Monday, August 18, 2014
குருபக்தி – மகாபாரதத்தில் ஒரு பகுதி
Wednesday, July 10, 2013
மழை
Thursday, August 2, 2012
கல்வியின் சிறப்பு
Saturday, May 21, 2011
திருக்குறளும் திருமந்திரமும்
திருக்குறளும் திருமந்திரமும்
14.05.2011 மற்றும் 15.05.2011 ஆகிய இரு தினங்களில் ‘வளர்தமிழ் ஆய்வு மன்றம்’, கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நடத்திய எட்டாவது தேசிய கருத்தரங்கில் வழங்கிய கட்டுரை.
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறு! (திருமந்திரம்: பாடல்-81)
முன்னுரை:
மக்கட் சமுதாயம் நலன் பெற வேண்டுமென்ற நோக்கத்தில் தான் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. ஆதிகாலந்தொட்டு இக்காலம் வரை அங்ஙனமே இலக்கியங்கள் உருவாகின்றன. படைப்பாளனின் சிந்தனையில் கருவாகின்றன. அவ்வாறு உருவானவற்றுள் எக்காலத்திலும் மறுக்க முடியாத மாறாத உண்மைகள் நின்று நிலை பேறு கொள்கின்றன. அவற்றுள் தொன்மையானவை திருக்குறளும், திருமந்திரமும் ஆகும். இவ்விரு நூல்களிலும் கூறப்பட்டுள்ள ஆழமான கருத்துகளையும் அழகான ஒற்றுமைகளையும் இவண் சிறிது ஆராய்ந்து தெளிவோம்!
ஆசிரியர் தன்மை:
திருமூலர் பதினென் சித்தர்களுள் ஒருவராவார். இவரால் படைக்கப்பட்டது சைவத் திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாகக் கொண்டாடப்படும் ‘திருமந்திரம்’ ஆகும். இந்நூல் அறநெறிகளையும், ஞான, யோக மார்க்கங்களையும் விளக்குவதாக அமைந்துள்ளது. திருமூலர், நந்தியம் பெருமானிடம் ஞான யோக மார்க்கங்களைக் கற்றுத் தேர்ந்த யோகியாவார். கூடு விட்டு கூடு பாயும் ஆற்றல் பெற்றவர். திருவள்ளுவர் கி.மு. 31ஆம் ஆண்டு தோன்றியவர் என்றும், இவர் திருக்குறளை மதுரை தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றினார் என்றும் கூறுவர். மயிலாப்பூரில் வாழ்ந்தவர். இவரது மனைவி வாசுகி அம்மையார் ஆவார். இருவரும் மனமொத்த தம்பதிகளாய் வாழ்ந்துள்ளனர். இவரைப் பற்றி பிற செய்திகள் அறியவொண்ணாமலும், சில சர்ச்சைக்கு உரியதாகவும் உள்ளன. திருமூலரும், திருவள்ளுவரும் வெவ்வேறு காலத்தவர்கள். ஆயினும் அவர்கள் படைத்த நூல்களில் கருத்தொற்றுமையை பல இடங்களில் காண முடிகின்றது. அவற்றை இக்கட்டுரையில் காண்போம்.
