"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Sunday, August 30, 2009

மரம் வளர்ப்போம் ; நலம் பெறுவோம் !




மரம் வளர்ப்போம், நலம் பெறுவோம் என்பது இந்நாட்டின் இன்றைய தேவைகளுள் ஒன்றாகும். ஒரு ஆய்வுக் கட்டுரை சொல்கிறது இப்படியே இன்னும் பத்து ஆண்டுகள் போனால் தமிழகமே பாலைவனம் ஆகிவிடுமாம். இதனைத் தடுக்கத் தான் பல அமைப்புகள் ஆங்காங்கு மரம் வளர்க்க ஏற்பாடு செய்கின்றன. இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை இலவசமாகக் கொடுத்து மரங்கள் வளர்க்க ஆவன செய்கின்றன.

“வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்பது அன்றைய வாசகம், ஆளுக்கொரு மரம் வளர்க்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. மரங்கள் இயற்கையின் கொடை. இயற்கை அன்னையின் மடியில் மலர்ந்த முதல் குழந்தை தாவரம் தானே! அவற்றை நாம் இல்லாமல் செய்யலாமா? அப்படிச் செய்தால் நன்றி கெட்டவர்கள் ஆகிவிட மாட்டோமா? வேண்டாம், நாம் நமக்காக மட்டும் சிந்திப்பதை நிறுத்திவிட்டு உலக நலனையும், எதிர்காலச் சந்ததிகளின் தேவையையும் சேர்த்து சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.இதனைத்தான் தொலைநோக்குப் பார்வை என்றும் பொது நல சிந்தனை என்றும் கூறுகின்றனர்.

சுயநலத்தின் பிடியில் சிக்கிய மானிட சமுதாயம் இயற்கையை அழித்து, மரங்களை வெட்டி, காடுகளைக் குறைத்து தன் தலையில் தானே தீ வைத்துக் கொள்கிறது. இவ்வறிவற்றச் செயலைத் தடுக்க வேண்டும். இத்தருணத்தில் மரங்களின் நலனையும், பயனையும் சிந்திக்கத் தந்தது மிகவும் சரியானதே!

மரங்களினால் கிடைக்கும் நன்மைகள் :
தொழில் வளர்ச்சியினாலும், பல மின் சாதனங்களைப் பயன் படுத்துவதனாலும் மாசு நிறைந்த இச்சூழலினைத் தூய்மையாக்குபவை மரங்களே! ‘மரங்கள் ஆக்ஸிஜன் தொழிற்சாலை’ என்ற வாசகம் நாம் அறிந்ததே அல்லவா! ஆம், மரங்கள் காற்றினை தூய்மை செய்கின்றன, மேலும் நிழலைத் தருகின்றன. ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்பது பொன்மொழி. வெப்பம் அதிகமாகக் காணப்படக் காரணம் என்ன? நாம் மரங்களை அழித்ததும், அதனால் ஏற்பட்ட நிழலின்மையுமே காரணமாகும்.
எனவே மரங்களை வளர்க்க வேண்டும். மரங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளின் புகலிடமாய் விளங்குகின்றன. மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கின்றன. நிலத்தடி நீர் அமைய உதவுகின்றன. நீர் ஆவியாகி மேகமாகி மழையாகப் பெய்ய பெரிதும் துணை செய்பவை மரங்களே!

மரங்கள் நமக்கு பூ, காய், கனி, கீரை போன்ற உணவு வகைகளைத் தருகின்றன. அதுமட்டுமா சிறந்த மருந்துகளையும் உருவாக்க உதவுகின்றன. மேலும் கப்பல் கட்டுவதற்கும், மரவேலைப்பாடு நிறைந்த பெரிய பொருட்கள் முதல் தீக்குச்சி, தீப்பெட்டி போன்ற சிறிய பொருட்கள் வரை பல வகையான பொருள்களைத் தயாரிக்கவும் உதவுகின்றன.

