"விடியல் விண்ணில் அல்ல! மனிதா உன்னில்"

Sunday, March 22, 2009

படைப்புகளில் பா. விஜய் ……..


ஆலம் விழுதெனவே அன்புத் தமிழ்த் தழைக்க
தோல்வி கண்டு துவளாமல் வேள்வித் தீயென வெகுண்டு
தன்னுணர்வினைத் தனக்குள்ளேத் தீப்பொறியாய்த் திகழவைத்து
சுடும்நெருப்பெனவே உறுமுணர்வினை உள்நிறுத்தி யுறம்பெற்று
கடும் உழைப்பினால் உலகம் கண்டுணரும் நிலையெய்தி
பாவினைத் தன் முதலெழுத்தாக்கி பெயரிலே வெற்றியைத் தேக்கி
நாவினில் நற்றமிழ் பொருந்த நானிலம் போற்றும் புகழ் பெற்றவன்.
பா. விஜய் என்றவுடன் பாவின் இனிமையறிய
ஆர்வமுடன் உள்ளுணர்வு ஆர்ப்பரிக்கும் பேறுபெற்றவன்
ஊர்முழுதும் தானறியும் உலகுதமிழருள் ஒருவன்
கார்முகிலாய் கவிதைமழை காட்டாறாய் கருத்துக்களை(லை)ப்
பார்முழுதும் பரப்பும் விதம் படித்திடவும் படைத்திடவும்
நாள்முழுதும் நானறிந்து நற்றமிழில் உரைத்திடவும்
தேன்முகிலாய் தானுணரும் சிறப்பான கவிதைகளை
வாய்மையென வாழ்த்துரைத்து வாழியெனப் போற்றிடுவேன் !
சமுதாயச் சரித்திரத்தில் சாமர்த்தியமாய்ச் சேர்ந்தவிதம்
அமுதெனவே அறிந்து சொல்ல ஆர்வமுடன் வந்துவிட்டேன்
இனிதான இந்நாளில் யானெடுத்த முயற்சியிலே
புதிதாக புதுமைபல பூத்திடவே வாழ்த்துங்களேன்
இறைநிலையின் திருவருளால் நிறைநிலையை அடைந்திடவே – தமிழ்த்
துறைசார்ந்த புனிதரெலாம் துணைநிற்க வேண்டுகிறேன்
அகமுணர்ந்த கருத்துகளை முகமலர எடுத்துரைப்பேன்
யுகங்கடந்தும் தமிழ்வாழ யூகித்து வாழ்த்திடுவேன்.
பா. விஜயின் படைப்புகளில்…. எனும் தலைப்பில்நல்
படைப்புகளை ஆய்ந்துசொல்ல பணிவோடு முயலுகின்றேன்.
கன்னல் மொழியெடுத்து ‘காகிதமரங்கள்’ செய்தவிதம்
இன்னும் முயன்று அழகுமரபு கவிதை ஆக்கும்திறம்
எண்ணம் உயர புதுமையினை எடுத்துச் சொன்னவிதம்
மின்னல் போன்று துடிப்புடன் சொல்லோவியம் படைத்தவிதம்
என்னென்பேன் உள்ளவண்ணம் சொல்லப்போனால்
உன்னதப் படைப்புகள் உயிர்கொண்டு வந்ததென்பேன்
சுந்தரத் தமிழினையே சுதந்திரமாய்த் தந்தவிதம் கண்டுகளிக்கின்றேன்
வந்தனம் தமிழா ! நின் தமிழினைத் தந்தனை நன்றே !
எந்தையும் தாயும் மகிழ்ந்த இத்திரு நாடு உனைக்கண்டு
விந்தை கொள்ளுமா ? வியப்பென்ன வியப்பு வித்தகக் கவியென்றால்
வித்தகக்கவியே ! நீ வெளியிட்ட புத்தகம் பலபயின்று
புத்தொளி பெற்றிட்ட எண்ணற்ற மானிடருள் யானும் ஒன்றென்பேன்
கத்தாழையாய் குளிர்ச்சி தரும் கருத்துகளை ஆய்ந்துதருவேன்
வித்தாரம் பேசுவோருக்கும் விருந்து பல படைத்திடுவேன்
தூய்மையான அறிவு துளங்கிட நற்கருத்துகளைப் படைத்து
தமிழ்த்தாயின் மேன்மை கூட்டுவேன் !
இன்னும் மென்மையாக்குவேன் யான் !!

