மிகவும்
மதிக்கத் தக்க உறவுகளில் மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் வரிசையில் மூன்றாவதாக உள்ள
குருவிற்கு அவரவர், அவரவர் விருப்பப்படி அன்பினைச் செலுத்துவர். இங்கு ஆசிரியருக்கு
அன்பு செலுத்த நம் கதை நாயகர் என்ன செய்கிறார், தமது குருபக்தியை எப்படி உலகிற்குக்
காட்டுகிறார் என்பதை இங்கு நாடக வடிவில் காணலாம்!! குருபக்தி - நாடகம் காட்சி
– 1
இடம்
– அஸ்தினாபுரம் / நேரம் –
ஓர் இரவு நேரம்
கதாபாத்திரங்கள்
: துரோணர், அர்ச்சுனன்.
அர்ச்சுனன் வில் பயிற்சி செய்துகொண்டு
இருக்கிறான். தீப்பந்தத்தை கையில் பிடித்தவாறு துரோணர் அங்கு வருகிறார்.
துரோணர்:
அர்ச்சுனா! இருளில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உன் வில்லிலிருந்து வரும் நாண் ஒலி கேட்டே இங்கு வந்தேன்.
அர்ச்சுனன்:
மன்னிக்க வேண்டும் குருதேவா! அன்று உண்வருந்தும் பொழுது காற்றினால் விளக்குகள் அணைந்து
போயின. இருப்பினும் உணவினைக் கைகளால் எடுத்து வாயில் போட யாதொரு தடையும் ஏற்படவில்லை.
அதற்குக் காரணம் நமது கைப்பயிற்சி தானே! அதே போல இருளிலும் வில் பயிற்சி செய்து பழகினால்
என்ன எனத் தோன்றியது! அதுதான்…… தங்களிடம் சொல்லாமல் வந்ததற்கு
மன்னிக்க வேண்டுகிறேன்.
துரோணர்: மெத்த
மகிழ்ச்சி அர்ச்சுனா! உனது ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். உலகிலேயே மிகச் சிறந்த வில்லாளியாக
உன்னை நான் உருவாக்குவேன். இது சத்தியம்!
அர்ச்சுனன்:
நன்றி குருதேவா! நான் மிகவும் பாக்கியம் செய்தவன். நல்லாசி கூறுங்கள்!
துரோணர்: நலமடைவாய்!
வா போகலாம்.
காட்சி – 2
இடம் –
துரோணர் இல்லம் / நேரம் – பகல் நேரம்
கதாபாத்திரங்கள் : ஏகலைவன், துரோணர்.
ஏகலைவன்: வணக்கம்
குருதேவா!
துரோணர்:
யாரப்பா நீ? என்ன வேண்டும் உனக்கு?
ஏகலைவன்:
காட்டரசன் இரண்யதனுசின் மகன் நான். ஏகலைவன் எனது பெயர். தங்களிடம் வில் பயிற்சி பெறவேண்டும்
என்னும் விருப்பத்துடன் உங்களை நாடி வந்துள்ளேன். என்னைச் சீடனாக ஏற்றுக்கொண்டு பயிற்சி
தர வேண்டுகிறேன். (மண்டியிட்டு வணங்குதல்)
துரோணர்:
(யோசனையுடன்….)
எழுந்திரு ஏகலைவா! கல்வி தேடி என்னை நாடி வந்த உன்னை ஊதாசீனப் படுத்தக் கூடாது.
ஆனால் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பயிற்சி தரவே நேரம் போதுவதில்லை. இருப்பினும் உன்னை என் சீடனாக ஏற்றுக்
கொள்கிறேன். எப்போதும் வில் பயிற்சி செய்பவனாய் பலமுள்ளவனாய் இரு. இப்போது உன் வீட்டிற்குத்
திரும்பிச் செல்! பூரண நல்லாசிகள்!!
