Friday, December 25, 2009
குடியாட்சி
மகிழ்ச்சி என்பதே உழைக்காமல் வரும் ஊதியத்தின் ஊதியமோ?
மக்களின் மனம் இப்படித் தான் சிந்திக்கிறது!
மக்கள் என்பவர் யாவர்? மக்களாகிய நாம் தானே!
ஆங்கிலேயனை விரட்டி விட்டோம்! ஆதிக்கத்தை விரட்டினோமா?
ஆங்கில மோகம் கொண்டோம்! அந்நிய தேசம் கண்டோம்!
ஆத்மார்த்த அன்பினை இழந்து ஆங்காங்கு அகதிகள் ஆகிப்போனோம்!
அந்நிய தேசத்தில் அகதி என்றால் கூட பரவாயில்லை!
நம்முடை தேசத்திலேயே பலர் நலனிழந்து நிற்கின்றனரே!
சுதந்திரம் பெற்றுவிட்டோம்! குடியுரிமை கையில் கொண்டோம்!
எதனை பெற்றோம் நாம்? எதனைத் தொலைத்தோம் நாம்?
சுதந்திர வாழ்க்கையைப் பெறவில்லை நாம்!
சுயநல வாழ்க்கையைப் பெற்றோம்! பொதுநலப் பார்வையைத் தொலைத்தோம்!
தொலைநோக்குப் பார்வையுமில்லை; அகநோக்குப் பார்வையுமில்லை;
தொலைக்காட்சி நுட்பங்கள் உலகை இணைத்தது உண்மை தான்!
உள்ளங்களை இணைத்ததா அவை!
உலகின் குடைக்கீழ் வாழும் ஓர் உயிர் நாம்!
உணர்வோமா நாம் இதை!
உணர்ந்தே அமைப்போமா புதிய பாதை!
கொடைவள்ளல் பரம்பரை நாம்; கொடுத்துவிட்டோம் அகிம்சைதனை!
விடையென்ன அறியுமுன்னரே வினாவினையே அழித்துவிட்டோம்!
கடையென்ன , முதலென்ன கண்ணியம் காப்பதற்கு…
விடைபெறு சுயநலமே எம் நாட்டை விட்டு நீங்குதற்கு!
தடையேது உந்தனக்கு எம் தாயை விட்டு ஓடுதற்கு!
மடைதிறந்த வெள்ளம் போல் மக்களாட்சி மலரட்டும்!
படைகொண்டு புதுமை பாரதத்தை சமைக்கட்டும்!
மாசற்ற இந்தியா மலரட்டும்!
நீரிலே, நிலத்திலே,காற்றிலே,…
மாசற்ற இந்தியா மலரட்டும்!
மனங்களிலும் புதுப்பொலிவு பிறக்கட்டும்!
வானுயர கேள்விகள் ஆச்சரியமாகட்டும்!
கேண்மையுணர்வே அதில் ஓங்கட்டும்!
தமிழ்த்தாய் வாழ்த்து!
அறிவின் சுடரேற்றி ஆத்மபலம் தாருமம்மா!
இம்மையிலும் மறுமையிலும் இனிதிருக்கும் நற்றமிழே!
ஈடுஇணை இல்லாமல் ஈட்டுபுகழ் கொண்டவளே!
உள்ளத்துள் ஒளிர்ந்திடுவாய்! உலகமெங்கும் நிறைந்திடுவாய்!
ஊக்கம் கொடுத்தேயெம்மை ஊரறிய செய்திடுவாய்!
எழுகடல் ஆழம் உனது! எல்லியின் தன்மை உனது!
ஏற்றம் தருந்தமிழே! வையம் ஏற்றதோர் பொன்மொழியே!
ஐயம் திரிபறக் கற்றிடவே ஐக்கியமானோம் உன்மடியில்!
ஒன்றிடச் செய்திடுவாய்! ஒல்காப் புகழ்ச் சேர்த்திடுவாய்!