மைதிலி ! என் தோழி


திறமை என்ற மூன்றெழுத்தில்
ஈற்றெழுத்தை முதலெழுத்தாக்கி
முதலெழுத்தைத் தொடரெழுத்தாக்கி
இடையின லகரமொடு இகரம் சேர்த்து
இறுதியிலிட்டால் அவள் பெயர் !

குணமோ தங்கம் ! மனமோ வைரம் !
கவிபாடும் குயில் ! இருகரம் பெற்ற மயில் !
இவள் சிந்துவதோ கிள்ளை மொழி
உள்ளமோ வெள்ளை வழி
இவள் இயல்பினைக் கண்ட அன்னம்
இவளே சிறந்தாளென எண்ணும் !

நூலறிவும், நுவலறிவும்
நுகர்ந்ததனால் நுவலுகின்றேன்
அகவையோ சிறிது ! ஆயின்
அவளறிவோ பெரிது!
தமிழ் கூறும் நல்லுலகில்
தன் பதிப்பை நிதம் பதிக்க
ஆதவன் போலவே வளர
ஒளி விளங்க - அகம் குளிர்ந்து
அடியேனும் வாழ்த்துகின்றேன் !

எவ்விடத்தும் எந்நிலையிலும்
உளம் நிறைந்த
உள்ளார்ந்த அன்பினையே – பரிசாய்
உவந்தளிப்பேன் ! யானும் பெற்றிடுவேன் !
விழைவிருந்தால் அன்பு
விண்ணையும் தாண்டி விளங்கட்டுமே !

நமக்கு வேண்டுவன

நோக்கம் ஒன்று வேண்டும் – அதை
நோக்கிப் போக வேண்டும் – அறிவில்
தேக்கம் ஒன்று வேண்டும் – கடமை
தேங்காதிருக்க வேண்டும் – அன்பு
பாக்கள் பாட வேண்டும் – நட்பு
பூக்கள் பூக்க வேண்டும் – தெய்வ
ஆசி கிடைக்க வேண்டும் – மனதில்
நேசம் நிலைக்க வேண்டும் !

வானம்

அந்தரத்தே விரிந்திருக்கும் அழகான கடல்
வந்தே பாய்ந்திருக்கும் வெண்மேக அலை
சந்திரனோ துடுப்பற்ற வட்டமான ஓடம்
சூரியனோ சுட்டெரிக்கும் சுதந்திர வெளிச்சம்
வந்துதித்த உடுக்கள் எலாம் உறுமீன்கள்
வானமெங்கும் இரைந்து கிடக்கும் அச்சிறுமீன்கள்
வானவூர்தி விரைந்து செல்லும் கப்பல்
ஜெட்வண்டி மேகம் மூழ்கும் கப்பல்
ராக்கெட்டோ எரிந்து செல்லும் கப்பல்
நீருக்குள்ளே நெருப்பு செல்லும் விந்தை
பாருக்குள்ளே கண்டு சொல்லும் உண்மை
வானில் மிதந்து செல்லும் சேட்டிலைட் எல்லாம்
கடலடியில் கிடைத்திருக்கும் வளமான வரமே
கடலடியிலும் விண்ணின் மேலேயும் இருபுறமும்
நீருக்குள்ளும் காற்றினுள்ளும் நீந்தத்தானே வேண்டும்
இருபுறத்தேயும் காணரும் செல்வங்கள் யாவும்
கண்டின்புறவும் கண்டுணரவும் ஆயிரமாயிரம் உண்டே !