ஏகலைவன்:
நன்றி குருதேவா! தங்களையே மானசீக குருவாக ஏற்றுக் கொண்டேன். (தங்கள் உருவத்தின் முன்னால்
பயிற்சி செய்வேன்! வழிகாட்டுவீராக!! என மனதில் நினைத்தபடி வணங்கிச் செல்கிறான்.)
காட்சி – 3
இடம் –
பயிற்சிக்களம்
கதாபாத்திரங்கள்: துரோணர், அர்ச்சுனன்,
நாரதர், நகுலன், சகாதேவன் மற்றும் சீடர்கள்.
துரோணர்: சீடர்களே!
எந்த அளவில் பயிற்சி செய்திருக்கின்றீர்கள்!
சீடர்கள்:
வணக்கம் குருதேவா!
அர்ச்சுனன்:
குருதேவா! எந்தவொரு பொருளையும் கண்களால் பார்த்து குறி வைக்க முடிகின்றது. ஆனால் ஒலி
அலையினை உணர்ந்து அம்பு எய்துவதில் சரியான முன்னேற்றம் இன்னும் இல்லை ஐயனே!
துரோணர்:
நன்று! நன்று! கவலைப் படாதே மகனே! கொஞ்சம் கொஞ்சமாகத்தானே பயிற்சியில் வெற்றிபெற முடியும்!
அயர்ந்து விடாமல் தொடர்ந்து முயற்சி செய்! வெற்றி பெறுவாய்!
அர்ச்சுனன்:
நன்றி குருதேவா! நிச்சயம் தங்கள் ஆசியோடு வெற்றி பெறுவேன்!
நகுலன்:
குருதேவா! எனக்கும் பயிற்சி செய்ய வேண்டும்!
சகாதேவன்:
குருவே! நாங்களும் தீவிர பயிற்சி செய்கிறோம்.
துரோணர்:
நன்று! நன்று! தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்!
(நாரதர் வருகை)
நாரதர்:
நாராயண! நாராயண!!
துரோணர்:
வாருங்கள் மகரிஷி! வணங்குகிறேன்.
சீடர்கள்:
வணக்கம் மகிரிஷி!
நாரதர்:
ம் ம்….
வணக்கம்! வணக்கம்!! மங்கலம் உண்டாகட்டும்.. துரோணாச்சாரியாரே! உமது சீடர்கள் தீவிர
பயிற்சி செய்கிறார்கள் போலும்!....
துரோணர்:
எல்லாம் தங்கள் ஆசிதான் மகிரிஷியே!
நாரதர்:
உமது சீடர்களில் உயர்ந்தவன் யாரெனச் சொல்ல முடியுமா? துரோணரே!
துரோணர்:
ஒவ்வொரு சீடனும் ஒவ்வொரு வித்தையில் சிறந்தவன். தருமன் தருமத்தில் சிறந்தவன், பீமன்
கதையில் மல்யுத்தத்தில் சிறந்தவன், நகுலன் குதிரையேற்றத்தில் சிறந்தவன், சகாதேவன் ஆருடத்தில்
சிறந்தவன்.
நாரதர்:
அப்படியானால் வில் வித்தையில் சிறந்தவன்……
துரோணர்:
நிச்சயமாக….. எமது சீடர்களில் வில் வித்தையில் சிறந்தவன்
அர்ச்சுனன் தான் நாரதரே!
நாரதர்:
நாராயண! நாராயண!! அது சரி, உமக்கு விஷயமே தெரியாதா? காட்டுக்குள் உமக்கு ஒரு சீடன்
இருக்கிறான். அவன் அர்ச்சுனனை விட வில் வித்தையில் சிறந்தவன் போலத் தெரிகிறதே!
துரோணர்:
என்ன! காட்டிற்குள் எனக்கொரு சீடனா? அதுவும் எனக்குத் தெரியாமலா?
சீடர்கள்:
என்ன? அர்ச்சுனனை விட வில் வித்தையில் சிறந்தவனா?
நாரதர்:
ஆமாம்! ஆமாம்! நாராயண! நாராயண!!
அர்ச்சுனன்:
எப்படிச் சொல்கிறீர்கள் மகிரிஷி! என்னை விட சிறந்தவனென்று!