ஓதும் மறை நீயெனக்கு! ஓங்கு புகழ் நாவினிற்கு!
ஒளடதமாய் நீயிருக்க அகம் குளிரும்! ஒளவை தந்த நூலெலாம் அறம் வளர்க்கும்!
அன்பும் அமைதியுமென் தன்மை! அறிவும் செறிவும் நம்முடைமை!
சொன்ன சொற்கள் எனக்குத் தலைமை கொள்ளும்!
சொல்லாத சொற்களுக்கு நாம் தலைமை கொள்வோம்!
செந்தமிழாய்,நறுந்தேனாய் செழித்திருக்கும் செழுந்தமிழே!
செந்நாவில் வீற்றிருந்து எந்நாளும் வாழிய நீ!
வந்தவர்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்று
பைந்தமிழே! எந்நாளும் பாங்குடன் நீ வாழியவே!
Thursday, December 24, 2009
புதிய தமிழ்த்தாய் வாழ்த்து
அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே ! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே
சிந்தா மணிச்சுடரே! செங்கை செறிவளையே!
தந்த வடமொழிக்கும் தாயாகி நின்றவளே!
சிந்து மணற்பரப்பில் சிற்றில் விளையாடி
முந்தை எகுபதியர் மூத்த சுமேரியத்தார்
செந்திரு நாவில் சிரித்த இளங்கன்னீ !
சிந்துங் கலைவடிவே ! சீர்த்த கடற்கோளில்
நந்தாக் கதிரொளியே! நாடகத்துப் பண்ணியலே !
வந்த குடிமரபோர் வாழ்த்தி வணங்குவமே!
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் சங்கமம் – சந்தித்ததும் சிந்தித்ததும்!
வெற்றி பெறுபவர்கள் வித்தியாசமான எதையும் செய்வதில்லை. செய்வதை வித்தியாசமாக செய்கின்றனர். அங்ஙனமே ஈரோடு தமிழ்ப் வலைப்பதிவர்கள் குழுமமும் தமது செயலை மிக நேர்த்தியாக செய்து சாதனை செய்துள்ளனர்.
இப்பதிவர்கள் சங்கமத்தில் முருக.கவியாகிய என்னையும் அழைக்கச் சொன்னவர் திரு.நா.கணேசன் ஐயா அவர்கள். அவர்களை நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
வரவேற்பும் தலைமையேற்பும்
ஈரோடு கதிர் அவர்கள் அனைவரையும் வரவேற்று நண்பர் ஆரூரன் அவர்களைத் தலைமையேற்று இவ்விழாவை நடத்தித் தருமாறு முன்மொழிய, அவரும் தலைமையேற்று முதல் நிகழ்ச்சியாகத் தமிழ் வணக்கம் வாசிக்க என்னைப் பணித்தார். இத்தமிழ் வணக்கப் பாடலை தேர்வு செய்ததும் ஆரூரன் அவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்தாய் வணக்கம்
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் புதிய தமிழ்த்தாய் வாழ்த்தினை வாசிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளித்தனர். தமிழார்வம் மிக உள்ள நமக்கெல்லாம் அப்பாடல் புதிதானதே. ஆழமாகத் தமிழ்த்தாயை அழகுற வருணித்து வாழ்த்துகின்ற பாடலது! இதனால் விழாத் துவக்கமே சிறப்பான கண்ணோட்டம் பெற்றது!
தமிழன்னையின் வணக்கத்தை வாசிக்க வாய்ப்பளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெருஞ்சித்திரனாரின் கவியைத் தொடர்ந்து நான் தமிழன்னைக்குப் படைத்த பாவினையும் வாசிக்கும் எண்ணத்துடன் தான் வந்தேன். ஆயினும் வெகு நேரம் வந்தவர்களை [புலவர் போன்றோரை] நிற்க வைக்கக் கூடாது என்பதை சிந்தையில் கொண்டு அதனை நானே தவிர்த்துவிட்டேன். அப்பாடலை என் வலைப்பூவில் பார்க்கலாம்.
