வெற்றி பெறுபவர்கள் வித்தியாசமான எதையும் செய்வதில்லை. செய்வதை வித்தியாசமாக செய்கின்றனர். அங்ஙனமே ஈரோடு தமிழ்ப் வலைப்பதிவர்கள் குழுமமும் தமது செயலை மிக நேர்த்தியாக செய்து சாதனை செய்துள்ளனர்.
இப்பதிவர்கள் சங்கமத்தில் முருக.கவியாகிய என்னையும் அழைக்கச் சொன்னவர் திரு.நா.கணேசன் ஐயா அவர்கள். அவர்களை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
வரவேற்பும் தலைமையேற்பும்
ஈரோடு கதிர் அவர்கள் அனைவரையும் வரவேற்று நண்பர் ஆரூரன் அவர்களைத் தலைமையேற்று இவ்விழாவை நடத்தித் தருமாறு முன்மொழிய, அவரும் தலைமையேற்று முதல் நிகழ்ச்சியாகத் தமிழ் வணக்கம் வாசிக்க என்னைப் பணித்தார். இத்தமிழ் வணக்கப் பாடலை தேர்வு செய்ததும் ஆரூரன் அவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்தாய் வணக்கம்
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் புதிய தமிழ்த்தாய் வாழ்த்தினை வாசிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளித்தனர். தமிழார்வம் மிக உள்ள நமக்கெல்லாம் அப்பாடல் புதிதானதே. ஆழமாகத் தமிழ்த்தாயை அழகுற வருணித்து வாழ்த்துகின்ற பாடலது! இதனால் விழாத் துவக்கமே சிறப்பான கண்ணோட்டம் பெற்றது!
தமிழன்னையின் வணக்கத்தை வாசிக்க வாய்ப்பளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெருஞ்சித்திரனாரின் கவியைத் தொடர்ந்து நான் தமிழன்னைக்குப் படைத்த பாவினையும் வாசிக்கும் எண்ணத்துடன் தான் வந்தேன். ஆயினும் வெகு நேரம் வந்தவர்களை [புலவர் போன்றோரை] நிற்க வைக்கக் கூடாது என்பதை சிந்தையில் கொண்டு அதனை நானே தவிர்த்துவிட்டேன். அப்பாடலை என் வலைப்பூவில் பார்க்கலாம்.
தலைமையுரை
தமிழ்த்தாயின் வணக்கத்தினைத் தொடர்ந்து, ஆரூரன் அவர்கள் தன் தலைமையுரையினை வழங்கினார். அதில் மொழி வழக்கு குறித்து சுவைபடப் பேசினார். கலிங்கராயன் என்பது காளிங்கராயன் ஆனதும் பின்பு காளிங்கரையான் ஆனதும், கம்பநாடன் கம்பநாடார் ஆகிப் போனதும் குறிப்பிட்டார். இவ்வாறு மொழி பலவகையான மாற்றங்களைப் பெறுவதை நாம் அறிந்த வகையில் பதிவு செய்ய வேண்டும் என்றார். பெரும்பாலும் மொழி அமைப்பு சிதையாமல் காக்க வேண்டும்.
பதிவர்கள் அறிமுகம்
அடுத்ததாக விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் தங்களையும் தங்களது வலைப்பூக்களையும் அறிமுகப் படுத்திக் கொண்டனர். கோபியில் இருந்து வந்த லதானந்த் என்ற பதிவர் கூறியதாவது : இத்தகைய பதிவர்கள் கூட்டம் ஆங்காங்கு நடத்தப்பட்டு இருக்கின்றன. நானே கூட ஒரு கூட்டம் நடத்தியிருக்கிறேன், ஆனால் 10 அல்லது 15 நபர்கள் தான் வந்திருந்தனர். இன்றைய கூட்டத்தைக் காணும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
ஆம் அவர் கூற்று சரியானதே! ஈரோட்டில் நடந்த இப்பதிவர் சந்திப்பில் 60 க்கும் மேற்ப்பட்ட பதிவர்களும் மற்றும் வாசகர்கள் பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விருந்தினர்கள்
சிறப்பு விருந்தினராக புலவர். இராசு ஐயா அவர்களும், தமிழ்மணம் காசி அவர்களும், சிவக்குமார் அவர்களும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் தங்கள் கருத்துகளை சிறப்பாகப் பதிவு செய்தனர்.
