Saturday, December 19, 2009

அறத்தால் வருவதே இன்பம்

குறிப்பு:குருகுலத் தென்றல் எனும் மாத இதழ் சார்பாய் நடத்தப்பட்ட 11-வது அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற எனது படைப்பு.

ன்னையின் அறம் அன்பு செய்வது!
சானின் அறம் அறிவு புகட்டுவது!
ல்லறத்தான் அறம் விருந்து ஓம்புவது!
வோனது அறம் ஈகையை வளர்ப்பது!

ற்றாரின் அறம் உண்மையாய் இருப்பது!
ராரின் அறம் ஊக்கம் கொடுப்பது!
ல்லோரின் அறம் எளிமையாய் வாழ்வது!
ற்றதோர் அறம் ஏந்திழையை மதிப்பது!

யன்மீர்! உம் அறம் ஐயமற கற்பது!
வ்வொருவரின் அறம் ஒற்றுமையாய் இருப்பது!
தும் மறையோர் அறம் ஓதுவதை உணர்வது!
ஒளவை தந்த அறம் அறநூல்கள் விளக்குவது!


பிள்ளையாய் இருந்தால் பெற்றோரையும் பெரியோரையும்
மதித்து நடப்பதே அறம்!
வளர்ந்தநிலைப் பிள்ளையென்றால் நூல்களைக் கற்பதும்
அதன்வழி நடப்பதும் அறம்!

அடுத்தநிலை யென்றால் அறமும்புகழும் பேணித்
தொழில் செய்வதுவே அறம்!
தொடுத்த தொழிலில் பொருளீட்டலும் பிறர்க்கு
ஈந்து மகிழ்வதும் அறம்!
இல்லறம் பேணுவதும் நல்லறம் பேணுவதும்
சொல்லறம் பேணுவதும் அறம்!
வல்லமை கொண்டே வாய்மையைக் காப்பதும்
நேர்மையை ஏற்பதும் அறம்!

அறவழி நின்று நேர்வழி சென்று
திரட்டிய செல்வ மதை
அகமது குளிர்ந்து முகமது மலர
ஜகமெங்கும் கொடுப்பது அறம்!
உள்ளம், சொல், செயல் இம்மூன்றும்
ஒருநேர்கோட்டில் உடையது அறம்!
உலக உயிரனைத்தும் தான் உணரும்
கடமை என்பது அறம்!

நிறைவாய் உயர்ந்த செல்வரும், சான்றோரும்,
தானதருமம் செய்வது அறம்!
உயர்வாய் உலகில் வாழும் பெண்டிர்
தாங்கொண்ட கற்பு அறம்!
துறந்தவர் துறவி என்பார் எல்லோரையும்
இறையென மதிப்பது அறம்!
அறமதை அகத்துள் நிறுத்தி நிதம்பேணுவோர்
பெறுவர் நற்பேறெனும் அறம்!

அறநூல்கள் பதினொன்றும் எடுத் துரைப்பதும்
விரித் துரைப்பதும் அறம்!
அறத்துள் நாயகமாய் எல்லாச் செயல்களிலும்
நீக்கமற நிறைந்திருப்பதும் அறம்!

அறமது செய்ய வயதொன்று மில்லை!
அறத்தினைச் செய்ய அகன்றிடுமே தொல்லை!
முழுமனதுடன் செய்யும் நல்லறத்தினால்
முழுப்பயனையும் நாம் நிதம் வெல்லலாம்!

அறத்தின் வழியே கிடைப்பதே இன்பமாம்!
மற்றதெல்லாம் இன்பம் தருவதாய்த் தோன்றலாம்!
பிறசெய்கையால் விளையும் இன்பம் முடிவினில்
துன்பந் தனையே தந்து செல்லும்!
செய்ய வேண்டிய செயல்களுள் ஒன்றாய்
உய்யும் வழியென உறுவதும் அறமே!
அறமே நிறைவாய் இன்பம் தருமே!
அறமே பிறவியைக் கடக்க உதவுமே!
அறமே சிறப்பும் செல்வமும் தருமே!
நன்மை யாவும் விளைவது அறத்தால்!
தீமை யாவும் முறிவது அறத்தால்!