Friday, March 20, 2009

சூரியனே !




சூரியனே !
சுட்டெரிக்கும் சுயம் நீ, சுதந்திர வெளிச்சம் நீ
ஆதிமுதல் அந்தம்வரை அத்தனைக்கும் காரணி நீ
அவதார புருஷர்களும் அடிபணியும் மூலமும் நீ
இயற்கையே ஆசான் என இயம்புகின்றார் பலரும்,
அவ்வியற்கையைப் படைத்தவன் நீ !
எவ்வுயிர்க்கும் காவலன் நீ !
பகலவனாய் நீ இருப்பதால் பகலிரவை யாமறிந்தோம்
பகட்டில்லாப் பரிதியும் நீ, பயன் கருதா பணியாளன் நீ
விருப்பு வெறுப்பின்றி வினையாற்றும் தூயோன் நீ
மொழியில்லா இலக்கியம் நீ ; மொழியாத கீதையும் நீ !
ஓயாத உழைப்பாளி, ஒளியான வழிகாட்டி
பேரண்டத்துள் உனக்கென ஓரண்டம் சமைத்தவன் நீ
தன்னேரில்லா தலைவன் நீ !
தன்மையிலோ ரோசக்காரன் !
ரோசமூட்ட கேட்பதுவோ சூடு இருக்கிறதா ? என்பதுதானே
உன்னத உக்கிரம் நீ !
உண்மையும் நீ, உயிரும் நீ, அறிவும் நீ, ஆற்றலும் நீ !
அகில உலகம் பெற்றிருக்கும் ஆகர்ஷன சக்தியும் நீ !
சாதனைகள் உனக்குச் சாதாரணம்
உழைப்புக்கு நீயே உதாரணம், - ஆம்
சுட்டெரிக்கும் சுயம் நீ ! சுதந்திர வெளிச்சம் நீ !!

“ இன்னும் ஒரு நாள்”

சில்லென்ற இதழெடுத்து மெல்லிய உடலெங்கும்
உச்சிமுதல் பாதம்வரை ஒத்தடம் இட்டுச்சென்றது
மெல்லிய பூங்காற்று !
உடலுக்குள் புத்துணர்வு ; உயிருக்குள் புத்துயிர்ப்பு :
நிலமகளும் மன மகிழ நிலவோடு கதிருதிக்க
புள்ளினம் சிறகசைக்க பூவினம் இதழ் விரிக்க
தென்றலோ மணம்பரப்ப அன்றிலென மனம் ஒன்ற
சுத்தமான காற்று, சத்தமற்ற சூழல்
பறவைகளின் பாடல், ஒளியுடன் இருள் ஊடல்
தெளிவுடன் ஒரு தேடல் !
புல்லின் நுனியிலும் மெல்லிய மணிமகுடம் சூட
வந்ததே விடியல் !
வந்தே தந்ததே இயற்கையின் மடியில்
இன்னும் ஒரு நாள் !

Tuesday, March 17, 2009

பேச்சுக் கலை

“ஆர்த்தசபை நூற்றொருவர்
ஆயிரத்து ஒன்றாம் புலவர்
வார்த்தை பதினாயிரத்து ஒருவர்

- ஒளவையார்

உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி நூறு பேரில் ஒருவருக்கு வாய்க்கும். ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராய்த் திகழ்வர். ஆனால் பேச்சாளராய் இருப்பவர் பதினாயிரம் பேரில் ஒருவரே என்பது ஒளவையின் கருத்து. ஆகவே பேசும்கலை என்பது பார்க்க எளியதாக இருப்பினும் அது ஓர் அரிய கலையே!
- நன்றி. முனைவர். உலகநாயகி பழனி அவர்கள்.