இவ்வாறு பல வகையில் உதவும் மரங்களை நாம் வளர்க்க வேண்டும். நிறைய மரங்களை வளர்த்து காடுகளை உருவாக்க வேண்டும்.. இவை நம் நாட்டின் செல்வங்கள். அக்காலத்தில் தாத்தா மரம் நட்டால் பேரன் பயனடைவான். இக்காலத்தில் மரத்தினை வைத்தவனே பயனையும் துய்க்க ஆசைப்படுகிறான். இதுதான் இன்றைய நிலை. விஞ்ஞானத்தினால் முடியாதது என்ன? செயற்கை உரங்களைச் சேர்த்து உடன் பயனெய்த வழிவகை செய்கிறோம். ஆனால் அதன் பயனும் நமக்கு குறைந்த அளவிலேயே நன்மை தருகின்றது என்பது வெள்ளிடை மலை அல்லவா? ஏன் இந்த அவசர கதி? மனிதனின் பொறுமை என்னவாயிற்று? நிதானம் எங்கே போயிற்று? நிதானம் பிரதானம் அல்லவா! எனவே எல்லோரும் இதை நினைவில் கொள்ளவேண்டும்.

இயற்கையின் வழியில் செல்வோம்! மரங்களையும், பயனுள்ள செடி, கொடிகளையும் வளர்ப்போம்! பயன் பெறுவோம்! பசுமை பாரதத்தை உருவாக்குவோம்!!

Monday, August 17, 2009

சுற்றுச் சூழல் அவசியம்


முன்னுரை :

சுற்றுச்சூழலைக் காத்திடுவோம்!
சுகமாய் வாழ வழிவகுப்போம்!
வெற்று வார்த்தை இதுவல்ல,
விளையும் நன்மையோ பலப் பல!
- பி.வி.கிரி.

இன்றைய சூழ்நிலையில் எல்லோர் இதயத்திலும் இருக்க வேண்டிய கருத்து இதுவேயாகும்.


சுற்றுச்சூழல் :

நம்மைச் சுற்றியுள்ள உயிருள்ள, உயிரற்றப் பொருள்களின் தொகுப்பே சுற்றுச்சூழலாகும். பெருகி வரும் விஞ்ஞான வளர்ச்சியால் விளைந்த நன்மைகளையும் தீமைகளையும் ஆராய்ந்து பார்த்தால் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே விஞ்சி நிற்கின்றன.


அன்றைய நிலை :

பண்டைக்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் நிறைந்த முழுமையான மெய்யுணர்வினைப் பெற்றிருந்தான். அவனிடம் தொலைநோக்குப் பார்வை, தன்னலமற்றத் தன்மை நிறைந்து காணப்பட்டது. அதன் விளைவாய் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கி அமைதியான அர்த்தமுள்ள வாழ்க்கையினை வாழ்ந்து காட்டினான்.

இன்றைய நிலை :

மெய்ஞானம் ஒடுங்கி விஞ்ஞானம் தலைதூக்கியது. கேள்விகளே அறிவின் விழிப்புநிலை என்ற எண்ணத்தின் அடிப்படையில் அமைதி போயிற்று. வெற்று ஆரவாரங்கள் தலை தூக்கின. பொதுநல நோக்கற்ற தொலைநோக்குப் பார்வையற்ற சுயநலச் சமுதாயம் வேரூன்றியது. விளைவு?...... இவ்வாறு விளைந்ததுதான் இருபதாம் நூற்றாண்டு.

நிகழவேண்டிய மாற்றம் :

இன்றைய சூழ்நிலையை நான் சொல்ல வேண்டியதில்லை. அனைவரும் அறிந்ததே. நாம் வசிக்கும் இந்த உலகை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஐம்பெரும் பூதங்களுக்கும் கேடு விளையாவண்ணம் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளல் வேண்டும். மனித இனத்தின் அறிவின் முதிர்ச்சியால் தாவரங்கள், பறவைகள், விலங்குகள், இயற்கையின் செல்வமாகிய காடுகள், ஆறுகள், அருவிகள், மலைகள் இவையாவற்றின் நலன் குறையலாமோ?

நாம் இயற்கையைப் பாதுகாத்தால், நம்மையும் இயற்கை பாதுகாக்கும். தூய்மை, ஒழுக்கம், நேர்மை, வாய்மை, அடக்கம் நிறைந்த மனித சமுதாயம் மீண்டும் உயிர்த்தெழ வேண்டும். நலம் யாவும் வழங்கும் நல்லதொரு சூழ்நிலை உருவாக்கவேண்டும்.

முடிவுரை :

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு”
என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க நல்லதொரு சூழலை உருவாக்க எண்ணித் துணியுங்கள்! வெற்றி நிச்சயம்!!