நாரதர்:
பொறுமை! பொறுமை! துரோணரே, நேற்று வான் வழியே சத்யலோகம் சென்று கொண்டிருந்தேன். காட்டிற்குள்
தங்களைப் போலவே பதுமை ஒன்று இருக்கக் கண்டேன். அதன் முன்னால் வேட்டுவச் சிறுவனொருவன்
வில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். தீவிரப் பயிற்சி.
அப்பொழுது
நரியொன்று ஊளையிட்டது. அதன் சப்தம் அவ்வீரனின் கவனத்தைத் திசைத் திருப்பியது. இருந்த
இடத்திலிருந்து ஒலி வந்த திசையை நோக்கி அம்புகளை சரமாரியாக எய்தான் பாருங்கள்! ஏழு
பானங்கள் குறுக்கும் நெடுக்குமாக நரியின் வாயைத் திறக்க முடியாமல் அம்புகளால் கட்டிவிட்டான்
போங்கள்!
ஆச்சரியத்தில்
உறைந்து போனேன்! நாராயண! நாராயண!
துரோணர்:
எனக்கு மட்டும் தெரிந்த அந்த வித்தையை அவ்வேட்டுவச் சிறுவன் எப்படிக் கற்றான்? என்னைத்
தவிர வேறு யார் இதனைக் கற்றுத் தந்திருக்க முடியும்?
அர்ச்சுனன்:
குருவே! எனக்குக் கை வராத பயிற்சி அல்லவோ அது? ஒலி வந்த திசையைக் குறித்து அம்பு எய்கிறான்
என்றால் உண்மையில் அவன் என்னைவிட வில் வித்தையில் மிகவும் பலசாலியே!
நகுலன், சகாதேவன்:
அடேங்கப்பா! ஒலி வந்த திசையை நோக்கி குறிவைத்து எய்துவதா? அதுவும் சாத்தியமா?
துரோணர்:
ஏனில்லை! ஒலியின் அலையைக் கவனித்து ஆயுதங்களைப் பிரயோகிக்கும் பயிற்சியை உங்களுக்கு
இனிதான் வழங்கப் போகிறேன்! ஆமாம் நாரதரே! அவன் யார்? அவன் பெயரென்ன? அவன் குருநாதர்
யார்? நாங்கள் தெரிந்து கொள்ளலாமா மகிரிஷியே?
நாரதர்:
ஹா..ஹா..ஹா… நாராயண! நாராயண! துரோணரே! அவன் காட்டரசன்
இரண்யதனுசின் புதல்வன். பெயர் ஏகலைவன். அவன் தங்களின் தலையாயச் சீடன். தங்களை மானசீகமாக
குருவாக ஏற்றுக் கொண்டு உங்களது கலைகளையும் யுக்திகளையும் தானாகக் கற்றுப் பயிற்சி
செய்து தேர்ந்தவன். அர்ச்சுனனைக் காட்டிலும் வில்லில் அவனே சிறந்தவன்.
துரோணர்: ஆமாம்
ஆமாம்! ஒரு முறை அவ்வேட்டுவச் சிறுவன் என்னிடம் வந்து வில் வித்தை கற்றுத் தர வேண்டுமென்று
கேட்டான். நான் தான், நேரம் போதவில்லை என்று கூறி வீட்டிற்குச் சென்று பயிற்சி செய்யுமாறு
திருப்பி அனுப்பினேன்.
மகிரிஷியே!
உலகிலேயே சிறந்த வில்லாளனாக அர்ச்சுனனை உருவாக்குவேன் என வாக்குக் கொடுத்துள்ளேன்.
இடையிலே இந்த வேட்டுவச் சிறுவன் என் வாக்கை பொய்ப்பித்து விடுவான் போலுள்ளதே! இந்த
சிக்கலில் இருந்து வெளிவர ஒரு உபாயம் அருளும்!
உமக்குப் புண்ணியமாய் போகட்டும்!