மூத்த பதிவர்கள் வரிசையில் சில பதிவர்கள் தங்களின் அனுபவ அறிவினை விழா மேடையில் அனைவரிடமும் பகிர்ந்துகொண்டனர். விழாக் குழுவினர் பயனுள்ள தலைப்பினைத் தேர்வு செய்து தகுந்த நபர்களிடம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒருங்கு கூடி தமிழ் வளர்க்கக் காட்டுகின்ற ஆர்வத்தை நோக்கினால் தமிழ்நாட்டில் உள்ள நம்மவர்களுக்கு ஆர்வம் இன்னும் அதிகம் தேவை என்றே தோன்றுகிறது.
பதிவர்களின் கருத்துகள்
பதிவர் வசந்தகுமார், சிறுகதை எழுதுவது குறித்த கருத்துகளை வெளியிட்டார். வெண்பா இலக்கணம் பயின்றால் மிகச் சுலபமாக சிறுகதை எழுதமுடியும் என்றும் தாம் எழுதிய சில வெண்பாக்களை வாசித்துக் காண்பித்தார். வாழ்த்துகள்!
பதிவர் பழமைபேசி, நல்ல சமுதாய அக்கறை கொண்டு கருத்துகளை வழங்கினார். தமிழன் என்ற உணர்வும் மனிதன் என்ற அபிமானமும் நம்மிடம் நிறைய வேண்டும். உள்ளன்பு கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழவேண்டும் என்றும் அத்தகைய கட்டமைப்பு நம் சமுதாயத்தினரிடம் மேலும் வளர்க்க வேண்டியதாய் உள்ளது என்றும் மிக அழகான கருத்தைப் பதிவு செய்தார். வட்டார மொழி வழக்கில் எழுதுவதும் ஒரு வரலாறாகப் பதியும் என அறிவுறித்தினார். வாழ்த்துகள் பழமைபேசி அவர்களே!
பதிவர் வலைச்சரம் சீனா அவர்கள், எதிர்பார்ப்பு என்னும் தலைப்பில் பேசினார். பதிவர்கள் மற்றும் வாசகர்களின் எதிர்பார்ப்பினை மிக அழகாக பட்டியலிட்டார். கலகலப்பாக மிக நேர்த்தியாகப் பேசினார். இவ்வுரை பயனுள்ளதாக அமைந்தது.
பதிவர் சுமஜ்லா, வலைப்பூக்களின் தொழில்நுட்பத்தைப் பற்றி விளக்கினார். அடேங்கப்பா! இவருடைய வலைப்பூவைப் பார்த்து வியந்து போனேன். தன் எண்ணங்களை அழகாகப் பதிகின்றார். நல்ல வளமையான எதிர்காலம் உங்களால் மொழிக்கும் மொழியறிவால் உங்கட்கும் உள்ளது என்பது திண்ணம் சகோதரி! வாழ்த்துகள். சக பதிவர் என்ற முறையில் பெருமிதம் கொள்கிறேன்.
பதிவர் துபாய் செந்தில்வேலன், சமுதாய அக்கறையோடு பேசினார். புள்ளி விபரங்களோடு துல்லியமாக பேசி அசத்தினார். கோடிக்கணக்கில் உள்ள தமிழர்கள் குறைவாகவே வலைப்பூக்கள் வைத்திருப்பதை குறிப்பிட்டார்.
நல்ல எண்ணங்களை பதிவுகளில் பதிந்து இன்னும் பல கட்டுரைகளை வழங்குங்கள் அன்பர்களே. மேலும் எழுதுவதில் உள்ள சிக்கல்களையும் விழிப்புணர்வோடு எழுதவேண்டிய முறைமையையும் எடுத்துக்கூறிய செந்தில்வேலன் அவர்களுக்கு பாராட்டுகள்.
பதிவர் பட்டர்பிளை சூர்யா உலக சினிமாக்களைப் பற்றிப் பேசினார். தமிழ் சினிமாக்கள் இன்னும் வளரவேண்டும் என்றும் உலகத் தரத்தில் அவை உயரவேண்டும் என்றும் கூறினார். வாழ்த்துகள்.
சகோதரி ரம்யா, பெண் வலைஞர்களின் எண்ணிக்கையும் வருகையும் குறைவாக உள்ளதைச் சுட்டிக் காட்டினார். பெண்களின் வருகை அதிகமாய் இருக்க வேண்டும், இதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். வந்திருந்த நபர்களில் மொத்தம் ஆறே பெண்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் மூவர் வாசகர்கள், மூவர் பதிவர்கள்.
