"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Saturday, May 21, 2011

இலக்கிய ஆளுமைகள்

31.03.2011 அன்று சென்னை கிறித்தவக் கல்லூரியில் நடைபெற்ற “பன்முக நோக்கில் தமிழ்” எனும் தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு வழங்கிய கட்டுரை.

முன்னுரை:

‘இலக்கியம்’ என்பது மக்களுக்கு நல்ல இலக்குகளை இயம்புவதாகும். காலந்தோறும் தன் வடிவத்தில் மாறுதல் எய்துவது இலக்கியத்தின் இயல்பு. சம காலத்தில் நிகழும் நிகழ்வுகள் சுற்றுச்சூழல்கள் நம்முள் ஏற்படுத்தும் எண்ணங்களின் விளைவாய் அமைபவைதான் இலக்கியங்கள். இருபதாம் நூற்றாண்டின் இலக்கியவடிவம் புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை எனச் சொல்லலாம். இன்னும் புதினம், நாவல், சிறுகதை, பக்கக்கதை, பத்திக்கதை என பல்வேறு வடிவங்களில் இருந்தாலும் சிறப்பு பெறுவது என்னவோ சிந்திக்க வைக்கும் படைப்புகள்தாம்.

எது கவிதை?

புதுக்கவிதைக்கு இலக்கணம் இல்லை. உள்ளத்து உணர்வுகளை உள்ள வண்ணம் படிப்பவரின் உள்ளத்தின் உள்ளே உணரச் செய்வது கவிதை எனலாம்.

“பூ தாவரத்தின் சாரம்; அதன் பரிணாம உச்சம்

தேன் பூவின் சாரம், அதன் ரகசியம்” என்று கவிக்கோ அவர்கள் கவிஞனும் தேனீயும் ஒன்று என்கிறார்.

தேனீ ஈக்களின் வகைகளுள் ஒன்றாயினும் தேனாகிய உயர்ந்த பொருளையே தேடி ஓடும். அதனைப் போல கவிஞனும் உயர்ந்த பொருளினையே நாடவேண்டும். அதுதான் கவிதை. தேனீ அழகுணர்ச்சி உடையது, கவிஞனும் அழகுணர்ச்சிக்கு ஆட்பட்டவனாவான்! தேனீக்கள் தேடிச் சேகரித்த தேனில் பூக்களின் முகவரி இல்லை, பொதுமைத் தன்மைதானுண்டு. அதுபோல கவிஞனின் கவிதையிலும் பொதுமைத் தன்மையே காணப்படவேண்டும். அதுவே சிறந்த பண்பாகும்.

தேன் ஒரு உணவு கவிதையும் உணவாகும்!

தேன் ஒரு மருந்து கவிதையும் மருந்தாகும்!

தேன் அழியாத தன்மை உடையது, கவிதையும் அழியாத தன்மையைப் பெறவேண்டும்.

மலர் மடிந்து விடும், மது மடிவதில்லை. கவிஞன் மறைந்திடினும் கவிதை மறைவதில்லை.

அங்ஙனம் அழியாத பல கவிதைகளைப் படைத்துத் தருபவர்களே கவிஞர்கள் வரிசையில் வலம் வருகின்றனர். இவ்விலக்கியத்தில் இக்காலக்கவிஞரின் ஆளுமைகளை இவண் காணவேண்டும்.

பா.விஜய்:

20-ம் நூற்றாண்டில் கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்றோர் வரிசையில், எழுத்துலகில் தோன்றிய இன்னுமொறு சூரியன் பா.விஜய் ஆவார். இவரது ஆளுமை தனித்தன்மை வாய்ந்தது. பல விதமான தோல்விகளைச் சந்தித்து சந்தித்து, சாதனைக்குப் பாலம் அமைத்து, அதிலே பயணப்பட்டு ‘வித்தக கவி’ என்னும் பட்டமும் பெற்றவர். பா.விஜய் படைப்பாளராகப் பன்முகங்களைக் கொண்டவராகத் தோன்றுகிறார். கவிதை, மரபு கவிதை, நாவல், பாடல், வசனம், நடிப்பு எனப் பல்வேறு முகங்களைக் கொண்டவர் கவிஞர். அதற்கு முன்னதாக ஆளுமை என்பதனை சிறிது ஆய்ந்து தெளிவோம்.

