாம். உலக வாழ்க்கையில் உலகம் நிலை பெற இறைவனும் மழையுமட்டுல்ல, துறவு ஒழுக்கம் பேணுபவர்களும் ஒரு காரணமாவர். மனிதப் பிறவியில் பிறந்தும் பிற உயிர்களைப் போலல்லாமல் உலக வாழ்வினைத் துறந்து பற்றற்று, உலக நலனைக் கருத்தில் கொண்டு வாழும் சான்றோர்களால் தான் உலகம் நல்ல வண்ணம் இயங்குகின்றது என்றால் அது மிகையாகாது.

வள்ளுவர் நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தையே படைத்துள்ளார். திருமூலரும் “இறப்பும் பிறப்பும் இருளையும் நீங்கி துறக்கும் தவங்கண்ட... அறப்பதி” என்று துறவறம் பூண்டவர்களைப் போற்றிப் பரவுகிறார்.

ஐம்புலன்களையும் மதம் கொண்ட யானைகளாக உருவகித்து அதனையடக்கும் அங்குசமாக அறிவினை உருவகிக்கின்றனர் திருவள்ளுவரும் திருமூலரும். எவ்வளவு பெரிய உண்மை. புலன்கள் ஒவ்வொன்றும் மதங்கொண்ட யானைக்குச் சமமானவை. அதனை நல்வழிப்படுத்த அறிவு எனும் அங்குசத்தைச் சரியான நேரத்தில் நாம் பயன்படுத்த வேண்டும். இன்றேல் புலன்கள் அடக்கமின்றி அலைபாய்ந்து நம் உயிர் சக்தியை வீணடித்து விடும். உயிர்ச் சக்தியை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் உடலும் உள்ளமும் பொலிவு பெறும். இன்றேல் உயிர்ச்சக்தி குறைவானால் உடல், மனம் இரண்டுமே சோர்ந்து போகும். எனவே, விழிப்புணர்வுடன் செயலாற்றக் கற்றுக் கொள்ளவேண்டும். அறிவினைப் பயன்படுத்தி புலன்களைக் காத்துக் கொள்ள வேண்டும். இதனையே, வள்ளுவர் “உரனென்னும் தோட்டியான் ஓரரைந்தும் காப்பான்” (குறள்-24) எனக் கூறுகிறார். திருமூலரும்

“முழக்கி எழுவன மும்மத வேழம்

அடக்க அறிவெனும் தோட்டியை வைத்தேன்” எனப் பாடுகிறார்.

அந்தணரின் இலக்கணம் பற்றி கூறுகையில்,

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுகலான்” (குறள்-30) எனக் குறளும்,

“அந்தணராவோர் அறுதொழில் பூண்டுளோர்

செந்தழல் ஓம்பி முப்போதும் நியமஞ்செய்” எனத் திருமந்திரமும் உரைக்கின்றன.

இவ்வாறு புலன்களை அடக்கி அந்தணராய் நின்று துறவு பூணும் சான்றோர்களின் பெருமையை திருக்குறளும் திருமந்திரமும் பகர்கின்றன.

அறன் வலியுறுத்தல்:

திருவள்ளுவரும் திருமூலரும் அறச்செயல்களையே செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றனர். “சிறப்பீனும் செல்வமும் ஈனும்” (குறள்-31) எனும் குறட்பாவின் மூலம் அறவழியில் சென்று நேர்மையான முறையிலே பொருள் ஈட்டினால் அறம் அழியாத செல்வத்தையும் சிறப்பையும் தரும் என வள்ளுவர் குறிப்பிடுவார். இதனையே திருமூலரும்

“திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்

மறந்தும் அறநெறியே ஆற்றல் வேண்டும்” எனக் கூறுகின்றார். மேலும் இயன்றவரைக்கும் அறச்செயல்களைச் செய்யவேண்டும் என “ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே” (குறள்-33) என்ற குறள் மூலம் வள்ளுவர் கூறுகிறார். திருமூலரோ “யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை” என்ற பாடலின் வாயிலாக எளிமையான வகையில் அனைவரும் இயன்ற அளவிற்கு அறம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