எல்லோருடைய கருத்துப் பகிர்தலை ஆழமாக நோக்கிய சகோதரி ரம்யா மிகவும் நெகிந்து போனார். வாழ்த்துகள்.
பதிவர் அகநாழிகை, வலைப்பூக்களில் செய்த பதிவுகளை புத்தகமாக வெளியிடுவது குறித்து பேசினார். தாம் வெளியிட்ட மற்றும் பதிப்பித்த நூல்களைப் பார்வைக்கு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பதிவர் வால்பையன் தன்னுடைய பெயருக்கேற்றவாறு கலகலப்பூட்டினார். மற்ற பதிவர்களும் தங்களுடைய கருத்துகளை மிக அழகாகச் சொன்னார்கள்.
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் எண்ணற்ற மூத்த பதிவர்களை அழைத்து அவர்களின் எண்ணங்களையும் கருத்துகளையும் வழங்கி நிகழ்ச்சிகளை சீரிய முறையில் வழி நடத்திச் சென்றது சிறப்புக்குரியது.
சிறப்பு அழைப்பாளர்களின் உரை
சிறப்பு விருந்தினராக தமிழ்ப் புலவர் முனைவர். இராசு ஐயா அவர்களை அழைத்தது தமிழ்த்தாயிற்கு செய்த சிறப்பென்றே சொல்லவேண்டும். பல பழமையான செய்திகளை மிக அருமையாக எடுத்துச் சொன்னார். வலைப்பதிவில் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதினால் ஏடுகளின் பணி குறையுமென்றும் இதனால் மரங்கள் வெட்டப்படுவது குறையுமென்றும் தாள்கள் தயாரிப்பதனால் ஏற்படும் மாசு குறையும், வாகனப் போக்குவரத்தினால் ஏற்படும் மாசு குறையும் என்றும் குறிப்பிட்டார். உலக அளவில் தமிழ் மொழியை வளர்க்க நாம் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி பாராட்டுதலுக்குரியது என்றும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் என குறிப்பிட்டார்.
தமிழ்மணம் காசி அவர்கள் பேசும்போது தமிழ் வலைப்பதிவர்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள், வலைப்பதிவு குறித்த அறிவு பொது மக்களிடம் பரவலாகி வருகிறது, இன்னும் பல பயிற்சி வகுப்புகள் மற்றும் பட்டறைகள் நடத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இன்னும் பல நல்ல கருத்துகளைச் சொன்னார்.
தமிழ்மணம் மற்றும் தமிழ்வெளி
தமிழ்மணம் திரட்டி தன்னுடைய முகப்பில் ஈரோடு தமிழ்ப்பதிவர்கள் சங்கமம் குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளது. சங்கமத்தின் முழு காணொளியை சங்கமம் லைவ் இணையதளம் வெளியிடும் என்பதை அறிந்தோம். இவ்விழாவில் தமிழ்மணம் மற்றும் தமிழ்வெளி திரட்டிகள் பங்குகொண்டன.
இடுகைகள் இடுவதிலும் பின்னோட்டம் வழங்குவதிலும் உள்ள நிறைகுறைகளை பதிவர்கள் லதானந்த், பழமைபேசி, கேபிள்சங்கர், அப்துல்லா, வெயிலான், ஸ்ரீதர், ஆகியோர் தலைமையில் கலந்துரையாடினர். சுவையான விவாதங்கள், அத்துமீறல்கள் இன்றி அத்தனையும் அருமையாக நடத்தப்பட்டன.
குழுமம் துவக்கி வைத்தல்
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம், குழுமத்தினரால் துவக்கி வைக்கப்பட்டது.
நன்றியுரை மற்றும் இலவச நூல் வழங்கல்
இறுதியாக, நண்பர் கதிர் அவர்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டி விழாவை நிறைவு செய்தார். வந்திருந்த அனைவருக்கும் தேநீர் விருந்தும் சிற்றுண்டியும் வழங்கி நம் தமிழ்ப் பண்பாட்டின் உயர்வாய் அமைந்த விருந்தோம்பல் நிறைவாய் இருந்தது. மேலும் அனைவருக்கும் புலவர் இராசு ஐயா எழுதிய ‘ஈரோடு மாவட்ட வரலாறு’ எனும் நூல் ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக இலவசமாக வழங்கப் பட்டது.
எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுத்து, வந்திருந்த அனைவரையும் பேசவைத்து கருத்துகளைக் கேட்டு விளக்கி விரைவாக நிறைவாக இவ்விழாவை முடித்தபெருமை நம் ஈரோடு தமிழ் வலைப்பதிவு குழுமத்தையே சாரும் என்றால் அது மிகையாகாது.
தமிழ் ஆர்வலர்களின் ஆசி
ஈரோடு தமிழ்ப் வலைப்பதிவர்கள் குழுமத்தின் இடையறாத உழைப்பு மட்டுமின்றி உலகமெங்கும் வியாபித்துள்ள நம் தமிழ் ஆர்வலர்கள் பலரின் [திரு. நா. கணேசன், சிங்கப்பூர் பிரபாகர் மற்றும் பலர்] விருப்பமும் ஆசிகளும் விழா வெற்றி பெற பெரிதும் உறுதுணையாய் அமைந்தன என்பதை நாம் அன்புடன் உணர்கிறோம்.
தமிழ் கூறும் நல்லுலகில் தமிழ் மாநாட்டில் நம் பதிவர்கள் குழுமம் ஏதேனும் பயனுள்ளதாய் செய்ய வேண்டுமென ஒரு அன்பர் தெரிவித்தார். அக்கூற்று வரவேற்கத்தக்கதே! அது குறித்தும் இன்னும் பல நல்ல செயல்களைச் செய்து இக்குழு வெற்றி பெற நல் வாழ்த்துகளோடு என் உரையை நிறைவு செய்கிறேன்.
அனுபவமிக்க பதிவர்களின் கருத்துகளாலும், கலந்துரையாடலாலும், வாசகர்களும் எம் போன்ற இளைய பதிவர்களும் நிறைய செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது. பொதுவான நிகழ்ச்சி ஒன்று நடந்தேறினால் அதனைக் குறித்து ஆயிரமாயிரம் விமர்சனங்கள் வரத்தானே செய்யும். வந்தவை அனைத்தும் பல பல வண்ணங்களில் நிகழ்ச்சியைப் பாராட்டியும் பட்டைதீட்டியும் வைரமெனவே ஆக்கி விட்டன! வாழ்த்துகள்!!
14 comments:
அருமையான தொகுப்பு....
பாராட்டுகள்
பரணி அவர்களுக்கு என் நன்றியை சொல்லுங்கள்
மிகச் சிறப்பாக நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்
துல்லியமான தொகுப்பு; வாழ்த்துகளும் நன்றியும்!!
நன்றி ஈரோடு கதிர் அவர்களே!
பெருமையை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டு குற்றங்கள் ஏதேனும் இருப்பின் அதற்கு முழுக்க நானே பொறுப்பு என்ற பாங்கு அருமையானது. தலைமை பொறுப்பிற்கு தேவையானதே. ஒவ்வொருவருக்கும் இந்த உணர்வு இருந்தால் நம் நாடு எளிதாக முன்னேறும்.
பரணி & கவிதா
நன்றி ஆரூரன் அவர்களே!
விழாவை தலைமையேற்று அழகாக வழி நடத்தினீர்கள்.
நன்றி பழமைபேசி அவர்களே!
உம்மைப் போனற தமிழர்களைக் காணும் போது பெருமையாக இருக்கிறது. நம் ஒவ்வொருவருள்ளும் சமூக அக்கறை உயிர்ப்பு பெறவேண்டும்.
நல்ல தொகுப்பு...
நன்றி!அகல் விளக்கு அவர்களே!
அழகாக காட்சிப்படுத்தி உள்ளீர்கள்!
எம்மைப் பற்றிய நல்ல எண்ணங்களுக்கு மிக்க நன்றி சகோதரி!
நன்றி சகோதரி சுமஜ்லா அவர்களே!
அன்பின் முருக.கவி
அழகாக இறைவணக்கம் பாடி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தது நன்று - வெற்றிகரமாக முடிந்தது. நல்வாழ்த்துகள்
நன்றி சீனா ஐயா அவர்களே!
சிறப்பான தொகுப்பு. அழகாக எழுதியுள்ளீர்கள். தொடருங்கள்!!
நன்றி செந்தில்வேலன் அவர்களே!
Post a Comment