ஆளுமை:

“பிறரைக் காட்டிலும் குறிப்பிட்ட பண்பிலோ, திறனிலோ மிகச் சிறந்து விளங்குபவனை சிறந்த ஆளுமையுடயவன்” என்கிறோம். “ஒரு மனிதன் தன் பாரம்பரியத்தினாலும், சூழ்நிலையினாலும் பெற்றுள்ள உள்ளார்ந்த மனப்போக்குகள், உளத்துடிப்புகள், செய்முறைகள், உடல் வேட்கைகள் மற்றும் இயல்பூக்கம் ஆகியவற்றின் தொகுப்பே அவனது ஆளுமையாகும்” என்று உட்வொர்த் என்ற அறிஞர் குறிப்பிடுகின்றார். இவ்வாறு வெளிப்படக்கூடிய ஆளுமைத்திறனானது கவிஞனுக்குக் கவிஞன், மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதாய் அமைகிறது. இவண் பா.விஜய்யின் படைப்புகளில் ஆளுமைத் திறன் அமைந்துள்ள விதத்தைக் காணலாம்.

சிந்தனைச் சிற்பி:

கவிஞர்கள் ஒவ்வொருவரும் சிந்தனைச் சிற்பிகள் தாம். நம் கவிஞர் எவ்வகையில் தம் சிந்தனையில் மாறுபடுகிறார்? கருத்தினுள் ஒரு கருத்தைப் புகுத்த முதலில் வினா எழுப்பி சிந்திக்க வைத்துப் பின் விடையைப் பகர்கிறார். இங்ஙனம் பல கருத்துகள் விளக்கப் பட்டுள்ளன. சான்றாக ஒன்று ..

“அருவி என்பது

ஆற்றை நோக்கிப் போகிறது

ஆறு என்பது

கடலை நோக்கிப் போகிறது

கடல் என்பது எதை நோக்கி?

கடலுக்குப் பயணம் இல்லையா?

கடல் என்பது ஒரு துளியினுடைய பயணத்தின் முடிவா?

கடல் என்பது

இயக்கமில்லாத இடமா? இல்லை!

கடலுக்கும் பயணமுண்டு!

அருவியாய் ஆறாய் நடந்து வந்த துளி-

கடலில் சென்று முடிந்து விடுவதில்லை!

பக்தியைப் போல

காதலைப் போல

அந்தப் பயணம் தொடர்கிறது!

கடல் என்பது

நிற்கும் நீரல்ல! புதுப்பிக்கப்படும் நீர்!

ஒரு கட்டத்திற்கு மேல்

கடலும், பக்தியும், காதலும்

கண்ணுக்குத் தெரியாத பயணத்தில் இருக்கிறது!

கடல் எப்படிப் பயணம் செய்கிறது?

மேல் நோக்கி, நீராவியாய் மேல்நோக்கி

வானத்தை நோக்கி மேகத்தை ஆக்கி.

கடல் போல் ஒரு பயணம்……

இவ்வாறு நம் சிந்தனைக்குக் கருத்துகளைச் சீராய் வழங்குகிறார். ஒரு ஆசிரியர் போல சின்ன சின்ன வினாக்களை எழுப்பி எளிமையான முறையிலே சிந்திக்க வைப்பதுதான் சிறப்பு. கவிஞர் இவ்விதம் தம் கருத்துகளை கவிதைகளில் அழகாக ஆளுகிறார். இங்ஙனம் தம் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தந்திர தினவிழா:

பா.விஜய் தனது அடுத்த அக்னிப் பிரவேசம் என்னும் நூலில் முதற் கவிதையாய் (சு)தந்திர தினவிழா என்ற ஒன்றினைப் படைத்துள்ளார். கவிஞர் சிறு வயது முதல் சுதந்திர தின விழாவைப் பார்த்து வருகிறார். ஆயின் பல வருடங்களாக பல விழாக்கள் போகின்றனவே தவிர சமுதாயத்தில் பெரியதாக எந்த மாற்றத்தையும் அது ஏற்படுத்தவே இல்லை என்பதை வேதனையுடன் பதிவு செய்கிறார். சமூக அக்கறையுடைய ஒரு இந்தியனாய், ஒரு தமிழனாய்த் தன் மன உணர்வுகளைச் (சு)தந்திர தின விழா என்னும் கவிதையில் வடிவமைத்துக் காட்டுகிறார் கவிஞர். சுதந்திர விழாவை தந்திர விழா எனத் திருத்தி எழுதுவோம் எனக் கூறுகிறார். நாகத்திற்கு நல்ல பாம்பென்று பெயர் சூட்டியிருப்பதால் ஏதோ ஒன்றுக்கு என்னவோ ஒரு பெயர்! எனச் சாடுகிறார் கவிஞர்.

“இங்கே ஒவ்வொரு முறையும்

விழா போகிறதே தவிர

ஒவ்வொரு விழாவும்

ஒட்டடை அடிக்கப் போய்

ஓடு மாற்றிய கதையாய்

ஒரே மாதிரிதான் போகிறது”. எனச் சலித்துக் கொள்கிறார். ஒவ்வொரு முறையும் சுதந்திர தின விழாவைக் கொண்டாடுவதன் மூலம் மறந்தவற்றை மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளக் கூடிய நிர்பந்தம்தான் என்கிறார். இவ்விழா கொண்டாடாவிட்டால் மக்கள் அத்தனையும் மறந்தே போவர் என்கிறார் கவிஞர். ஒரு கொடியேற்றுபவருக்கு வழங்கப்படும் கௌரவம் கூட இந்தக் கொடிகளுக்கு வழங்கப்படவில்லையே அதுதான் வேதனை என்கிறார். இந்தப் பேச்சாளர்கள் பேசுவதோடு நிறுத்திவிடுகிறார்களே, சுதந்திரப் பொன்விழாக் கண்டும் பொறுப்பினைப் பலரும் பெறவில்லையே! உண்மையான நாட்டுப்பற்றின் உணர்வை யாரும் பெறவில்லையே! பகுத்தறிவு படரவேயில்லையே! சுதந்திரத்தன்று சூளுரைப்பவர்கள் யாரும் சாகவில்லை. ஆனால் சுதந்திரம் செத்துவிட்டதெனக் கவிஞர் குமுறுகிறார். இக்கவிதையில் பா.விஜய்யின் நாட்டுப்பற்றினை நன்கு நாம் உணர முடிகிறது. ஒரு உண்மையான கவிஞன் சுயமரியாதைக்காரன் என அவரே சுட்டிக் காட்டியுள்ளார். பா.விஜய் தன் படைப்பின் மூலம் தன் உள்ள உணர்வின் ஆளுமையை நன்கு வெளிப்படுதியுள்ளார்.

வரலாற்று நிகழ்வுகளின் பின்னனியில்:

பொதுவாக மனிதர்கள் வரலாற்று நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள சான்றாக அமைந்த ஆவணங்கள், கல்வெட்டுகள், சாசனங்கள் போன்றவற்றை நாடி விளங்கிக் கொள்வர். நமது கவிஞர் மாற்றி யோசிக்கிறார். வரலாற்றுச் சிறப்பு நிகழ்ச்சிகளை நிலை நிறுத்த எத்தனை பேர் தன்னுடைய உயிரையே தியாகம் செய்துள்ளனர், நிழலுக்குப் பின்னால் எத்தனை நிஜங்கள் நிழலாகிவிட்டன. நிலையான நிஜங்களுக்குப் பின்னால் நிழலாகிப் போன நிஜங்கள் எத்தனை எத்தனை? இவற்றை “உடைந்த நிலாக்கள்” எனும் தலைப்பில் வெளிவந்துள்ள நூலில் பல கவிதைகளின் வாயிலாக வெளியிட்டுள்ளார் கவிஞர். “உடைந்த நிலாக்கள்” பாகம்-2ன் முகப்பு உரையில் பா.விஜய் அவர்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதோ இனி உங்கள் களம்!