தலைமையுரை
தமிழ்த்தாயின் வணக்கத்தினைத் தொடர்ந்து, ஆரூரன் அவர்கள் தன் தலைமையுரையினை வழங்கினார். அதில் மொழி வழக்கு குறித்து சுவைபடப் பேசினார். கலிங்கராயன் என்பது காளிங்கராயன் ஆனதும் பின்பு காளிங்கரையான் ஆனதும், கம்பநாடன் கம்பநாடார் ஆகிப் போனதும் குறிப்பிட்டார். இவ்வாறு மொழி பலவகையான மாற்றங்களைப் பெறுவதை நாம் அறிந்த வகையில் பதிவு செய்ய வேண்டும் என்றார். பெரும்பாலும் மொழி அமைப்பு சிதையாமல் காக்க வேண்டும்.
பதிவர்கள் அறிமுகம்
அடுத்ததாக விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் தங்களையும் தங்களது வலைப்பூக்களையும் அறிமுகப் படுத்திக் கொண்டனர். கோபியில் இருந்து வந்த லதானந்த் என்ற பதிவர் கூறியதாவது : இத்தகைய பதிவர்கள் கூட்டம் ஆங்காங்கு நடத்தப்பட்டு இருக்கின்றன. நானே கூட ஒரு கூட்டம் நடத்தியிருக்கிறேன், ஆனால் 10 அல்லது 15 நபர்கள் தான் வந்திருந்தனர். இன்றைய கூட்டத்தைக் காணும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
ஆம் அவர் கூற்று சரியானதே! ஈரோட்டில் நடந்த இப்பதிவர் சந்திப்பில் 60 க்கும் மேற்ப்பட்ட பதிவர்களும் மற்றும் வாசகர்கள் பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விருந்தினர்கள்
சிறப்பு விருந்தினராக புலவர். இராசு ஐயா அவர்களும், தமிழ்மணம் காசி அவர்களும், சிவக்குமார் அவர்களும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் தங்கள் கருத்துகளை சிறப்பாகப் பதிவு செய்தனர்.
மூத்த பதிவர்கள் வரிசையில் சில பதிவர்கள் தங்களின் அனுபவ அறிவினை விழா மேடையில் அனைவரிடமும் பகிர்ந்துகொண்டனர். விழாக் குழுவினர் பயனுள்ள தலைப்பினைத் தேர்வு செய்து தகுந்த நபர்களிடம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒருங்கு கூடி தமிழ் வளர்க்கக் காட்டுகின்ற ஆர்வத்தை நோக்கினால் தமிழ்நாட்டில் உள்ள நம்மவர்களுக்கு ஆர்வம் இன்னும் அதிகம் தேவை என்றே தோன்றுகிறது.
பதிவர்களின் கருத்துகள்
பதிவர் வசந்தகுமார், சிறுகதை எழுதுவது குறித்த கருத்துகளை வெளியிட்டார். வெண்பா இலக்கணம் பயின்றால் மிகச் சுலபமாக சிறுகதை எழுதமுடியும் என்றும் தாம் எழுதிய சில வெண்பாக்களை வாசித்துக் காண்பித்தார். வாழ்த்துகள்!
பதிவர் பழமைபேசி, நல்ல சமுதாய அக்கறை கொண்டு கருத்துகளை வழங்கினார். தமிழன் என்ற உணர்வும் மனிதன் என்ற அபிமானமும் நம்மிடம் நிறைய வேண்டும். உள்ளன்பு கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழவேண்டும் என்றும் அத்தகைய கட்டமைப்பு நம் சமுதாயத்தினரிடம் மேலும் வளர்க்க வேண்டியதாய் உள்ளது என்றும் மிக அழகான கருத்தைப் பதிவு செய்தார். வட்டார மொழி வழக்கில் எழுதுவதும் ஒரு வரலாறாகப் பதியும் என அறிவுறித்தினார். வாழ்த்துகள் பழமைபேசி அவர்களே!
