"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Sunday, February 20, 2011

மரம்

Trees

ஆயிரமாயிரம் கால்களைக் கொண்டு மண்ணைப் பிடிக்கின்றாய்!

ஆயிரமாயிரம் கைகளைக் கொண்டு விண்ணை யளக்கின்றாய்!

விண்ணிற்கும் மண்ணிற்கும் பாலமாக நிற்கின்றாய்!

எண்ணற்ற எண்ணங்களை என்னுள் நீ தருகின்றாய்!

மண்ணில் விழுந்திட்ட விதையினின்று எழுந்து வந்தனை நீ!

என்னுள் எழுந்திட்ட கவிதையினை வளர்த்துத் தந்தனை நீ!

இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்த முதல் குழந்தையும் நீ!

செயற்கையின் பிடியில் மடியாமல் காக்கும் அன்பு விந்தையும் நீ!

வாழ்க்கைத் தத்துவம் யாவும் உன்னுள் அடக்கம்!

உன்னைப் போல் வாழ்ந்தால் எவருக்கும் வாழ்க்கைப் பிடிக்கும்!

Thursday, January 14, 2010

நன்றியறிதல்

ஆடிப்பட்டம் தேடி விதைத்து
அயராது உழைத்து வியர்வை சிந்தியவருக்கு
அறுவடைக் காலம் இப்பொன்னாள்!
தை மகளே! திருமகளே!
வளங்கொழிக்கும் வரமருளே!
தித்திக்கும் இப்பொங்கல் திருநாளில்
எத்திக்கும் உள்ள தமிழர்களுக்கு
முத்தான பொங்கல் நல்வாழ்த்துகள்!

உணவு தந்த உழவருக்கு
உணவு கிடைக்கச் செய்வோம்!
உலகமெங்கும் உணவு நிறைவாய்ப் பெற
உழவுத் தொழில் செய்வோம்!
பணமல்ல நமது நோக்கு! – இது பாரதம்!
பசிப்பிணியை நீ போக்கு! –
அகிலத்திற்கே அன்னமிடும் அட்சயப்பாத்திரம் நமது பூமி!
அயராது உழைத்து அன்பினைக்கூட்டு - அகிலத்திற்கே நீ சாமி!

தைமகளே! திருமகளே!
உழைத்தவனுக்கு சன்மானம் வழங்குவாய்!
உயிர்களுக்கு உணவினை வழங்குவாய்!
பாடுபட்டுப் பெற்ற பயனுக்கும்
பாமரன் நன்றி சொல்கிறான்!
பாடறிந்து ஒழுகல் நம் பண்பாடு!
பண்புடன் நன்றியறிதலை நாம் உணர்வோமாக!
அன்புடன் பொங்கல் நல்வாழ்த்துகள்!

Wednesday, January 13, 2010

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

உள்ளம் பொங்கும் மகிழ்வுடன் – உம்
இல்லம் சிறக்க வாழ்த்துகள்!
கள்ளம் போக கனிவுடன் – நாம்
கடமை யாற்ற வாழ்த்துகள்!
துள்ளும் மனதின் இளமையை – என்றும்
தூய்மை யாக்க வாழ்த்துகள்!
வெல்வோம் மனித நேயத்தை – நமை
வேதம் போற்ற வாழ்த்துகள்!

தருணம் பார்த்து விதை விதைத்து – அதை
தரமான பயிராய் வளர்த்து,
விரும்பும் உணவை நமக்களிப்பார் – உழவர்
விரும்பும் வாழ்வை நாமளிப்போம்!
அரும்பிடும் நட்பினை அறிகின்றோம் – ஆத்ம
அன்பினை மாரியாய் பொழிகின்றோம்!
கரும்பினும் இனிய அன்பர்களுக்கு – எம்
கனிந்த பொங்கல் வாழ்த்துகள்!!