கடவுள் வாழ்த்து:
முதற் குறளிலேயே வள்ளுவர் “ஆதிபகவன் முதற்றே உலகு”(குறள்-1) எனக் குறிப்பிடுவார். எழுத்துகள் அகரத்தை முதலாகக் கொண்டமைந்ததைப் போல உலகமும் ஆதிபகவனை முதலாகக் கொண்டு அமைந்துள்ளது என்பார் வள்ளுவர். திருமூலரும் திருமந்திரத்தில் “ஆதி”, “பகவன்” எனத் தனித்தனியே சொல்லாட்சியைக் கையாண்டுள்ளார். மேலும் “படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்” என்ற பாடலில் பகவன் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார். கோயிலில் சென்று பகவனுக்குப் படைப்பது இறைவனைச் சென்று சேர்கிறதா? என்றால் அது நமக்குத் தெரியாது. ஆனால் “நடமாடக் கோயில் நம்மற்கு ஒன்று ஈயில், படமாடக் கோயில் பகவர்க்குத் தாமே” அதாவது நடமாடும் கோயில்களாக விளங்கும் மக்கட்கு உதவினால் அது இறைவனுக்கு உதவியதற்கு ஒப்பாகும். அச்செயல் இறைவனுக்குச் சென்று சேரும் எனக் குறிப்பிடுகின்றார். இது ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. “அகர முதல எழுத்தெல்லாம்...” (குறள்-1) என்ற குறட்பா அகர வடிவமானவன் இறைவன் என்று சொல்லும். இதனையே “ஆரும் அறியார் அகாரம் அவனென்று” என்று திருமந்திரம் பறைசாற்றும். “மலர்மிசை ஏகினான்” (குறள்-3) என்று குறள் இறைவனைப் போற்றும். திருமந்திரமோ “மலருறை மாதவன்” எனக் கொண்டாடும். இவ்வாறு கடவுள் வாழ்த்துப் பாடலிலேயே இரு நூல்களும் பலவாறு ஒருமித்த கருத்துகளைக் கூறுவனவாய் அமைந்துள்ளன.
வான்சிறப்பு:
உலகம் நின்று நிலவ, எங்கும் எதையும் இயக்கும் ஓர் இயக்க ஒழுங்கு இறைநிலையாய்ப் போற்றப் பட்டாலும் உயிர்கள் தழைக்க உவந்து வளம் சுரக்கும் வான் மழையும் போற்றுதற்கு உரியது தானே! ஆம்! மழையின் சிறப்பையும் இன்றியமையாத தேவைகளையும் பற்றித் திருக்குறளும் திருமந்திரமும் இனிது எடுத்து மொழிகின்றன.
“வானின் றுலகம் வழங்கி வருதலான்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று” (குறள்-11) வானம் மழையைப் பொழிந்து தருவதால் தூய்மையான அம்மழை நீர் உலக உயிர்களைக் காக்கும் அமிழ்தம் போன்றது என வள்ளுவர் விளக்குவார். இதனையே திருமூலர் “அமிழ்தூறும் மாமழை” எனப் போற்றுவார். வான் மழையின்றேல் பூசைகள் இல்லையெனபதை “சிறப்பொடு பூசனை...” (குறள்-18) என்ற தொடரால் வள்ளுவர் குறிப்பிடுவார். இதனையே திருமூலர் “சிறப்போடு பூநீர்...” எனக் குறிப்பிட்டுள்ளார். வான் மழையின் சிறப்பை வள்ளுவர் ஒரு அதிகாரத்தில் பத்து குறட்பாக்களின் வாயிலாகத் தெரிவிப்பதைப் போலவே திருமூலரும்
“தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்,
தானே தடவரி தண்கடல் ஆமா” என்றும் “பெயலும் மழைமுகில் பேர் நந்தி தானே” என்றும் பல பாவடிகளில் மழையின் சிறப்பினை உவந்து உரைக்கின்றார்.
நீத்தார் பெருமை:
நீத்தார் - துறந்தவர், துறவு பூண்டவர் எனப் பொருள் கொள்ளலாம். உலக வாழ்க்கையில் உலகம் நிலை பெற இறைவனும் மழையுமட்டுல்ல, துறவு ஒழுக்கம் பேணுபவர்களும் ஒரு காரணமாவர். மனிதப் பிறவியில் பிறந்தும் பிற உயிர்களைப் போலல்லாமல் உலக வாழ்வினைத் துறந்து பற்றற்று, உலக நலனைக் கருத்தில் கொண்டு வாழும் சான்றோர்களால் தான் உலகம் நல்ல வண்ணம் இயங்குகின்றது என்றால் அது மிகையாகாது.
வள்ளுவர் நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தையே படைத்துள்ளார். திருமூலரும் “இறப்பும் பிறப்பும் இருளையும் நீங்கி துறக்கும் தவங்கண்ட... அறப்பதி” என்று துறவறம் பூண்டவர்களைப் போற்றிப் பரவுகிறார்.