பதிவர் வலைச்சரம் சீனா அவர்கள், எதிர்பார்ப்பு என்னும் தலைப்பில் பேசினார். பதிவர்கள் மற்றும் வாசகர்களின் எதிர்பார்ப்பினை மிக அழகாக பட்டியலிட்டார். கலகலப்பாக மிக நேர்த்தியாகப் பேசினார். இவ்வுரை பயனுள்ளதாக அமைந்தது.
பதிவர் சுமஜ்லா, வலைப்பூக்களின் தொழில்நுட்பத்தைப் பற்றி விளக்கினார். அடேங்கப்பா! இவருடைய வலைப்பூவைப் பார்த்து வியந்து போனேன். தன் எண்ணங்களை அழகாகப் பதிகின்றார். நல்ல வளமையான எதிர்காலம் உங்களால் மொழிக்கும் மொழியறிவால் உங்கட்கும் உள்ளது என்பது திண்ணம் சகோதரி! வாழ்த்துகள். சக பதிவர் என்ற முறையில் பெருமிதம் கொள்கிறேன்.
பதிவர் துபாய் செந்தில்வேலன், சமுதாய அக்கறையோடு பேசினார். புள்ளி விபரங்களோடு துல்லியமாக பேசி அசத்தினார். கோடிக்கணக்கில் உள்ள தமிழர்கள் குறைவாகவே வலைப்பூக்கள் வைத்திருப்பதை குறிப்பிட்டார்.
நல்ல எண்ணங்களை பதிவுகளில் பதிந்து இன்னும் பல கட்டுரைகளை வழங்குங்கள் அன்பர்களே. மேலும் எழுதுவதில் உள்ள சிக்கல்களையும் விழிப்புணர்வோடு எழுதவேண்டிய முறைமையையும் எடுத்துக்கூறிய செந்தில்வேலன் அவர்களுக்கு பாராட்டுகள்.
பதிவர் பட்டர்பிளை சூர்யா உலக சினிமாக்களைப் பற்றிப் பேசினார். தமிழ் சினிமாக்கள் இன்னும் வளரவேண்டும் என்றும் உலகத் தரத்தில் அவை உயரவேண்டும் என்றும் கூறினார். வாழ்த்துகள்.
சகோதரி ரம்யா, பெண் வலைஞர்களின் எண்ணிக்கையும் வருகையும் குறைவாக உள்ளதைச் சுட்டிக் காட்டினார். பெண்களின் வருகை அதிகமாய் இருக்க வேண்டும், இதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். வந்திருந்த நபர்களில் மொத்தம் ஆறே பெண்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் மூவர் வாசகர்கள், மூவர் பதிவர்கள்.
எல்லோருடைய கருத்துப் பகிர்தலை ஆழமாக நோக்கிய சகோதரி ரம்யா மிகவும் நெகிந்து போனார். வாழ்த்துகள்.
பதிவர் அகநாழிகை, வலைப்பூக்களில் செய்த பதிவுகளை புத்தகமாக வெளியிடுவது குறித்து பேசினார். தாம் வெளியிட்ட மற்றும் பதிப்பித்த நூல்களைப் பார்வைக்கு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பதிவர் வால்பையன் தன்னுடைய பெயருக்கேற்றவாறு கலகலப்பூட்டினார். மற்ற பதிவர்களும் தங்களுடைய கருத்துகளை மிக அழகாகச் சொன்னார்கள்.
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் எண்ணற்ற மூத்த பதிவர்களை அழைத்து அவர்களின் எண்ணங்களையும் கருத்துகளையும் வழங்கி நிகழ்ச்சிகளை சீரிய முறையில் வழி நடத்திச் சென்றது சிறப்புக்குரியது.