Friday, December 25, 2009

குடியாட்சி

மக்களாட்சியில் மக்கள் மனதில் மகிழ்ச்சி மலர்ந்துள்ளதா?
மகிழ்ச்சி என்பதே உழைக்காமல் வரும் ஊதியத்தின் ஊதியமோ?
மக்களின் மனம் இப்படித் தான் சிந்திக்கிறது!
மக்கள் என்பவர் யாவர்? மக்களாகிய நாம் தானே!
ஆங்கிலேயனை விரட்டி விட்டோம்! ஆதிக்கத்தை விரட்டினோமா?
ஆங்கில மோகம் கொண்டோம்! அந்நிய தேசம் கண்டோம்!
ஆத்மார்த்த அன்பினை இழந்து ஆங்காங்கு அகதிகள் ஆகிப்போனோம்!
அந்நிய தேசத்தில் அகதி என்றால் கூட பரவாயில்லை!
நம்முடை தேசத்திலேயே பலர் நலனிழந்து நிற்கின்றனரே!
சுதந்திரம் பெற்றுவிட்டோம்! குடியுரிமை கையில் கொண்டோம்!
எதனை பெற்றோம் நாம்? எதனைத் தொலைத்தோம் நாம்?
சுதந்திர வாழ்க்கையைப் பெறவில்லை நாம்!
சுயநல வாழ்க்கையைப் பெற்றோம்! பொதுநலப் பார்வையைத் தொலைத்தோம்!
தொலைநோக்குப் பார்வையுமில்லை; அகநோக்குப் பார்வையுமில்லை;
தொலைக்காட்சி நுட்பங்கள் உலகை இணைத்தது உண்மை தான்!
உள்ளங்களை இணைத்ததா அவை!
உலகின் குடைக்கீழ் வாழும் ஓர் உயிர் நாம்!
உணர்வோமா நாம் இதை!
உணர்ந்தே அமைப்போமா புதிய பாதை!
கொடைவள்ளல் பரம்பரை நாம்; கொடுத்துவிட்டோம் அகிம்சைதனை!
விடையென்ன அறியுமுன்னரே வினாவினையே அழித்துவிட்டோம்!
கடையென்ன , முதலென்ன கண்ணியம் காப்பதற்கு…
விடைபெறு சுயநலமே எம் நாட்டை விட்டு நீங்குதற்கு!
தடையேது உந்தனக்கு எம் தாயை விட்டு ஓடுதற்கு!
மடைதிறந்த வெள்ளம் போல் மக்களாட்சி மலரட்டும்!
படைகொண்டு புதுமை பாரதத்தை சமைக்கட்டும்!
மாசற்ற இந்தியா மலரட்டும்!
நீரிலே, நிலத்திலே,காற்றிலே,…
மாசற்ற இந்தியா மலரட்டும்!
மனங்களிலும் புதுப்பொலிவு பிறக்கட்டும்!
வானுயர கேள்விகள் ஆச்சரியமாகட்டும்!
கேண்மையுணர்வே அதில் ஓங்கட்டும்!

தமிழ்த்தாய் வாழ்த்து!

அன்னையே! அருந்தமிழே! அகமிருந்து காருமம்மா!
அறிவின் சுடரேற்றி ஆத்மபலம் தாருமம்மா!
இம்மையிலும் மறுமையிலும் இனிதிருக்கும் நற்றமிழே!
ஈடுஇணை இல்லாமல் ஈட்டுபுகழ் கொண்டவளே!
உள்ளத்துள் ஒளிர்ந்திடுவாய்! உலகமெங்கும் நிறைந்திடுவாய்!
ஊக்கம் கொடுத்தேயெம்மை ஊரறிய செய்திடுவாய்!
எழுகடல் ஆழம் உனது! எல்லியின் தன்மை உனது!
ஏற்றம் தருந்தமிழே! வையம் ஏற்றதோர் பொன்மொழியே!
ஐயம் திரிபறக் கற்றிடவே ஐக்கியமானோம் உன்மடியில்!
ஒன்றிடச் செய்திடுவாய்! ஒல்காப் புகழ்ச் சேர்த்திடுவாய்!
ஓதும் மறை நீயெனக்கு! ஓங்கு புகழ் நாவினிற்கு!
ஒளடதமாய் நீயிருக்க அகம் குளிரும்! ஒளவை தந்த நூலெலாம் அறம் வளர்க்கும்!
அன்பும் அமைதியுமென் தன்மை! அறிவும் செறிவும் நம்முடைமை!
சொன்ன சொற்கள் எனக்குத் தலைமை கொள்ளும்!
சொல்லாத சொற்களுக்கு நாம் தலைமை கொள்வோம்!
செந்தமிழாய்,நறுந்தேனாய் செழித்திருக்கும் செழுந்தமிழே!
செந்நாவில் வீற்றிருந்து எந்நாளும் வாழிய நீ!
வந்தவர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்று
பைந்தமிழே! எந்நாளும் பாங்குடன் நீ வாழியவே!

Thursday, December 24, 2009

புதிய தமிழ்த்தாய் வாழ்த்து

பாவலரேறு பெருஞ்சித்திரனார்
நன்றி, முனைவர். மு. இளங்கோவன் அவர்களே!
பதிவர் சங்கமத்தில் வாசித்த தமிழ் வணக்கம்!

அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே ! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே

சிந்தா மணிச்சுடரே! செங்கை செறிவளையே!
தந்த வடமொழிக்கும் தாயாகி நின்றவளே!

சிந்து மணற்பரப்பில் சிற்றில் விளையாடி
முந்தை எகுபதியர் மூத்த சுமேரியத்தார்

செந்திரு நாவில் சிரித்த இளங்கன்னீ !
சிந்துங் கலைவடிவே ! சீர்த்த கடற்கோளில்

நந்தாக் கதிரொளியே! நாடகத்துப் பண்ணியலே !
வந்த குடிமரபோர் வாழ்த்தி வணங்குவமே!