ஐம்புலன்களையும் மதம் கொண்ட யானைகளாக உருவகித்து அதனையடக்கும் அங்குசமாக அறிவினை உருவகிக்கின்றனர் திருவள்ளுவரும் திருமூலரும். எவ்வளவு பெரிய உண்மை. புலன்கள் ஒவ்வொன்றும் மதங்கொண்ட யானைக்குச் சமமானவை. அதனை நல்வழிப்படுத்த அறிவு எனும் அங்குசத்தைச் சரியான நேரத்தில் நாம் பயன்படுத்த வேண்டும். இன்றேல் புலன்கள் அடக்கமின்றி அலைபாய்ந்து நம் உயிர் சக்தியை வீணடித்து விடும். உயிர்ச் சக்தியை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் உடலும் உள்ளமும் பொலிவு பெறும். இன்றேல் உயிர்ச்சக்தி குறைவானால் உடல், மனம் இரண்டுமே சோர்ந்து போகும். எனவே, விழிப்புணர்வுடன் செயலாற்றக் கற்றுக் கொள்ளவேண்டும். அறிவினைப் பயன்படுத்தி புலன்களைக் காத்துக் கொள்ள வேண்டும். இதனையே, வள்ளுவர் “உரனென்னும் தோட்டியான் ஓரரைந்தும் காப்பான்” (குறள்-24) எனக் கூறுகிறார். திருமூலரும்
“முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவெனும் தோட்டியை வைத்தேன்” எனப் பாடுகிறார்.
அந்தணரின் இலக்கணம் பற்றி கூறுகையில்,
“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்” (குறள்-30) எனக் குறளும்,
“அந்தணராவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பி முப்போதும் நியமஞ்செய்” எனத் திருமந்திரமும் உரைக்கின்றன.
இவ்வாறு புலன்களை அடக்கி அந்தணராய் நின்று துறவு பூணும் சான்றோர்களின் பெருமையை திருக்குறளும் திருமந்திரமும் பகர்கின்றன.
அறன் வலியுறுத்தல்:
திருவள்ளுவரும் திருமூலரும் அறச்செயல்களையே செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றனர். “சிறப்பீனும் செல்வமும் ஈனும்” (குறள்-31) எனும் குறட்பாவின் மூலம் அறவழியில் சென்று நேர்மையான முறையிலே பொருள் ஈட்டினால் அறம் அழியாத செல்வத்தையும் சிறப்பையும் தரும் என வள்ளுவர் குறிப்பிடுவார். இதனையே திருமூலரும்
“திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறியே ஆற்றல் வேண்டும்” எனக் கூறுகின்றார். மேலும் இயன்றவரைக்கும் அறச்செயல்களைச் செய்யவேண்டும் என “ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே” (குறள்-33) என்ற குறள் மூலம் வள்ளுவர் கூறுகிறார். திருமூலரோ “யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை” என்ற பாடலின் வாயிலாக எளிமையான வகையில் அனைவரும் இயன்ற அளவிற்கு அறம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
அறமே அழியாத துணையாய் நிற்பதாகும். “அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க” (குறள்-36) நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம், பிறிதொரு நாள் தருமம் செய்யலாம் என எண்ணி ஒதுக்கி வைக்காமல் உயிருள்ளளவும் அறவழியில் தான தருமங்களைச் செய்ய வேண்டும். ‘பிறப்பும் இறப்பும் அவன் கையிலே! நாம வாழும் வாழ்க்கை நம்ம கையிலே!’ என்று இக்காலக் கவிஞன் கூடக் குறிப்பிடுவான். இக்கருத்தினையே திருமூலரும், இறக்கும் தருவாயில் எவரும் உடன் வரார். அறமே, தர்மமே தலைக் காத்து நிற்கும் என்ற கருத்தினை “பண்டம் பெய்கூரை...” என்ற பாடலின் வாயிலாக வலியுறுத்துகின்றார். மேலும் ஒருவன் தன் வாழும் காலத்தை வீணடிக்காமல் தொடர்ந்து இயன்ற அளவு தருமம் செய்து வந்தால் அதனால் விளையக் கூடிய அறமானது, அவனுக்கு பிறவி மீண்டும் தோன்றாமலிருக்க அதன் வழியை அடைக்கும் கல்லாக இருக்குமென திருவள்ளுவரும் திருமூலரும் விளக்குகின்றனர். எவ்வாறெனில்,
“வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்”(குறள்-38)எனக் குறட்பாவும்,
“வாழ்நாள் அடைக்கும் வழியது வாமே!” எனத் திருமந்திரமும் எடுத்துரைக்கின்றன.