அறமே அழியாத துணையாய் நிற்பதாகும். “அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க” (குறள்-36) நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம், பிறிதொரு நாள் தருமம் செய்யலாம் என எண்ணி ஒதுக்கி வைக்காமல் உயிருள்ளளவும் அறவழியில் தான தருமங்களைச் செய்ய வேண்டும். ‘பிறப்பும் இறப்பும் அவன் கையிலே! நாம வாழும் வாழ்க்கை நம்ம கையிலே!’ என்று இக்காலக் கவிஞன் கூடக் குறிப்பிடுவான். இக்கருத்தினையே திருமூலரும், இறக்கும் தருவாயில் எவரும் உடன் வரார். அறமே, தர்மமே தலைக் காத்து நிற்கும் என்ற கருத்தினை “பண்டம் பெய்கூரை...” என்ற பாடலின் வாயிலாக வலியுறுத்துகின்றார். மேலும் ஒருவன் தன் வாழும் காலத்தை வீணடிக்காமல் தொடர்ந்து இயன்ற அளவு தருமம் செய்து வந்தால் அதனால் விளையக் கூடிய அறமானது, அவனுக்கு பிறவி மீண்டும் தோன்றாமலிருக்க அதன் வழியை அடைக்கும் கல்லாக இருக்குமென திருவள்ளுவரும் திருமூலரும் விளக்குகின்றனர். எவ்வாறெனில்,

“வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்”(குறள்-38)எனக் குறட்பாவும்,

“வாழ்நாள் அடைக்கும் வழியது வாமே!” எனத் திருமந்திரமும் எடுத்துரைக்கின்றன.

மனிதன் தான் எதற்காக பிறவி எடுத்தோம், எதனைச் செய்து முடிக்க வந்தோம் என்பதை அகநோக்காகக் கொண்டு அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டி தன் பிறவியைக் கழிக்க வேண்டும். மேலும் தொடர்ந்து தம் வாழ்நாள் முழுக்க அறம் செய்வதனால் மீண்டும் பிறவாமையைப் பெற முடியும் என்று இரு நூல்களும் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

இல்வாழ்க்கை:

இல்வாழ்க்கை செய்பவனுக்கு உரிய கடமைகளை வரிசைப்படுத்தி,

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் -தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”(குறள்-43) என வள்ளுவர் கூறுகிறார். இல்வாழ்க்கையில் வாழ்பவன் ஒருவனது கடமைகளாவன:

தம் முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும், அவர்களுக்குச் செய்ய வேண்டிய நியமங்களைச் சரியாகச் செய்து தான தருமங்களை செய்ய வேண்டும். இதுவே முதற் கடமையாகும்.

அடுத்து தெய்வத்தை நம்பிக்கையோடு வழிபட வேண்டும், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

மூன்றாவதாக இல்லம் தேடி வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு, உள்ள விருப்பத்தோடு வரவேற்றுப் போற்ற வேண்டும்.

நான்காவதாக உற்றார், உறவினர்களைக் காத்தல் வேண்டும்.

ஐந்தாவதாக தன் பெற்றோர், மனைவி, குழந்தைகள், மற்றும் தமக்குத் தேவையானவற்றையும் நன் முறையில் பொருள் ஈட்டுவதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்.

ஆறாவதாக, அரசனுக்கு இறை செலுத்த வேண்டும்.

இவையாவும் இல்வாழ்பவனது கடமைகளாக வள்ளுவர் வரிசைபடுத்துகிறார்.

இக்கருத்தினையே திருமூலரும், “திறந்தரு முத்தியும்...” எனத் தொடங்கி “அறைந்திடல் வேந்தனுக்கு ஆறில் ஒன்றாமே!” என முடியும் பாடலின் வாயிலாகக் கூறியுள்ளார்.

ஒவ்வொரு தனி மனிதனும் இத்தகு பொறுப்பினை பெற்றுள்ளான். பொறுப்புணர்ந்து நடப்பவர் எண்ணிக்கை அதிகமானால் சமுதாயம் மேம்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

விருந்தோம்பல்:

விருந்தோம்பல் முறையை நமக்கு விளக்கிட முனைந்த வள்ளுவர்,

“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு”(குறள்-86) என மொழிந்துள்ளார். வந்த விருந்தினர் உணவு உண்டு செல்ல, இனி விருந்தினராக யார் வருவார்கள் என எதிர்ப்பார்த்துக் காத்திருப்பவன் தேவர் உலகத்தில் மிகச் சிறந்த விருந்தினராகப் போற்றப்படுவான் என்று விருந்து போற்றுபவனின் சிறப்பை வள்ளுவர் கூறுகிறார்.