குறிப்பு :
ஏர்டெல் நிறுவனம், ஈரோடு காஸ்மாஸ் ரோட்டரி சங்கம், அலோஹா மற்றும் போம்சி பிஸ்கட் இணைந்து நடத்திய மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை.

Sunday, August 9, 2009

அருந்தலைவர் அப்துல்கலாம் ஐயா அவர்களுக்கு ………



ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் ‘புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவிற்கு நமது முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் ஐயா அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்.
இடம் : வ.உ. சி. பூங்கா மைதானம், ஈரோடு.
நாள் : 11/08/2009
நேரம் : மாலை 6.00 மணி.


அன்புள்ள கலாம் ஐயாவிற்கு !
பணிவான வணக்கங்கள்.
ஐயா ! நீவீர் -

அன்பினில் அமுதம் ! அறிவினில் இமயம் ! அடக்கத்தில் பேரண்டமே !
பண்பினிலும் பரிவினிலும் பார் புகழும் பசிபிக் பெருங்கடலே !
அறிவியல் பார்வையில் ஆற்றல் மிக்க சூரியன் நீர் !
நடுத்தரக் குடும்பத்தில் பிறப்பு ! நாடாளும் ஜனாதிபதியாக உயர்வு !
எப்படி முடிந்தது உம்மால் ! இடையறாத உழைப்பு !
எதிலும் சோர்ந்து விடாத துடிப்பு ! எடுத்ததை முடிக்கவேண்டும் என்ற முனைப்பு !
இதனைப் பெறச் சாதகமானவை சூழ்நிலைகளா ?
இல்லை, கிடைத்த சூழ்நிலைகளை நீர் சாதகமாக்கிக் கொண்டீர் !
ஒவ்வொரு இந்தியனுக்கும் முன் உதாரணம் நீர் ! - உம்மையே
முன்னோடியாய்க் கொண்டு முன்னேறும் சமுதாயத்தின்
முனைப்பில் நானும் ஒரு சிறு துரும்பு !
கண்ணுக்கு நேரே நாங்கள் காணும்
கருணையின் உருவம் ! கடமையின் வடிவம் நீர் !
உம்மைக் கண்டால் இந்தியச் சட்டம் எழுந்து வந்தது போல் உள்ளதே !
எல்லா மாணவர்களும் அறிவில் விழிப்பு பெற நீர்
எடுக்கும் முயற்சிகள் கைகொடுக்கும் !
இந்தியா வல்லரசெனப் பெயரெடுக்கும் !
அதிகாரத்தில் ஆடும் நாடுகளை ஒடுக்கும் !
ஆற்றல் மிக்க வல்லமையை அன்பின் வழி கொடுக்கும் !
அண்டமெங்கும் அமைதி நிலைக்கும் !
ஆனந்தம் எல்லா உயிர்களும் துய்க்கும் !
பாசமுள்ள தமிழ்ச் சான்றோரே ! நேசக்கரம் நீட்டும் நல்லவரே !
உம்மை நம்மூருக்கு வருக ! வருக ! என வரவேற்று மகிழ்கிறோம் !
நம் மக்கள் உய்ய நற்கருத்துகளை தருக ! தருக ! என அழைக்கிறோம் !
உம் கருத்துகளை செவிமடுக்க விழைகிறோம் !

கருத்தாய்வுப் போட்டியில் கலந்துகொள்வோம் !

அன்பார்ந்த வாசக பெருமக்களே !

இலக்கிய ஆர்வமுடைய நமக்கு ‘மணற்கேணி 2009’ கருத்தாய்வுப் போட்டி ஒரு நல்ல வாய்ப்பினை வழங்கியுள்ளது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவரம் அறிய தமிழ்மணம்.நெட் – ஐ அணுகவும்.

இப்போட்டிக்கு நானும் ஒரு கட்டுரை அனுப்பியுள்ளேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன். போட்டியில் பங்கு பெறுபவர்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

Sunday, August 2, 2009

வானியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு…….