சிறப்பு அழைப்பாளர்களின் உரை
சிறப்பு விருந்தினராக தமிழ்ப் புலவர் முனைவர். இராசு ஐயா அவர்களை அழைத்தது தமிழ்த்தாயிற்கு செய்த சிறப்பென்றே சொல்லவேண்டும். பல பழமையான செய்திகளை மிக அருமையாக எடுத்துச் சொன்னார். வலைப்பதிவில் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதினால் ஏடுகளின் பணி குறையுமென்றும் இதனால் மரங்கள் வெட்டப்படுவது குறையுமென்றும் தாள்கள் தயாரிப்பதனால் ஏற்படும் மாசு குறையும், வாகனப் போக்குவரத்தினால் ஏற்படும் மாசு குறையும் என்றும் குறிப்பிட்டார். உலக அளவில் தமிழ் மொழியை வளர்க்க நாம் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி பாராட்டுதலுக்குரியது என்றும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் என குறிப்பிட்டார்.
தமிழ்மணம் காசி அவர்கள் பேசும்போது தமிழ் வலைப்பதிவர்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள், வலைப்பதிவு குறித்த அறிவு பொது மக்களிடம் பரவலாகி வருகிறது, இன்னும் பல பயிற்சி வகுப்புகள் மற்றும் பட்டறைகள் நடத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இன்னும் பல நல்ல கருத்துகளைச் சொன்னார்.
தமிழ்மணம் மற்றும் தமிழ்வெளி
தமிழ்மணம் திரட்டி தன்னுடைய முகப்பில் ஈரோடு தமிழ்ப்பதிவர்கள் சங்கமம் குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளது. சங்கமத்தின் முழு காணொளியை சங்கமம் லைவ் இணையதளம் வெளியிடும் என்பதை அறிந்தோம். இவ்விழாவில் தமிழ்மணம் மற்றும் தமிழ்வெளி திரட்டிகள் பங்குகொண்டன.
இடுகைகள் இடுவதிலும் பின்னோட்டம் வழங்குவதிலும் உள்ள நிறைகுறைகளை பதிவர்கள் லதானந்த், பழமைபேசி, கேபிள்சங்கர், அப்துல்லா, வெயிலான், ஸ்ரீதர், ஆகியோர் தலைமையில் கலந்துரையாடினர். சுவையான விவாதங்கள், அத்துமீறல்கள் இன்றி அத்தனையும் அருமையாக நடத்தப்பட்டன.
குழுமம் துவக்கி வைத்தல்
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம், குழுமத்தினரால் துவக்கி வைக்கப்பட்டது.
நன்றியுரை மற்றும் இலவச நூல் வழங்கல்
இறுதியாக, நண்பர் கதிர் அவர்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டி விழாவை நிறைவு செய்தார். வந்திருந்த அனைவருக்கும் தேநீர் விருந்தும் சிற்றுண்டியும் வழங்கி நம் தமிழ்ப் பண்பாட்டின் உயர்வாய் அமைந்த விருந்தோம்பல் நிறைவாய் இருந்தது. மேலும் அனைவருக்கும் புலவர் இராசு ஐயா எழுதிய ‘ஈரோடு மாவட்ட வரலாறு’ எனும் நூல் ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக இலவசமாக வழங்கப் பட்டது.
எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுத்து, வந்திருந்த அனைவரையும் பேசவைத்து கருத்துகளைக் கேட்டு விளக்கி விரைவாக நிறைவாக இவ்விழாவை முடித்தபெருமை நம் ஈரோடு தமிழ் வலைப்பதிவு குழுமத்தையே சாரும் என்றால் அது மிகையாகாது.