நாரதர்:
நாராயண! நாராயண! அப்படியா யோசிக்கின்றீர்! நீரே அவனை நேரில் சென்று பாரும்! அர்ச்சுனனை
மட்டும் உடன் அழைத்துச் செல்லும்! பேசிப் பாரும், மீண்டும் சந்திப்போம்! நாராயண! நாராயண!
சீடர்கள்:
நன்றி மகிரிஷி! வணங்குகிறோம்.
நாரதர்:
வெற்றி நிச்சயம்! நாராயண! நாராயண!
காட்சி – 4
இடம் –
காடு
கதாபாத்திரங்கள்: துரோணர், அர்ச்சுனன்,
நாரதர், ஏகலைவன்.
துரோணரைப் போன்ற பதுமையின் முன் வணங்கி
விட்டு வில் பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறான் ஏகலைவன். துரோணரின் வருகையைக் கண்டவுடன்……
ஏகலைவன்: வணக்கம்
குருதேவா! வரவேண்டும்! வரவேண்டும்! தங்கள் வருகையினால் இவ்விடம் மிகவும் புண்ணியம்
பெற்றது! வாழ்த்துங்கள் குருவே!
துரோணர்:
நலமுண்டாகட்டும்! ஏகலைவா, இதென்ன! எனது பிரதிமையை வைத்துக்கொண்டு வணங்குகிறாய்! எவ்வாறு
வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய்?
ஏகலைவன்: குருவே!
தினமும் தங்கள் பதுமையின் முன் வணங்கி சில நிமிடங்கள் தியானிப்பேன். உள்ளத்தில் எழும்
எண்ண அலைகளைத் தங்களது கட்டளையாக ஏற்று பயிற்சி செய்வேன் குருவே! வில் வித்தையில் ஓரளவு
தேர்ச்சி பெற்றுவிட்டேன்! மேலும் திறமையில் மேம்பட ஆசிர்வதியுங்கள் குருவே!
துரோணர்: நல்லது! நல்லது! எமது ஆசிகள் உமக்கு என்றும் உண்டு.
அர்ச்சுனன்: குருவே!
நாரதர் கூறிய செய்தி உண்மைதான் போலுள்ளதே! என்ன செய்யப் போகிறீர்கள்?
துரோணர்: பொறு!
பொறு! அர்ச்சுனா! …….. ஏகலைவா!
ஏகலைவன்: குருவே!
துரோணர்: என்னை
நீ குருவாக ஏற்றுக் கொண்டது உண்மைதானா?
ஏகலைவன்: அதிலென்ன
சந்தேகம் குருவே! தாங்கள்தான் என் குருநாதர்.
துரோணர்: அப்படியானால்
குருகாணிக்கைத் தருவாயா?
ஏகலைவன்: கட்டளையிடுங்கள்
குருவே! உடனே நிறைவேற்றுகிறேன்!
துரோணர்: உனது
வலக்கைக் கட்டைவிரலை எனக்கு காணிக்கையாக தந்துவிடு மகனே!
ஏகலைவன்: இவ்வளவுதானா!
நொடியில் நிறைவேற்றுகிறேன். இதோ என் வலக்கை கட்டை விரல்! (வாளால் வெட்டி வீழ்த்துகிறான்)
(நாரதர் வருகை)
நாரதர்:
நாராயண! நாராயண!!
துரோணரும் அர்ச்சுனனும்: வாருங்கள் மகரிஷியே! வணங்குகிறோம்.
நாரதர்: நலமடைவீராக!
என்ன துரோணரே! ஏகலைவன் குருகாணிக்கை தந்துவிட்டான் போலிருக்கிறதே!
ஏகலைவன்: ஐயா!
மகிரிஷியே, தேவகுருவே! குருகேட்கும் காணிக்கையை உடனே தருவது தானே சீடனுக்கு அழகு!
நாரதர்: நன்றாகச்
சொன்னாய் ஏகலைவா.