மனிதன் தான் எதற்காக பிறவி எடுத்தோம், எதனைச் செய்து முடிக்க வந்தோம் என்பதை அகநோக்காகக் கொண்டு அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டி தன் பிறவியைக் கழிக்க வேண்டும். மேலும் தொடர்ந்து தம் வாழ்நாள் முழுக்க அறம் செய்வதனால் மீண்டும் பிறவாமையைப் பெற முடியும் என்று இரு நூல்களும் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
இல்வாழ்க்கை:
இல்வாழ்க்கை செய்பவனுக்கு உரிய கடமைகளை வரிசைப்படுத்தி,
“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் -தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”(குறள்-43) என வள்ளுவர் கூறுகிறார். இல்வாழ்க்கையில் வாழ்பவன் ஒருவனது கடமைகளாவன:
தம் முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும், அவர்களுக்குச் செய்ய வேண்டிய நியமங்களைச் சரியாகச் செய்து தான தருமங்களை செய்ய வேண்டும். இதுவே முதற் கடமையாகும்.
அடுத்து தெய்வத்தை நம்பிக்கையோடு வழிபட வேண்டும், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
மூன்றாவதாக இல்லம் தேடி வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு, உள்ள விருப்பத்தோடு வரவேற்றுப் போற்ற வேண்டும்.
நான்காவதாக உற்றார், உறவினர்களைக் காத்தல் வேண்டும்.
ஐந்தாவதாக தன் பெற்றோர், மனைவி, குழந்தைகள், மற்றும் தமக்குத் தேவையானவற்றையும் நன் முறையில் பொருள் ஈட்டுவதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்.
ஆறாவதாக, அரசனுக்கு இறை செலுத்த வேண்டும்.
இவையாவும் இல்வாழ்பவனது கடமைகளாக வள்ளுவர் வரிசைபடுத்துகிறார்.
இக்கருத்தினையே திருமூலரும், “திறந்தரு முத்தியும்...” எனத் தொடங்கி “அறைந்திடல் வேந்தனுக்கு ஆறில் ஒன்றாமே!” என முடியும் பாடலின் வாயிலாகக் கூறியுள்ளார்.
ஒவ்வொரு தனி மனிதனும் இத்தகு பொறுப்பினை பெற்றுள்ளான். பொறுப்புணர்ந்து நடப்பவர் எண்ணிக்கை அதிகமானால் சமுதாயம் மேம்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
விருந்தோம்பல்:
விருந்தோம்பல் முறையை நமக்கு விளக்கிட முனைந்த வள்ளுவர்,
“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு”(குறள்-86) என மொழிந்துள்ளார். வந்த விருந்தினர் உணவு உண்டு செல்ல, இனி விருந்தினராக யார் வருவார்கள் என எதிர்ப்பார்த்துக் காத்திருப்பவன் தேவர் உலகத்தில் மிகச் சிறந்த விருந்தினராகப் போற்றப்படுவான் என்று விருந்து போற்றுபவனின் சிறப்பை வள்ளுவர் கூறுகிறார்.
இக்கருத்தையே திருமூலர் “பார்த்திருந்து உண்பின்” எனப் பகர்கின்றார்.