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்………”


அணுவாய்ப் பிறந்தோம் ; பலவாய்ப் பிரிந்தோம் ;
அண்டம் பலவும் அளந்தோம், கடந்தோம் ;
பல்லுயிராய்ப் பிறந்தோம் , பரிணாமம் அடைந்தோம் ;
தொல்லுலகம் முழுதும் தொடர்ந்தோம், தொடர்ந்தோம் !

இனிதாய் பல பிறவி எடுத்தும், முடித்தும்
இன்னுமோர் பிறவியை எய்துவதும் ஏனோ?
கனிவாய் நிறைவினைக் கண்ட பின்பு
முனிவினை நீங்கி முதல் நிலை பெறவே
துணிவுடன் செய்வோம் நல்வினைத் தொடர
பணிவுடன் பணிவோம் பதந்தனைத் தானே !!

‘தமிழ்ப்பா’


அன்னைத் தழிழே நீ என்பால்
கொண்டுள்ள அன்பால்
வழங்கினை ஐம்பால்

ஐம்பால் வழங்கிய அறிவால்
பொருட்ச் செறிவால்
உள விரிவால்

நும்பால் விளைந்த விழைவால்
பெரும் வியப்பால்
நுவல்வேன் யானும் ஒரு பா !!

Monday, March 16, 2009

என்னுள்ளே…….


என்னுள் சென்றே என்னை நானே எண்ணிப்பார்க்கின்றேன்!
எண்ணம் தன்னின் ஏற்றம் கண்டே என்னுள் ஆழ்கின்றேன்!
வண்ணவண்ண எண்ணங்களின் வலிமை காண்கின்றேன்!
வலிமையுடைய எண்ணங்களின் வசமே ஆகின்றேன்!

விண்ணில் மேவி விரிந்து விரிந்து வேகம் காண்கின்றேன்!
வானம், பூமி இவற்றை விஞ்சி விசாலம் ஆகின்றேன்!
எங்கும் நானே எதிலும் நானே என்னைப் பார்க்கின்றேன்!
எல்லாப் பொருளின் உள்ளும் புறமும் நானேயா கின்றேன்!

பச்சை வண்ணமதில் இச்சை கொண்டே நிதம் பரவிப் போகின்றேன்!
புவியின் மேனியைப் போர்த்திக் கிடக்கும் புல்வெளி யாகின்றேன்!
வனங்கள் எங்கும் அடர்ந்து கிடக்கும் மரங்களாகின்றேன்!
வானம் பூமி இரண்டையும் இணைக்கும் கணங்களாகின்றேன்!

உயிரினம் தோன்றிட உயர்வினைக் காட்டிட மலையாய் நிற்கின்றேன்!
உயிர்களின் தாகம் தீர்த்திட உவந்தே நீரருவியாய் வீழ்கின்றேன்!
அன்பெனும் தேனை அகத்தினில் சுமந்தே பூக்களாய் பூக்கின்றேன்!
அண்டம் எங்கும் ஆனந்தம் நிலவிட அன்பாய் உருக்கொண்டேன்!

வண்டினமாகி வையகமெங்கும் வாய்மை வாசிக்கின்றேன்!
தென்றலெனவே தேடும் உயிர்க்குள் சுவாசம் நேசிக்கின்றேன்!
கொண்டலெனவே குளிர்மலைத் தழுவி துளியாய் இறங்குகின்றேன்!
வானம் கொடுத்த காதற்ப் பரிசாய் புவியின் கரங்களில் விளங்குகின்றேன்!

சிந்தனை சிதைய சற்றே விழிகளைத் திறந்து பார்க்கின்றேன்!
வந்தது யாவும் வளப்பம் மிக்க கனவா என்கின்றேன்!
எண்ணம் மேவி என்னுள் ஆழ்ந்து இதுவரை கண்டதுபோல்
இயற்கையைப் போற்றி இனிதே வாழ எண்ணம் கொள்கின்றேன்!!