துரோணர்: ஏகலைவன்,
என்னை உண்மையாக மதித்துக் காணிக்கை செலுத்தி உள்ளான். அவன் நீடுழி வாழ்க! அவன் வித்தை
வளர்க!
நாரதர்: நாராயண!
நாராயண!! தங்கள் வாக்கு பலிக்கும். யாவரும் நலமடையுங்கள். நான் வருகிறேன். நாராயண!
நாராயண!!
துரோணரும் அர்ச்சுனனும்: நன்றி மகிரிஷியே! நன்றி!
துரோணரும் அர்ச்சுனனும் அரண்மனைக்குத்
திரும்பினர்.
துரோணர்: பார்த்தாயா
அர்ச்சுனா! ஏகலைவனின் குருபக்தியை!!
அர்ச்சுனன்: ஆமாம்
குருவே! ஏகலைவனின் செயலைக்கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.
துரோணர்: வில்
வித்தையில் சிறப்பானவனாக இருக்கவேண்டுமானால்
கட்டைவிரல் அவசியமானது. அதனையும் நான் கேட்டவுடன் தயங்காமல் தந்து விட்டான்
பார்த்தாயா! ஏகலைவன் சிறந்த மாணவன்!
அர்ச்சுனன்: ஆமாம்
குருவே, மிகச் சிறந்தவன் தான் அவன்!
துரோணர்: இனி
உனக்குப் போட்டியாக யாருமே இல்லை. நீயே உலகில் சிறந்த வில்லாளன்! போதுமா?
அர்ச்சுனன்: மிகவும்
நன்றி குருதேவா! (வணங்குகின்றான்)
துரோணர்: நீடுழி
வாழ்க!
காட்சி - 5
சில மாதங்களுக்குப் பிறகு ஒரு மாலை நேரம்.
இடம் –
துரோணர் வீடு
கதாபாத்திரங்கள்: துரோணர், அர்ச்சுனன்
அர்ச்சுனன்: குருதேவா!
குருதேவா! நாம் ஏமாந்துவிட்டோம். ஏகலைவன் தங்களை நன்றாக ஏமாற்றிவிட்டான்!
துரோணர்: என்ன
சொல்கிறாய் அர்ச்சுனா? ஏன் இந்த பதட்டம்? எதற்கு இந்த முடிவுக்கு வந்தாய்?
அர்ச்சுனன்: ஆமாம்
குருவே! நாம் ஏமாந்துதான் போய்விட்டோம். இன்னொரு முறை ஏகலைவனின் வில் திறமையை நேரில்
பார்த்ததே காரணம்.
துரோணர்: என்ன!
வலக்கை கட்டை விரலை வெட்டியும் வில் வித்தையில் சிறப்பான பயிற்சியோடு இருக்கின்றானா?
என்ன ஆச்சரியம்! என்ன சொல்கிறாய் நீ? இது சாத்தியம் தானா?
அர்ச்சுனன்: ஆமாம்
குருவே, நேற்று இரவு பசுவைக் கொல்ல வந்த புலியை
முன்பு போலவே அம்புகளால் புலியின் வாயைக் கட்டி, அப்பசுவினை ஏகலைவன் காப்பாற்றியதை
நானே என் கண்களால் நிலவொளியில் கண்டேன் குருதேவா! ஏகலைவன் ஏதோ ஏமாற்றிவிட்டான் என்றே
நினைக்கிறேன்.
துரோணர்: இல்லை
அர்ச்சுனா, ஒருபோதும் இருக்காது. என் சீடர்கள் யாரும் பொய்யர்கள் அல்லர். எனினும் நீ
கூறுவது சிறிது சங்கடமாகவே உள்ளது. நாளை சென்று ஏகலைவனைக் கண்டு, உண்மையைக் கேட்டும்
பார்த்தும் வரலாம், சரியா. நீ ஒன்றும் பதற வேண்டாம்.
அர்ச்சுனன்: சரி
குருவே, தங்கள் சித்தம் போலவே செய்யலாம். எனக்கு விடை கொடுங்கள்.