சரித்திரம் சார்ந்த காதலின் வேர் முனையில்

இருந்து வழியும் நிஜத்தின் தேன் பருக

உங்கள் பட்டாம்பூச்சி கண்கள் பயணப்படட்டும்”

‘நிஜமென்னும் தேன் பருக, பட்டாம்பூச்சிக் கண்கள் பயணப்படட்டும்’ என்பதில் என்ன ஒரு அழகான கற்பனை! இவ்வாறு பா.விஜய் தனது ரசனையை இங்கு பதிவு செய்துள்ளார்.

நமக்கெல்லாம், மும்தாஜுக்காக ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டினார் என்பது வரைதான் தெரியும். ஆனால் தாஜ்மகாலின் மாதிரியை வடிவமைக்க கலைஞன் ஒருவன் தன் உயிரையும், காதலியையும் விலையாகக் கொடுத்தான் என்ற செய்தியைக் கற்பனை கலந்து மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர். பல விதமான கலைஞர்களின் உள்ள காதலின் தன்மையைக் கற்பனை கலந்து மிக அற்புதமாக கவிதைகளாகக் கட்டமைத்து உள்ளார் கவிஞர். காதல் என்ற ஒரு உணர்வுக்குத்தான் எத்தனை பரிமாணங்கள்! அத்தனையும் பா.விஜய் தம் படைப்புகளில் வடிவமைத்துள்ளார் என்றால் அது மிகையில்லை.

அறிவியல் செய்திகள்:

பா.விஜய் கவிதைகளை வழங்கும் கலையுணர்வு மிக்க கலைஞர் மட்டுமல்ல. தமது கவிதைகளில் காதல், வீரம், சிறப்பு இதனை மட்டும் சொல்லவில்லை. வரலாற்று நிகழ்வுகளின் பின்னனி, இயற்கை வருணனைகள், பொது அறிவு முதல் அறிவியல் செய்திகள், இசை மற்றும் கணக்குகள் கூடக் கொடுத்துள்ளார். சான்றாக சில.

“கண்ணாடி என்பது என்ன?

சிலிகான் என்ற உலோகத்தை

நீர் நிலையில் இருத்தி

1600 டிகிரி வெப்பத்தில் உறைய வைக்கையில்

கண்ணாடி உருவாகிறது.

கண்ணாடி என்பது

உறைநிலையில் உள்ள தண்ணீர்!

ஆத்திரம் என்பது என்ன?

அவமானம் என்ற உலோகத்தை

மனநிலையில் இருத்திக்

கோப வெப்பத்தால் உறைய வைக்கையில்

ஆத்திரம் உருவாகிறது!

ஆத்திரம் என்பது

உறைநிலையில் உள்ள அவமானம்!”

ஒரு மனிதன் அவமானம் அடைவதினால் ஆத்திரம் கொள்கிறான். கவிஞர் மனிதனின் மன உணர்வினுக்கு அறிவியல் சார்ந்த உவமை கூறி விளக்குகின்றார். அது மட்டுமா,

ஒரு ஆணுடைய கோபம் தீ!

தண்ணீர் ஊற்றினால் அணைந்து விடும்!

ஒரு பெண்ணுடைய கோபம் கந்தகம்!

அணையாது!

கோப உணர்வினை விமர்சிக்கின்ற கவிஞர், தீ தண்ணீர் ஊற்றினால் அணைந்துவிடும், ஆனால் கந்தகம் அணையாது! என்ற அறிவியல் சார்ந்த எடுத்துக் காட்டினை வழங்குகிறார். மேலும் பொதுவான தத்துவார்த்தங்களையும் கவிஞரின் படைப்புகளில் காணமுடிகிறது.