வானவியல் ஆராய்ச்சியினால் வானளாவ புகழ் சேர்த்தவர் நீர்!
பெயருக்கேற்ற வகையில் தமிழ்ப் பேருரை வழங்கியவர் நீர்!
நயம்பட நல்ல தமிழிலே செவிக்குணவு வழங்கியவர் நீர்!
நன்றி நவிலல் நாவளவில் நில்லாமல் நாபியில் இருந்து நவின்றவர் நீர்!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என்ற பாரதியின்
பாடல் வரிகளைத் தன் தாரக மந்திரமாய் கொண்டவர் நீர்!
முன்னேற்றப் பாதையில் முழுதும் முயன்று - பாரதத்தை
முன்னுக்குக் கொண்டு வந்தவர் நீர்!
சந்திராயன் எனும் விண்கலத்தை விண்ணில் ஏவி அதன்
சுழல் வட்டப் பாதையில் சுழல விட்டு வெற்றி வாகை சூடியவர் நீர்!
அண்ணா பல்கலைக்கழகத்தினால் முனைவர் பட்டம் பெற்றவர் நீர்!
அண்ணா! நீவீர் இன்னும் பல சாதனைகள் படைக்க
திண்ணமாக வாழ்த்துகிறோம்! உம்
எண்ணம் போல் மேன்மையடைய
இன்னும் இன்னும் இன்னும் பல
விருதுகளும், பட்டங்களும், வாழ்த்துக்களும் பெற்று
கன்னல் மொழியினைப் போல்
கன்னித் தமிழினைப் போல் வானந்தன்னில் உள்ள பல கோடி
நட்சத்திரங்கள் போல்
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்!!

இன்னிசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு……….


இன்னிசையால் இமயமென உயர்ந்து நிற்கும் இளைஞனே!
பனிமலையே! பணிவுள்ள மலையே!
உனக்கென் உள்ளார்ந்த வாழ்த்துகள்!!

பனித்துளியாய், குளிர்நிலவாய் யான்தரும் வாழ்த்துகள் யாவும்
பனிமலையே உன்னை என்செய்யும்!
இன்னுமோர் அணியெனவே உனக்கு அணி செய்யும்!!

வெளியுலகில் உள்ளதிலே நாட்டங்கொண்டு
தன்னை உணராமல் முழுமையடையாமல்
முடிந்துபோகும் மானிடர்கள் பலர்!!

தன்னையறிந்து நூறு சதவீதம் கவனமொடு செயலாற்றும்
உன்னைப் போல் ஆர்வலர்கள் ஊர் முழுதும் பெருகவேண்டும்!
ஏன்? இந்த உலகம் முழுதும் பெருக வேண்டும்!!

உடலில் ஓடும் குருதியின் இசையறிந்தவன் நீ!
உள் இயங்கும் உயிரோட்டம் உணர்ந்தவன் நீ!
செயலாற்றும் வகையறிந்து செய்து முடிக்கும் திறம்பெற்றவன் நீ!!

சிந்தையிலே கள்ளமற்ற உண்மை உரம் பெற்றவன் நீ!
நாடி நரம்புகளில் ஓடும் காற்று, வெப்பம், குருதி, உயிர்
இவற்றின் நாட்டியம் அறிந்தவன் நீ!
அவற்றை ஜதிகளாய், ஸ்ருதிகளாய் ஸ்வரம் பிடிப்பவன் நீ!!

உயிருள்ள இசையினை உருவாக்கும் வித்தகன் நீ!
உன்னிசையே மனநோய் போக்கும் மாமருந்து!
இன்னிசைக் கலைஞனே! நீயொரு இனிய மருத்துவனே!!

இசை கேட்பதால் மனதின் இறுக்கம் தளர்கிறது, மனமோ மலர்கிறது!
அமுதமென தந்துவிட்ட இசையினால் உயிர் இறவா நிலை எய்துமே!
உனக்கு உயிரோடு இருக்கும் போதே புகழுடம்பும் கிடைத்துவிட்டதே!!

நீ வழங்கும் இசையினால் நிமிர்ந்து நின்றது மனித இனம்!
நின்னால் தலை நிமிர்ந்தவைகளுள்
நம் நாடும் மொழியும் அடங்குமே!!

இந்தியனே! தன்னலமில்லாத் தமிழனே! இன்னிசைப்புயலே!
நினக்கு டாக்டர் பட்டம் இனிதாய் பொருந்துகிறதே!
அண்ணா பல்கலைக்கழகம்தான் அழியாநிலையெய்தியது
உனக்குப் பட்டம் தந்ததினால்!!

புயலே! உனக்குப் பூட்டிய பட்டத்தினால்
பல்கலைக்கழகமும் புகழிடம் பெற்றிட்டதே!
இந்தியாவின் மகத்துவத்தை உணர்த்த வந்த நீ
இன்னுமோர் மகாத்மாவே!!!