அழிவே இல்லா ஆனந்தம் தருமே!
அறவோர் புகழும் ஆன்ற நல்லறமே!
கண்ணும் கருத்தும் கடமையில் நிறைவாய்
இருந்தால் விளைவது இன்பம்!
எண்ணும் எண்ணம் யாவும் சுத்தமாய்
இருந்தால் விளைவது இன்பம்!
சொல்லும் சொல்லில் தூய்மை சிறப்பாய்
இருந்தால் விளைவது இன்பம்!

வெல்லும் வகையை அறிந்தே யாமிங்கு
வென்றால் வருமே இன்பம்!
உள்ளும் புறமும் அகமே மேவி
உண்மை யிருந்தால் இன்பம்!
துள்ளும் மனமும் குணமும் தூய்மை
துலங்கிட வருமே இன்பம்!
ஒல்லும் வகையான் அறிந்தே யாமிங்கு
அறம்செய்தால் வரும் இன்பம்!

பல்லக்கில் செல்ல பண்புடன் நாம்
அறம்செய்வதால் வரும் இன்பம்!
தொல்லைகள் அகல வல்வினை விலக
துலங்கிடுமே நம்முள் இன்பம்!
செல்லும் வழியில் அறம் செய்வதினால்
செல்வமும் சிறப்பும் சேரும்!
உள்ளபடி இன்பம் தருவது அறமே
உணர்ந்தால் நன்மை பெருகும்!

கள்ளமில்லாமல் கடமையைச் செய்தால்
கனிவுடன் துணிவும் பெருகும்!
பிறவிப் பெருங்கடல் கடந்திடவே நமக்கு
உதவிடுமே நல் அறமே!
துறவியும் இங்கே சிறப்பு பெறுவது
அறத்தை துறக்காததனால் தானே!
அறவழி நின்று செல்வம் சேர்த்து
சிறப்பினைப் பெறுவோம் நாமே!
சிறப்பினைப் பெற்று ஈகையைச் செய்து
மேலும் சிறப்போம் நாமே!!

13 comments:

naanjil said...

பல்லக்கில் செல்ல பண்புடன் நாம்
அறம்செய்வதால் வரும் இன்பம்!
இதன் பொருள புரிய வில்லை.
திருக்குறள் எண் 37 தழுவியது என்றால்
புரிதல் தவறாக இருக்கக்கூடும்.

நாஞ்சில் பீற்றர், யு எஸ் எ

முருக.கவி said...

தங்கள் கருத்துக்கு நன்றி!
திருக்குறளின் கருத்து இங்கு எடுத்தாளப்படவில்லை. இது என் சொந்தக் கருத்து ஐயா.
பல்லக்கு என்பது திருவள்ளுவருடைய காலத்தில் வேண்டுமானால் மனிதனுடைய ஏற்றத்தாழ்வை குறித்திருக்கலாம். இங்கு மனிதன் பெறும் செல்வாக்கைக் குறிக்கிறது. வினை விதைத்தவன் வினை அறுப்பான் ; தினை விதைத்தவன் தினை அறுப்பான்! நன்றி!

கள்ளபிரான் said...

முதலில் கவிஞர் யார் என்பது தெரியவில்லை. அவர் நான் எழுதுவதைப் படிக்காமல் இருக்க எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன்.

கவிதை அறம் என்ற சொல்லுக்கு மதிப்பைக்கொடுத்ததாகத் தெரியவில்லை. எது அறம் என்பதில் குழப்பம். ஏதோ அறம் என்ற சொல்லை அள்ளிவீசி அசத்தலாம் என நினைத்து, அதில் வெற்றியும் கண்டுவிட்டார் - கவிதை முதற்பரிசைப் பெற்று விட்டதல்லவா!

முதலில் மரபுக்கவிதை போல எழுதி பின்னர் வசனகவிதைக்குத் தாவி விட்டார்.

அறம் என இவர் கருதி ஒரு சிலருக்கே சொல்லும் அறம், அனைவருக்கும் அது பொருந்தும் என அறியாதது வியப்பே.

//துறந்தவர் துறவி என்பார் எல்லோரையும்
இறையென மதிப்பது அறம்!
//

ஏன் துறவிக்கு மட்டும்?

//அறத்துள் நாயகமாய் எல்லாச் செயல்களிலும்
நீக்கமற நிறைந்திருப்பதும் அறம்!//

இது என்ன? அறத்துள் நாயகமாய் அறமேவா?