இக்கருத்தையே திருமூலர் “பார்த்திருந்து உண்பின்” எனப் பகர்கின்றார்.

விருந்து போற்றுகின்றோமானால் அது சிறந்தது. ஆனால் அதன் சிறப்பு, விருந்தினரின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். விருந்துண்பவர் நன்மக்களாயின் நற்பயன் விளையும், தீக்குணத்தோராயின் தீமையே விளையும். இக்கருத்தினை,

“இணைத்துணைத் தென்ப தொன்றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்”(குறள்-87)என்கிறது குறள்.

நல்லவர்க்குக் கொடுக்கும் விருந்தின் பயன் ‘பாத்திரம்’ என்றும் தீயவர்க்குக் கொடுக்கும் விருந்தின் பயன் ‘அபாத்திரம்’ என்றும் திருமந்திரம் விளக்கம் தரும். பாத்திரம் என்பது எள்ளளவேனும் சிவஞானியருக்கு அளித்தால் சித்தி, முத்தி, போகம் கிடைக்கும். யோகம், இயமம், நியமம் முதலியவற்றை அறிந்தவர்களுக்குத்தான் உதவுதல் வேண்டும். குருபூசை, மகேசுவர பூசை என்ற தலைப்பில் உள்ள திருமந்திரப் பாடல்கள் சிவனடியார்க்கு உணவு வழங்குவதை உயர்வாகக் கூறுகின்றன. துறவிகளுக்கு உணவு வழங்குதல் சிறப்பானது என்கிறது திருமந்திரம்.

அபாத்திரம் என்பது எவ்வளவு தான் மூடர்களுக்கு அளித்தாலும் அதனால் பலனொன்றும் இல்லை. மறுமை இன்பம் வாய்க்காது. இறைவனை வழிபடாதவருக்குக் கொடுப்பவரும், ஏற்பவரும் நரகம் புகுவர் எனத் திருமந்திரம் விளக்கம் தரும்.

நம் முன்னோர்கள் ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ எனக் கூறுவர். அக்கருத்தை ஒட்டியே திருமூலரும் திருவள்ளுவரும் உரைக்கின்றனர்.

நல்ல பக்குவமடைந்த, சித்தத் தெளிவு கொண்டோர் உணவு சமைத்தால் அத்தன்மையே உணவு உட்கொள்வோருக்கும் வரும். பக்குவமற்றவர் உணவு தயாரித்தால் அத்தன்மையையே உணவு உட்கொள்பவரும் பெறுவார் _ மகாபாரதக் கிளைக்கதை ஒன்று இதனை விளக்குவதாய் அமையும். எனவே நல்ல தன்மைகளை நாமும் வளர்த்துக் கொள்ளவேண்டும். நல்ல தன்மை உடையவரின் நலனை விரும்பிக் காக்க வேண்டும். நல்லோருடன் நட்புக் கொள்தல் வேண்டும். இக்கருத்தை ‘நல்லினம் சாரல், நயன் உணர்தல்’ எனும் இன்னிலை பாடல் மூலம் உணரலாம்.

முடிவுரை:

நலன் பயக்கும் கருத்துகளை திருக்குறளும் திருமந்திரமும் தெவிட்டாமல் தருகின்றன. இலக்கிய சுவை உணர்ந்து நாம் நம் வாழ்க்கையின் இலக்குகளை நிர்ணயிப்போம். திருவள்ளுவரின் கருத்துகளைத் திருமூலர் எடுத்தாண்டாரா அல்லது திருமூலரின் கருத்துகளை வள்ளுவர் கையாண்டாரா என்ற வினாவிற்கு விடையில்லை. இருப்பினும் பெருந்தகை சான்ற அவ்விருவர் கருத்துகளையும் செவிமடுத்து நல்ல வண்ணம் வாழவேண்டியது நம் கடமையாகும். தனிமனித ஒழுக்கம் பேணப்படவேண்டும். கல்வியை அனைவரும் முறையாகப் பெறவேண்டும். அனைவரும் உழைத்துப் பொருளீட்டி அறவழியில் நின்று பிறவிப்பயன் பெறவேண்டும். வேண்டுவது விழைவதாக! வேண்டுவது விளைவதாகட்டும்!!

நலமே நிறைக! தமிழே வளர்க!!