துரோணர்: சென்று
வா அர்ச்சுனா! நாளை எல்லாம் தெளிவாகி விடும். போய் வா மகனே! போய் வா!
அர்ச்சுனன்: வருகிறேன்
குருவே, நன்றி! நாளைப் பார்க்கலாம்!
காட்சி – 6
இடம் - காடு
கதாபாத்திரங்கள்: துரோணர், அர்ச்சுனன்
மற்றும் ஏகலைவன்.
ஏகலைவன் குருவின் சிலையின் முன் வணங்கிவிட்டு
விற்பயிற்சியில் ஈடுபடுகிறான். அச்சமயம் அங்கு வந்த துரோணரையும் அர்ச்சுனனையும் பார்த்து
வணங்கி நிற்கிறான்.
ஏகலைவன்: வாருங்கள்
ஐயனே! வணக்கம்!
துரோணர்: வாழ்க
ஏகலைவா! இப்படி உன்னை ஒன்பது விரல்களோடு வணங்குபடி செய்துவிட்டேனே! வருந்துகிறேன் ஏகலைவா!
வருந்துகிறேன்!
ஏகலைவன்: அதெல்லாம்
ஒன்றுமில்லை குருவே! தங்கள் சித்தம் என் பாக்கியம் அல்லவா? நான் மிகவும் மகிழ்ந்து
போகிறேன் குருவே!
துரோணர்: அது
சரி ஏகலைவா, உன் வலக்கை கட்டைவிரலை இழந்த பின்னும் எப்படி நேற்று புலியின் வாயைக் கட்டினாய்?
அது எப்படி உனக்கு சாத்தியமானது?
ஏகலைவன்:
தங்களாசி இருக்குபோது எது தான் சாத்தியப்படாது. அனைத்தும் சாத்தியமே! மேலும் நீங்கள்
வலக்கை கட்டை விரலைத்தானே கேட்டீர்கள்! நான் இடக்கை வழக்கம் உள்ளவன். அதனால்தான் எந்த
ஒரு பாதிப்பும் எனக்கு இல்லை குருவே!
(துரோணரும் அர்ச்சுனனும் திகைத்துப் போகிறார்கள்)
துரோணர்: என்ன?
இடக்கைப் பழக்கம் உடையவனா நீ?
ஏகலைவன்: ஆமாம்
குருதேவா! சரி அதெல்லாம் இருக்கட்டும், தற்போது என்னைத் தேடி வந்த காரணம் என்ன ஐயனே!
தயங்காமல் கூறுங்கள்.
துரோணர்:
(குற்ற உணர்வுடன்) என்னை மன்னித்து விடு
ஏகலைவா….!
என்னை மன்னித்துவிடு!
ஏகலைவன்:
குருநாதா! என்ன இது? நான் உங்களை மன்னிப்பதா? எதற்கு பெரிய வார்த்தை எல்லாம் சொல்கிறீர்கள்?
வேண்டாம் குருவே, வேண்டாம்!
துரோணர்:
இல்லை மகனே! அர்ச்சுனனை சிறந்த வில்லாளன் ஆக்கும் நோக்கத்தில் உன் வித்தையைப் பறிக்க
எண்ணியே வலக்கை கட்டை விரலைக் கேட்டேன். ஆனால் ஆண்டவன் என்னைத் தண்டித்து என் தவறை உணர்த்திவிட்டான்.
அர்ச்சுனன்:
எனது தகுதியையும் உணர்த்திவிட்டான் ஆண்டவன். என்னையும் மன்னித்துவிடு ஏகலைவா! என்னையும்
மன்னித்துவிடு!
ஏகலைவன்:
இல்லை! இல்லை! …… குருவே!