//இல்லறம் பேணுவதும் நல்லறம் பேணுவதும்
சொல்லறம் பேணுவதும் அறம்!
//

கவிஞர்கள் ஒரே சொற்றொடரின் ஒரே சொல்லை மீண்டும்மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்ப்பர். அப்படியே செய்யின், அவை பலபொருட்களைத் தரும்படி நயம்பட செய்வர். இப்பாணி சிலேடை வெண்பாவில் வரும்.

இங்கு எப்பாணி?

அறம் இன்பம் - இரண்டையும் பிணைக்கிறார். இன்பத்தை நோக்காகக்கொண்டு செய்வது அறத்தப் பழிபட செய்யும். பயன்கருதாச்செயலே அறமாகும்.

அறத்தைப்பற்றி பல கருத்துகள் சொன்னவர், இன்பத்தைப்ப்ற்றித் தனியாகவே பிற்பகுதியில் சொல்கிறார்.

கவிதையில் ஒரு கோர்வையில்லை என்பது ஒரு பெருங்குறை.

//பிறவிப் பெருங்கடல் கடந்திடவே நமக்கு
உதவிடுமே நல் அறமே!
துறவியும் இங்கே சிறப்பு பெறுவது
அறத்தை துறக்காததனால் தானே!
//

இது இவருக்கு வேண்டாத வேலை. பொதுவான கருத்தையே சொல்ல முன்வந்த கவிஞர் ஆன்மீகத்தோடு அறத்தைப்பிணிக்கிறார். இது ஆன்மிகம் பற்றியா? இல்லை பொதுவாகவா?


கலைக்குற்றம் (ஒன்றுக்குப்பின் முரணாக, கோர்வையில்லாமை, பலவகைக்கவிமரபுகளைப்போட்டுப்பின்னுவது), பொருட்குற்றம், பிறகு சொன்னதையே திருப்பிச்சொல்லல் (ஈகைபற்றிச்சொன்னது) - போன்ற குறைகள் நிறைந்த கவிதை.

எனினும்,

ஒரு சில சொற்றொடர்களும் கருத்துகளும் நன்றாக இருக்கின்றன:

//அறவழி நின்று நேர்வழி சென்று
திரட்டிய செல்வ மதை
அகமது குளிர்ந்து முகமது மலர
ஜகமெங்கும் கொடுப்பது அறம்!
உள்ளம், சொல், செயல் இம்மூன்றும்
ஒருநேர்கோட்டில் உடையது அறம்!
உலக உயிரனைத்தும் தான் உணரும்
கடமை என்பது அறம்!//

இவ்வரிகளுக்கு மட்டுமே இக்கவிதைக்குப் பரிசு கொடுக்கலாம்.


அகலக்கால் வைத்து, இடறி விழுந்துவிட்டார் கவிஞர்.

முருக.கவி said...

கள்ளபிரான் அவர்களே,
தங்கட்கு மிக்க நன்றி ஐயா!
பொன்னைப் புடமிடுதல் போலே
என்னை உயர்த்துதற்கு உம் கேள்வி!

அறம் என்ற சொல்லின் பொருளாக கடமை; நோன்பு; தருமம்; கற்பு; இல்லறம்; துறவறம்; நல்வினை; அறநூல்; அறக்கடவுள்; தருமதேவதை; மனதில் குற்றமில்லாமை போன்றவற்றை மனத்துள் கொண்டே எழுத முனைந்தேன்.

கவிதை என்பது மரபுக்கவிதை என்றோ, புதுக்கவிதை என்றோ, வசனக்கவிதை என்றோ போட்டி அறிவிப்பாளர்களால் தனியே குறிப்பிடப்படாமையால் என் நோக்கிற்கு ஏற்ப எடுத்தாண்டுள்ளேன்.

அறம் என்பது அனைவருக்கும் பொதுவானதே என்பதை நானும் அறிவேன் ஐயா.

//துறந்தவர் துறவி என்பார் எல்லோரையும்
இறையென மதிப்பது அறம்!//
இங்கு சில துறவிகள் தம்மைக் கடவுளெனக் கூறிக் கொண்டு மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையினைக் கருத்தில் கொண்டே எல்லோரையும் இறையென மதிப்பது அறம் என்றேன். இவ்விடத்தில் அறம் என்பது துறவிகளுக்கு மட்டும் என நான் சொல்லவில்லை. துறவிகளுக்கு உரிய அறம் எது என்பதையே சொல்லியுள்ளேன்.