“பிரம்மாண்டமானதும்

பிரம்மாண்டமானவர்களும்

உடைந்து போவது தன்னாலேயேதான்!

ஒரு பெரிய கப்பலை உடைக்கிறது

ஒரு சிறிய கடற் பாறை! இல்லை!

சென்ற வேகத்தில் கப்பல் பாறையில் மோதி

தன்னைத் தானே உடைத்துக் கொள்கிறது!”

மேற்கண்ட கருத்து ‘நன்மையும் தீமையும் பிறர் தர வாரா’ எனும் முதுமொழியை ஒட்டியே உள்ளது.

‘மனிதனை விட மகான்களைக் கண்டுணரும் சக்தி மிருகங்களுக்கு அதிகம்! என்றும் பொது செய்திகளையும் ஏராளமாகச் சொல்லிச் செல்கிறார் கவிஞர்.

உச்சக்கட்டம்:

“கவிதை! உச்சக் கட்டத்திற்குப்

போகும்போது எளிமையாகிவிடும்!

இசை! உச்சக் கட்டத்திற்குப்

போகும்போது கண்ணீராகி விடும்!

காதல்! உச்சக் கட்டத்திற்குப்

போகும்போது ரூபமற்றதாகி விடும்!”

இது போன்று எளிமையாக அரிதான கருத்துகளைச் சொல்லிச் செல்கிறார் கவிஞர்.

விலங்கியல்:

“பசித்தாலும் புலி புல் தின்னாது!

ஆம்! பசித்தால் புலி புல் தின்னாதுதான்!

ஆனால் பசிக்கவே இல்லையேல் புலி புல் தின்னும்!

இது விலங்கியல் அதிசயம்!”

புலிக்கு பசியெடுக்கவில்லையேல் அதன் காரணம் அஜீரணம்! அஜீரணம் போக்கும் சூரணம்தான் புல்! புல் ஒரு மூலிகை! புலிக்கும் புல்லின் சக்தி புரியும்! அதனால் புலி புல் தின்னும்! என்று விலங்கியல் தத்துவம் உரைக்கிறார் கவிஞர்.

பன்முகச் சிந்தனை:

“காதலில் சிற்றின்பம் வந்து

கலக்கும்போது முழுமை அடைகிறது!

காதலில் பேரின்பம் வந்து

கலக்கும் போது பெருமை அடைகிறது! என்று காதலோடு இல்லறம் புகுந்தால் சிற்றின்பம், துறவறம் புகுந்தால் பேரின்பம். பேரின்பத்தில் காதல் பக்தியாகி பரிணமிக்கும் என்பதை உணர்த்துகிறார் கவிஞர்.

வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்ல, பா.விஜய் பூகோளமும் அறிந்தவர்தான். சான்றாக,

“ஒரு கடலுக்குள்

இரண்டு கண்டங்களை இணைக்கும்

எரிமலைகள் பதுங்கி இருப்பதைப் போல

ஒரு பெண்ணுக்குள் இரண்டு மதங்களை இணைக்கும்

காதல் மலை ஒளிந்து இருந்தது..” என்று காதலினால் மதம், இனம், நிறம், மொழி அனைத்தையும்வெல்ல முடியுமென்பதை உணர்த்த வந்த கவிஞர் பூகோள-புவியியல் கருத்துகளை உவமையாகுகிறார்.

“அதிகமாக ஜெயித்தவர்களும் கடவுளைப் பற்றிப் பேசுகிறார்கள்!

அதிகமாகக் காதலிப்பவர்களும் கடவுளைப் பற்றிப் பேசுகிறார்கள்!

அடடா! காதல் நாத்திகனுக்குக் கூட கடவுளாகி விடுகிறதோ?

மேற்கண்ட வரிகளில் காதல் தெய்வீகமானது என்று கவிஞர் கூறுகிறார்.

“மனம் என்பது உணர்ச்சி வகுப்பு!

அறிவு என்பது பயிற்சி வகுப்பு !

மனம் சொல்வதை அறிவு கேட்டால் சுயநலம்!

அறிவு சொல்வதை மனம் கேட்டால் பொது நலம்!”