தமிழ் ஆர்வலர்களின் ஆசி
ஈரோடு தமிழ்ப் வலைப்பதிவர்கள் குழுமத்தின் இடையறாத உழைப்பு மட்டுமின்றி உலகமெங்கும் வியாபித்துள்ள நம் தமிழ் ஆர்வலர்கள் பலரின் [திரு. நா. கணேசன், சிங்கப்பூர் பிரபாகர் மற்றும் பலர்] விருப்பமும் ஆசிகளும் விழா வெற்றி பெற பெரிதும் உறுதுணையாய் அமைந்தன என்பதை நாம் அன்புடன் உணர்கிறோம்.
தமிழ் கூறும் நல்லுலகில் தமிழ் மாநாட்டில் நம் பதிவர்கள் குழுமம் ஏதேனும் பயனுள்ளதாய் செய்ய வேண்டுமென ஒரு அன்பர் தெரிவித்தார். அக்கூற்று வரவேற்கத்தக்கதே! அது குறித்தும் இன்னும் பல நல்ல செயல்களைச் செய்து இக்குழு வெற்றி பெற நல் வாழ்த்துகளோடு என் உரையை நிறைவு செய்கிறேன்.
அனுபவமிக்க பதிவர்களின் கருத்துகளாலும், கலந்துரையாடலாலும், வாசகர்களும் எம் போன்ற இளைய பதிவர்களும் நிறைய செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது. பொதுவான நிகழ்ச்சி ஒன்று நடந்தேறினால் அதனைக் குறித்து ஆயிரமாயிரம் விமர்சனங்கள் வரத்தானே செய்யும். வந்தவை அனைத்தும் பல பல வண்ணங்களில் நிகழ்ச்சியைப் பாராட்டியும் பட்டைதீட்டியும் வைரமெனவே ஆக்கி விட்டன! வாழ்த்துகள்!!
Saturday, December 19, 2009
அறத்தால் வருவதே இன்பம்
அன்னையின் அறம் அன்பு செய்வது!
ஆசானின் அறம் அறிவு புகட்டுவது!
இல்லறத்தான் அறம் விருந்து ஓம்புவது!
ஈவோனது அறம் ஈகையை வளர்ப்பது!
உற்றாரின் அறம் உண்மையாய் இருப்பது!
ஊராரின் அறம் ஊக்கம் கொடுப்பது!
எல்லோரின் அறம் எளிமையாய் வாழ்வது!
ஏற்றதோர் அறம் ஏந்திழையை மதிப்பது!
ஐயன்மீர்! உம் அறம் ஐயமற கற்பது!
ஒவ்வொருவரின் அறம் ஒற்றுமையாய் இருப்பது!
ஓதும் மறையோர் அறம் ஓதுவதை உணர்வது!
ஒளவை தந்த அறம் அறநூல்கள் விளக்குவது!
பிள்ளையாய் இருந்தால் பெற்றோரையும் பெரியோரையும்
மதித்து நடப்பதே அறம்!
வளர்ந்தநிலைப் பிள்ளையென்றால் நூல்களைக் கற்பதும்
அதன்வழி நடப்பதும் அறம்!
அடுத்தநிலை யென்றால் அறமும்புகழும் பேணித்
தொழில் செய்வதுவே அறம்!
தொடுத்த தொழிலில் பொருளீட்டலும் பிறர்க்கு
ஈந்து மகிழ்வதும் அறம்!
இல்லறம் பேணுவதும் நல்லறம் பேணுவதும்
சொல்லறம் பேணுவதும் அறம்!
வல்லமை கொண்டே வாய்மையைக் காப்பதும்
நேர்மையை ஏற்பதும் அறம்!
அறவழி நின்று நேர்வழி சென்று
திரட்டிய செல்வ மதை
அகமது குளிர்ந்து முகமது மலர
ஜகமெங்கும் கொடுப்பது அறம்!
உள்ளம், சொல், செயல் இம்மூன்றும்
ஒருநேர்கோட்டில் உடையது அறம்!