//அறத்துள் நாயகமாய் எல்லாச் செயல்களிலும்
நீக்கமற நிறைந்திருப்பதும் அறம்!//
அறம் என்பது பல வகையான நல்ல செயல்களைக் குறிப்பதனால் எல்லாவற்றுள்ளும் நாயகமாய், நீக்கமற நிறைந்திருப்பது அறமே என்றேன்.


//இல்லறம் பேணுவதும் நல்லறம் பேணுவதும்
சொல்லறம் பேணுவதும் அறம்!//
'பேணுவதும்' என்ற சொல்லை மீண்டும் மீண்டும் சொன்னது சந்த நயத்திற்காகவே. அவ்வாறு சொல்லக்கூடாது என்ற சட்டத்திட்டங்கள் இல்லவே. இது மரபுக்கவிதை அன்று.

பயன் கருதாச் செயலே அறம் என்பதை உணர்வேன் ஐயா, ஆயின் 'அறத்தால் வருவதே இன்பம்' என்ற தலைப்பினை ஒட்டியே கருத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அறம் என்றால் என்னவென்பதை வரிசைப் படுத்தி பிறகு அதனால் விளையும் இன்பத்தைப் பற்றிச் சொல்லியுள்ளேன்.

கவிதையில் கோர்வையில்லை எனக் குறிப்பிட்டுள்ளீர்கள், இனி அக்குறை நேராமல் பார்த்துக்கொள்கிறேன்.

ஆன்மீகம் என்பது என்ன ஐயா?
நாம் நம்மை சீர் படுத்தி வாழ்தலே ஆன்மீகம். அறத்துள் அதன் பொருள் வந்துள்ளதால் அதனையும் சேர்த்தேக் குறிப்பிட்டுள்ளேன். ஆன்மீகம் வேறு வாழ்க்கை வேறு அல்ல. நமக்கென நன்னெறியை அமைத்துக் கொண்டு அதனைப் பின்பற்றி வாழும் வாழ்க்கையும் ஆன்மீகம் ஆகும் என்பது என்னுடைய தாழ்மையானக் கருத்து.

அறத்திற்குப் புறம்பான கருத்துகளைச் சொன்னதாகத் தெரியவில்லை. எனினும் கலைக்குற்றம், பொருட்குற்றம் எனக் குறை கூறும் அறிஞரே! உம் அறிவுறுத்தலுக்கு நன்றி.

பலவகையான பூக்களைத் தொடுப்பது போல, பாக்களைக் கோர்ப்பதில் என்ன பிழை நேரிடும்?
ஒன்றை வலியுறுத்த அக்கருத்தை மீண்டும் சொல்வது இயல்பே.

"சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து"
என்பதை மனதில் கொண்டே, 'அறத்தால் வருவதே இன்பம்' என்பதற்கு முழுமையான கருத்துகளைக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கிலேயே விரித்துரைத்தேன்.

சங்க காலந்தொட்டே கவிதை பல வடிவங்களைப் பெற்று வந்துள்ளது. ஒன்று மற்றொன்றிற்கு மாற்றம் பெற கவிஞர்கள் யோசிக்கவேயில்லை. அவ்வாறு பாரதி யோசித்திருந்தால் வசனக்கவிதை பிறந்திருக்காது, புதுக்கவிதையும் மலர்ந்திருக்காது. எமது கவிதையும் ஒரு வகையெனக் கொள்க!

கள்ளபிரான் said...

நீங்கள்தான் கவிஞர் என்று எனக்கு முதலில் புரியவில்லை.

நீங்கள் ஒரு தமிழாசிரியர். அப்படியிருக்க,

//குறிப்பு:குருகுலத் தென்றல் எனும் மாத இதழ் சார்பாய் நடத்தப்பட்ட 11-வது அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற படைப்பு//

கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப்போட்டியில் எப்படி கலந்து கொண்டீர்கள்?

ஒருவேளை, கல்லூரிக்காலத்தில் நடந்த செயலோ?

இருப்பின், ’என் கவிதை’ என்று எங்கேயாவது தெரிவித்திருக்கலாமே?

கள்ளபிரான் said...

தமிழாசிரியரான உங்களிடம் ஒரு இலக்கணக் கேள்வி அல்லது, என் சங்கையை தீர்ப்பிராயின் நன்றி.


என பெயர்: கள்ளபிரானா? அல்லது, கள்ளப்பிரானா?

இலக்கணப்படி எது சரி? எது தவறு?