என்று சுயநலத்திற்கும் பொதுநலத்திற்கும் இலக்கணம் படைக்கிறார் பா.விஜய்.

“ஒரே ஒரு அணு ஆயுதமே அபாயகரமானது என்றால்

ஒவ்வொறு அணுவையுமே ஆயுதமாகக் கொண்ட ஒரு மனிதன்

எத்தகையவன்! அந்த மனிதன் தான் அலெக்ஸாண்டர்!”

இவ்வாறு அறிவியல் செய்தியை உவமையாக்கிக் கையாண்டுள்ளார் பா.விஜய்.

“உயிர் விலை மதிப்பற்றது!

அது இழப்பது தேசத்திற்காக மட்டுமே

இருக்க வேண்டும்!” இவ்வரிகள் நாட்டுப்பற்றை ஊட்டுவதாய் அமைகின்றது.

“வெற்றி என்பது செயல்படுதலில் இல்லை

திட்டமிடுதலில் தான் இருக்கிறது!.....” என்று திட்ட மேலாண்மையைச் சுட்டுகிறார்.

“கலைஞனயும் வீரனையும்

பொருட்படுத்தாவிட்டால்

பெருங்கோபம் வரும்” என்று கலைஞனின் நிலையை விளக்குகிறார்.

“அன்பின் கண்களுக்கு

அஃறிணையும் உயர்திணைதான்”. இவ்வரிகள் உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்னும் பாரதியின் வரிகளை நம்க்கு உணர்த்துகின்றன.

“வீரர்கள் வீழ்வது இன்னொரு வீரனால் அல்ல!

பக்கத்தில் இருக்கும் துரோகத்தால்

அந்தத் துரோகம் தொடர்கிறது இன்றுவரை.” என்ற வரிகள் மக்களிடையே மனங்களில் எழும் துரோக உணர்வினைச் சுட்டுகின்றன.

முடிவுரை:

இங்ஙனம், கவிஞர் தாம் படைத்துள்ள படைப்புகளில் பல் வகையான செய்திகளைக் கலந்து சுவை பட இலக்கியம் அமைத்துள்ளார். இவ்விலக்கியங்களில் வித்தக கவிஞர் பா.விஜய்யின் ஆளுமைகளை அவர் வடிவமைத்த கதாப்பாத்திரங்கள் கற்பனைகள், வரலாற்றுத் தேடல்களால் விளைந்த புதினங்கள் மற்றும் அறிவியல், புவியியல், பொதுவியல் போன்ற செய்திகளைப் படைத்த பாங்குகளின் மூலம் அறிய இயலுகின்றது.

ஆளுமையைப் பொறுத்தவரை அறிஞர் ஆல்போர்ட் முன்மொழிந்த வரையறையே மிகவும் சிறந்ததாகக் கொள்ளப்படுகின்றது. இவரது கூற்றுப்படி ‘ஒவ்வொரு மனிதனிடமும் குறிப்பிட்ட ஒரு வகையில் அவனது உடல் மனப்பண்புகள் சேர்ந்து ஒருங்கமைந்து இருக்கும். இவ்வொருங்கமைப்பின் இயல்பு மனிதனுக்கு மனிதன் சிறிதேனும் மாறுபட்டிருக்கும். தனி மனிதன் ஒருவன் தன் சூழ்நிலையில் எவ்வாறு செயல்படுகிறான் என்பது இவ்வொருங்கமைப்பின் தன்மையைப் பொறுத்ததாகும். இத்தகைய உடல், மனப் பண்புகளின் தனிப்பட்ட ஒருங்கமைப்பு ஒருவனது ஆளுமையாகும்”. பா.விஜய் அவர்களின் படைப்புகளின் வாயிலாக அவரது ஆளுமையை நாம் நன்கு உணர முடிகிறது.


1 comment:

krishy said...

அருமையான பதிவு

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ் போஸ்ட்

To get the Vote Button

தமிழ் போஸ்ட் Vote Button

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் போஸ்ட்

Post a Comment