தங்களின் உள்ளக்கருத்தை அறியாதவன் ஆகிவிட்டேன். மன்னியுங்கள்! உங்களின் விருப்பத்தினை
நான் அன்றே அறிந்திருந்தால் எனது கை, கால் அனைத்து விரல்களையுமே தந்திருப்பேனே! ஏன்,
இப்போதென்ன ஆகிவிட்டது! இக்கணமே என் கை கால் விரல்கள் அனைத்தையுமே தங்களுக்கு தந்து
விடுகிறேன். ( எனக் கூறியவாறு வாளை உருவுகிறான்)
துரோணரும் அர்ச்சுனனும்:
(பதறியவாறு) வேண்டாம் ஏகலைவா! வேண்டாம்!
அத்தகு பாவச் செயலை மீண்டும் செய்து விடாதே!
(ஏகலைவன் யோசித்தபடியே சற்று நடந்தான்.
பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக துரோணரை வணங்குகிறான்)
ஏகலைவன்:
குருவே!
துரோணர்:
என்ன மகனே.
ஏகலைவன்:
எனது மானசீக குருவான உங்களுக்கு மேலும் ஒரு தட்சணை தர விரும்புகின்றேன். அர்ச்சுனனைச்
சிறந்த வில்லாளன் ஆக்க வேண்டுமென்ற தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற என்னாலான சிறு முயற்சியாக
இது அமையட்டும்!
ஆம்
குருதேவா, இனி வில்லையும் அம்பையும் நான் எக்காரணத்தைக் கொண்டும் தொடவே மாட்டேன். என்
வேட்டைத் தொழிலுக்குக் கூட குத்துக் கம்பு, ஈட்டி, வாள், கத்தி போன்றவறையே பயன்படுத்துவேன்.
என்னை வாழ்த்துங்கள் குருவே!!
துரோணர்:
மகனே ஏகலைவா! என்னே உன் தர்ம சிந்தனை!! உனது தியாகம் என்னை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.
யார் வேண்டுமானாலும் சிறந்த சீடனாக இருக்கலாம். ஆனால் எந்தச் சீடனும் குருபக்தியில்
உன்னை விஞ்சமுடியாது. எங்களையெல்லாம் வெட்கப்பட வைத்துவிட்டாய்.
வீரத்துக்கும்
தியாகத்துக்கும் நற்பண்புகளுக்கும் குலம் ஒரு தடையல்ல என்பதை எங்களுக்கு உணர்த்திவிட்டாய்.
பாண்டவர்களையும்
கௌரவர்களையும் விட குருபக்தியில் நீ விஞ்சிவிட்டாய்! ஏன்? சிறந்த வீரன் கர்ணனையும்
விட நீ உயர்ந்தவனப்பா! உன் பெருமை வரலாற்றில் என்றும் நிலைக்கட்டும்!
ஏகலைவன்:
நன்றி குருதேவா! நன்றி!! தங்கள் சித்தம் என் பாக்கியம்!!
அர்ச்சுனன்:
மிக்க நன்றி ஏகலைவா! குருவே வாழ்க!..... வாழ்க வாழ்க!!
துரோணர்:
கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்! நீடுழி வாழ்க!!!
பார்த்தீர்களா
மாணவச் செல்வங்களே! ஆசிரியர் உடனிருந்து பயின்ற மாணவனைக் காட்டிலும் தன்னார்வம் மிக்கு
விருப்பம் கொண்டு முயற்சியும் அதற்கேற்றப் பயிற்சியும் பெற்றதனால் மிகச் சிறந்த வில்லாளனாகவும்
குருபக்தியில் சிறந்தவனாகவும் வரலாற்றில் நீங்கா இடம் பெற்று விட்டான் ஏகலைவன்! நமக்காகவும்
வரலாற்றின் பக்கங்கள் காத்துக் கொண்டுதான் இருக்கின்றன. நாமும் ஆர்வமுடன் விருப்பும்
முயற்சியும் பயிற்சியும் செய்து முன்னேற்றப் பாதையில் வரலாற்றின் பக்கங்களில் நமது
முத்திரையைப் பதிப்போம் வாருங்கள்!!!
குறிப்பு:
நாடகம் : மகாபாரதத்தில்
ஒரு பகுதி
நாடக ஆக்கம் : மு.
கவிதாராணி, தமிழ்த்துறை