இதை நான் ஏன் கேட்கிறேன் என்றால், இரு வலைபதிவு பேராசிரியர்களிடம் கேட்டதற்கு, இருவரும் வெவ்வேறான பதில்களைத்தந்து என்னை வியப்பில் ஆழ்த்தினர். அவர்களிடம் நான் வாதம் செய்யவில்லை.

நீங்கள் எப்படி என்று பார்ப்போம். திறங்கள் உங்கள் இலக்கணச்சுவடிகளை! தாருங்கள் விளக்கத்தை!

வால்பையன் said...

நல்லாயிருக்குங்க!

முருக.கவி said...

நன்றி, வால்பையன் அவர்களே!

முருக.கவி said...

கள்ளபிரான் அவர்களுக்கு,
என்னுடைய படைப்புகளைத் தான் எனது வலைப்பூவில் தருவேன் என்பதால் தனியே எம் கவிதை எனக் குறிப்பிடப்படவில்லை.
எரிகின்ற விளக்கு தான் தீபங்களை ஏற்ற முடியும்.
ஒரு ஆசிரியர் தன் வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டே தான் இருக்க வேண்டும். அவ்வகையில் நான் இப்பொழுது முனைவர் பட்ட ஆய்வாளராகக் கல்லூரியில் பயில்வதால் இப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன்.வெற்றியும் பெற்றேன்.

தங்கள் பெயர் யாதென தாங்களே சொல்லவேண்டும்.
கள்ளபிரான் என்றால் கபடநாடக சூத்திரதாரி எனப்பொருள்படும். கள்ளப்பிரான் என்றால் கள்ளத்தனமானவன் எனப் பொருள்படும்.

கள்ளபிரான் said...

இன்றுதான் இப்பதிவலைக்குத் திரும்பினேன்.

தங்கள் பதிவுகளை நான் முன்பு படித்திராமையால், எவர் எப்போது என்றெல்லாம் தெரிய எனக்கு வாய்ப்பில்லை. விளக்கத்திற்கு நன்றி.

அனைத்தும் பதிவாளரின் படைப்புகளென்றும், பதிவாளர் முனைவர் பட்ட ஆய்வாளராகக் கல்லூரியில் பயின்று வருகிறார் என்பதும் உவப்பான செய்திகள்.

வாழ்த்துகள். பணியும் படிப்பும் சிறக்க.

கள்ளபிரான் said...

//ஒரு ஆசிரியர் தன் வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டே தான் இருக்க வேண்டும். //

பாதி உண்மை.

அனைவரும் வாணாள் முழுவதும் படித்தல் அவர்களது மனங்களை மூடி, பூச்சியரிக்காமல் வைத்திருக்க உதவும்.

ஏன் பாதி உண்மை? அனைவருக்கும் பொதுவான ஓருண்மையை ஆசிரியப்பணியோருக்கு மட்டுமென்பது.

நான் இன்றும் - திருமழியாழ்வார் சொல்லியருளியதைப்போல -

”வாசித்தும் கேட்டும் பூசித்தும் போக்கினேன் போது!”


இப்போதும் போக்குகிறேன் போது.”

நான் ஆசிரியன் இல்லை எப்போதும்.

கள்ளபிரான் said...

//தங்கள் பெயர் யாதென தாங்களே சொல்லவேண்டும்.
கள்ளபிரான் என்றால் கபடநாடக சூத்திரதாரி எனப்பொருள்படும். கள்ளப்பிரான் என்றால் கள்ளத்தனமானவன் எனப் பொருள்படும்.//

நான் கேட்டது இலக்கண விளக்கம்.

பொருள் விளக்கம் அல்ல. அதிலும்கூட, முதல் விளக்கம் - ஒற்றுமிகாமலிருக்கும்போது - எனக்குச் சரியெனத் தோன்றவைல்லை.

இரண்டாவது சரியாகத்த்தோன்றுகிறது.

ஏன், தோன்றவில்லை..தோன்றுகிறது?

நான் தமிழாசிரியனோ, அறிஞனோ இல்லாதகாரணத்தால், என்னால் ஓங்கியுரைக்கவியலாது.

என்பெயர் விளக்கம் என்பதிவில்தான் வரும். அப்போது உங்களை அழைப்பேன் ஆங்கே.

முருக.கவி said...

நன்றி திரு.கள்ளபிரான் அவர்களே!

Post a Comment