உலக உயிரனைத்தும் தான் உணரும்
கடமை என்பது அறம்!
நிறைவாய் உயர்ந்த செல்வரும், சான்றோரும்,
தானதருமம் செய்வது அறம்!
உயர்வாய் உலகில் வாழும் பெண்டிர்
தாங்கொண்ட கற்பு அறம்!
துறந்தவர் துறவி என்பார் எல்லோரையும்
இறையென மதிப்பது அறம்!
அறமதை அகத்துள் நிறுத்தி நிதம்பேணுவோர்
பெறுவர் நற்பேறெனும் அறம்!
அறநூல்கள் பதினொன்றும் எடுத் துரைப்பதும்
விரித் துரைப்பதும் அறம்!
அறத்துள் நாயகமாய் எல்லாச் செயல்களிலும்
நீக்கமற நிறைந்திருப்பதும் அறம்!
அறமது செய்ய வயதொன்று மில்லை!
அறத்தினைச் செய்ய அகன்றிடுமே தொல்லை!
முழுமனதுடன் செய்யும் நல்லறத்தினால்
முழுப்பயனையும் நாம் நிதம் வெல்லலாம்!
அறத்தின் வழியே கிடைப்பதே இன்பமாம்!
மற்றதெல்லாம் இன்பம் தருவதாய்த் தோன்றலாம்!
பிறசெய்கையால் விளையும் இன்பம் முடிவினில்
துன்பந் தனையே தந்து செல்லும்!
செய்ய வேண்டிய செயல்களுள் ஒன்றாய்
உய்யும் வழியென உறுவதும் அறமே!
அறமே நிறைவாய் இன்பம் தருமே!
அறமே பிறவியைக் கடக்க உதவுமே!
அறமே சிறப்பும் செல்வமும் தருமே!
நன்மை யாவும் விளைவது அறத்தால்!
தீமை யாவும் முறிவது அறத்தால்!
அழிவே இல்லா ஆனந்தம் தருமே!
அறவோர் புகழும் ஆன்ற நல்லறமே!
கண்ணும் கருத்தும் கடமையில் நிறைவாய்
இருந்தால் விளைவது இன்பம்!
எண்ணும் எண்ணம் யாவும் சுத்தமாய்
இருந்தால் விளைவது இன்பம்!
சொல்லும் சொல்லில் தூய்மை சிறப்பாய்
இருந்தால் விளைவது இன்பம்!
வெல்லும் வகையை அறிந்தே யாமிங்கு
வென்றால் வருமே இன்பம்!
உள்ளும் புறமும் அகமே மேவி
உண்மை யிருந்தால் இன்பம்!
துள்ளும் மனமும் குணமும் தூய்மை
துலங்கிட வருமே இன்பம்!
ஒல்லும் வகையான் அறிந்தே யாமிங்கு
அறம்செய்தால் வரும் இன்பம்!
பல்லக்கில் செல்ல பண்புடன் நாம்
அறம்செய்வதால் வரும் இன்பம்!
தொல்லைகள் அகல வல்வினை விலக
துலங்கிடுமே நம்முள் இன்பம்!
செல்லும் வழியில் அறம் செய்வதினால்
செல்வமும் சிறப்பும் சேரும்!
உள்ளபடி இன்பம் தருவது அறமே
உணர்ந்தால் நன்மை பெருகும்!
கள்ளமில்லாமல் கடமையைச் செய்தால்
கனிவுடன் துணிவும் பெருகும்!
பிறவிப் பெருங்கடல் கடந்திடவே நமக்கு
உதவிடுமே நல் அறமே!
துறவியும் இங்கே சிறப்பு பெறுவது
அறத்தை துறக்காததனால் தானே!
அறவழி நின்று செல்வம் சேர்த்து
சிறப்பினைப் பெறுவோம் நாமே!
சிறப்பினைப் பெற்று ஈகையைச் செய்து
மேலும் சிறப்போம் நாமே!!