விருந்து போற்றுகின்றோமானால் அது சிறந்தது. ஆனால் அதன் சிறப்பு, விருந்தினரின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். விருந்துண்பவர் நன்மக்களாயின் நற்பயன் விளையும், தீக்குணத்தோராயின் தீமையே விளையும். இக்கருத்தினை,
“இணைத்துணைத் தென்ப தொன்றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்”(குறள்-87)என்கிறது குறள்.
நல்லவர்க்குக் கொடுக்கும் விருந்தின் பயன் ‘பாத்திரம்’ என்றும் தீயவர்க்குக் கொடுக்கும் விருந்தின் பயன் ‘அபாத்திரம்’ என்றும் திருமந்திரம் விளக்கம் தரும். பாத்திரம் என்பது எள்ளளவேனும் சிவஞானியருக்கு அளித்தால் சித்தி, முத்தி, போகம் கிடைக்கும். யோகம், இயமம், நியமம் முதலியவற்றை அறிந்தவர்களுக்குத்தான் உதவுதல் வேண்டும். குருபூசை, மகேசுவர பூசை என்ற தலைப்பில் உள்ள திருமந்திரப் பாடல்கள் சிவனடியார்க்கு உணவு வழங்குவதை உயர்வாகக் கூறுகின்றன. துறவிகளுக்கு உணவு வழங்குதல் சிறப்பானது என்கிறது திருமந்திரம்.
அபாத்திரம் என்பது எவ்வளவு தான் மூடர்களுக்கு அளித்தாலும் அதனால் பலனொன்றும் இல்லை. மறுமை இன்பம் வாய்க்காது. இறைவனை வழிபடாதவருக்குக் கொடுப்பவரும், ஏற்பவரும் நரகம் புகுவர் எனத் திருமந்திரம் விளக்கம் தரும்.
நம் முன்னோர்கள் ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ எனக் கூறுவர். அக்கருத்தை ஒட்டியே திருமூலரும் திருவள்ளுவரும் உரைக்கின்றனர்.
நல்ல பக்குவமடைந்த, சித்தத் தெளிவு கொண்டோர் உணவு சமைத்தால் அத்தன்மையே உணவு உட்கொள்வோருக்கும் வரும். பக்குவமற்றவர் உணவு தயாரித்தால் அத்தன்மையையே உணவு உட்கொள்பவரும் பெறுவார் _ மகாபாரதக் கிளைக்கதை ஒன்று இதனை விளக்குவதாய் அமையும். எனவே நல்ல தன்மைகளை நாமும் வளர்த்துக் கொள்ளவேண்டும். நல்ல தன்மை உடையவரின் நலனை விரும்பிக் காக்க வேண்டும். நல்லோருடன் நட்புக் கொள்தல் வேண்டும். இக்கருத்தை ‘நல்லினம் சாரல், நயன் உணர்தல்’ எனும் இன்னிலை பாடல் மூலம் உணரலாம்.
முடிவுரை:
நலன் பயக்கும் கருத்துகளை திருக்குறளும் திருமந்திரமும் தெவிட்டாமல் தருகின்றன. இலக்கிய சுவை உணர்ந்து நாம் நம் வாழ்க்கையின் இலக்குகளை நிர்ணயிப்போம். திருவள்ளுவரின் கருத்துகளைத் திருமூலர் எடுத்தாண்டாரா அல்லது திருமூலரின் கருத்துகளை வள்ளுவர் கையாண்டாரா என்ற வினாவிற்கு விடையில்லை. இருப்பினும் பெருந்தகை சான்ற அவ்விருவர் கருத்துகளையும் செவிமடுத்து நல்ல வண்ணம் வாழவேண்டியது நம் கடமையாகும். தனிமனித ஒழுக்கம் பேணப்படவேண்டும். கல்வியை அனைவரும் முறையாகப் பெறவேண்டும். அனைவரும் உழைத்துப் பொருளீட்டி அறவழியில் நின்று பிறவிப்பயன் பெறவேண்டும். வேண்டுவது விழைவதாக! வேண்டுவது விளைவதாகட்டும்!!
நலமே நிறைக! தமிழே வளர்க!!